காடையாம்பட்டி: சேலம் காடையாம்பட்டி அருகே, காட்டு விலங்குகளை வேட்டையாடுவதை தட்டிக்கேட்ட ஈரோடு போலீஸ்காரரின் தந்தை வீட்டை கும்பல் சூறையாடியது. சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகேயுள்ள நடுப்பட்டி எலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (65). விவசாயி. இவரது மனைவி ராஜாத்தி. இந்த தம்பதிக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். மகன் பழனிசாமி (38), ஈரோடு மாவட்ட எஸ்பி அலுவலத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள்கள் இருவரையும் வெளியூரில் திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் ரவிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீஸ்காரர் பழனிசாமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த யுவராஜ்-சரோஜா தம்பதியின் மகளை திருமணம் செய்து வைத்தனர். இரண்டு வீட்டாரும் அதே பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். சரோஜாவின் கணவர் யுவராஜ், ஆந்திராவில் உள்ள கல்குவாரியில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் வெளியூரில் வேலை செய்து வருகிறார். இங்கு சரோஜா மற்றும் அவரது சகோதரர் ராமன் (48) ஆகியோர் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு ரவியின் வீட்டிற்கு வந்த சரோஜா மற்றும் ராமன் ஆகியோர் பத்துக்கும் மேற்பட்ட அடியாட்களை கொண்டு வந்து ரவியின் வீட்டில் உள்ள பொருட்களை சூறையாடி விட்டு இங்கு நீங்கள் குடியிருக்கக் கூடாது என கூறி சென்றதாக, ரவி தீவட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தார். ஆனால் கடந்த 10 நாட்களாக தீவட்டிப்பட்டி போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் 10 நாட்களாக தனது பொருட்களுடன் வெட்ட வெளியில் படுத்து உறங்கி வருவதாக ரவி தரப்பினர் கூறியுள்ளனர்.
இதுகுறித்து ரவி கூறுகையில், ‘ராமன் அடிக்கடி அந்த பகுதிக்கு வரும் காட்டு விலங்குகளான மான், உடும்பு, காட்டுப்பன்றி, முயல் ஆகியவைகளை நண்பருடன் சேர்ந்து வேட்டையாடி வந்தார். மேலும் வேட்டை நாய் வைத்துக் கொண்டு காட்டு விலங்குகளை பிடித்து வந்தார். இதை நான் கண்டித்தேன். இதை கேட்ட சரோஜா மற்றும் ராமன் 10க்கும் மேற்பட்டவர்களை கூட்டி வந்து எனது வீட்டை அடித்து உடைத்து உள்ளிருந்த பொருட்களை எல்லாம் எடுத்து வெளியே போட்டு இங்கு இருக்கக் கூடாது, நீ இங்கு இருந்தால் எங்களுக்கு தொந்தரவாக உள்ளது என விரட்டி தகராறில் ஈடுபட்டனர்.
இது குறித்து, கடந்த 10 நாட்களுக்கு முன்பு தீவட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காத போலீசார் என்னை வீட்டை காலி செய்துவிட்டு சென்று விடு என கூறுகின்றனர் என கண்ணீர் விட்டார். மேலும்,‘தனது மகனிடம் இதுகுறித்து சொல்லிவிட்டேன். ஆனால் மாமியார் மிரட்டுவதால் அவன் எதுவும் செய்யவில்லை. எனவே வெட்டவெளியில் தங்கியுள்ளேன் என்றார். போலீசாரின் தந்தைக்கே இதுபோன்ற சம்பவம் நடைபெற்று உள்ளது. ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதியினர் வேதனை தெரிவித்தனர். இதுகுறித்து உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வயதான தம்பதிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.