Wednesday, July 16, 2025
Home செய்திகள் வாரிசுக்கு சீட் வாங்குவதில் குறியாக இருக்கும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

வாரிசுக்கு சீட் வாங்குவதில் குறியாக இருக்கும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

by Francis

‘‘ரொம்பவே சைலன்டாக இருந்து வரும் வைத்தியானவர் தனது வாரிசை வரும் சட்டமன்ற தேர்தலில் களத்தில் இறக்கி அழகு பார்க்க முடிவு செய்து இருக்கிறாராமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘நெற்களஞ்சியம் மாவட்டத்ைத சேர்ந்த வைத்தியான மாஜி மந்திரி, தற்போது தேனிக்காரர் அணியில் இருந்து வருகிறார்.. அதுவும் இலை கட்சி குறித்து எதுவுமே வாய் திறக்காமல் ரொம்ப ‘சைலன்டாக’ இருந்து வருகிறாராம்.. அதுவும் பெரும்பாலும் தலைநகரில் இருக்கிறாராம்.. அவ்வப்போது, நெற்களஞ்சியம் மாவட்டத்திற்கு வந்து செல்கிறாராம்.. இதனால் அரசியல் உள்ளிட்ட ‘அனைத்து’ வேலைகளையும் அவரது ‘வாரிசு’ கவனித்துக் கொள்கிறாராம்.. வரும் சட்டமன்ற தேர்தலில், தனது வாரிசுக்கு எப்படியாவது சீட் வாங்கி விட வேண்டும் என்பதில், வைத்தியானவர் குறிக்கோளாக இருக்கிறாராம்.. இதற்காக திரைமறைவில் ‘சில வேலைகளை’யும் செய்துக்கிட்டு வர்றாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘காலாவதி பொருட்களை தொகுதிவாசிகளிடம் கொடுத்ததால் தோல்வி பீதியில் இருக்கிறாராமே பிரதிநிதி ஒருவர் தெரியுமா..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘புதுவகையான அரசியலுக்கு பெயர்போன புதுச்சேரியில் தேர்தல் நெருங்கி வருவதால் மக்கள் மீதான கரிசனமும் அரசியல் பிரபலங்களுக்கு அதிகமாகி உள்ளதாம்.. தொகுதி வாரியாக தங்களது சொந்த செலவிலும் பல்வேறு உதவிகளை தாராளமாக வாரி வழங்கி வர்றாங்களாம்.. சமீபத்தில் கரை பெயர் கொண்ட தொகுதியில் சுயேச்சையான சங்கரன் ஆனவர் வீடுவீடாக மளிகை சாமான்களை வழங்கினாராம்.. அதை பெற்றுக் கொண்ட தொகுதிவாசிகளில் விவரம் அறிந்தவர்கள், பொருட்களின் தரம் மற்றும் பயன்பாடு தேதிகள் குறித்து படித்து பார்த்தபோது அவற்றில் பெரும்பாலானவை காலாவதியானவை என தெரிய வரவே அதிர்ச்சியில் உறைந்து போனார்களாம்.. மக்களை பாதுகாக்க வேண்டிய பிரதிநிதியே இப்படி காலாவதி பொருளை வழங்கினால் எப்படி என்ற சர்ச்சை தொகுதியில் பரவலாக நல்லது செய்யபோய் இப்படி வினையாகி விட்டதே என்று சுயேச்சை தரப்பு புலம்பி வருகிறார்களாம்.. இதுதொடர்பாக ஒருபுறம் புட்செல்லுக்கு புகார் பறக்க, மறுபுறமோ இவர் உதவி செய்யா விட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும் என்ற விமர்சனங்களும் எழவே தோல்வி பீதியில் சங்கரன் உலாவுகிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தன்னை கைதூக்கி விட்டவரின் நூற்றாண்டு கொண்டாடட்டத்திற்கு கூட போகாமல் இலைக்கட்சி தலைவர் புறக்கணிச்சிட்டாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘இலைக்கட்சி தலைவரு அவ்வப்போது, தான் அடிமட்டத்திலிருந்து மேலே வந்தவன் என அடிக்கடி மார்தட்டுவாராம்.. ஆனால் இவரை கை தூக்கிவிட்டவரு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த எம்.பி.எஸ். என்பவராம்.. அக்கட்சியில் எல்.எல்.ஏ, எம்எல்.சி உள்ளிட்ட பதவிகளில் இருந்த அவர், 1988ம் ஆண்டு ஐந்து எம்எல்ஏக்களோடு இலைக்கட்சியில் சேர்ந்துட்டாராம்.. அப்போது ஜெ-ஜா என உடைந்த நேரத்தில் ஜெ.அணிக்கு சேவல் சின்னம் கிடைத்ததாம்.. அப்போது ஜெ.அணியில் போட்டியிட இவர் பரிந்துரை செய்தவர்களில் இலைக்கட்சியின் தற்போதைய தலைவராக இருக்கும் சேலத்துக்காரரும் ஒருவராம்.. அதன்பிறகுதான் இலைக்கட்சி மம்மியிடம் செல்வாக்கு அதிகரித்ததாம்.. நான் அப்போதே சேவல் சின்னத்தில் நின்று ஜெயித்தவன் என தேனிக்காரருக்கு சவால் விடுவாராம்.. தற்போது அவரது வளர்ச்சி அண்ணார்ந்து பார்க்கும் வகையில் இருக்குதாம்.. ஆனால் அடையாளம் காட்டியவரின் நூற்றாண்டு விழாவுக்கு அழைத்தும் போகாம இலைக்கட்சி தலைவர் புறக்கணித்து விட்டதாக கதர் கட்சிக்காரங்க சொல்றாங்க.. எம்.பி.எஸ்.சின் சொந்த ஊரு வாழப்பாடியாம்..

கடந்த மார்ச் மாதம் நூற்றாண்டு வந்துச்சாம்.. இலைக்கட்சி தலைவரை வரவழைச்சாங்களாம்.. அப்போது சட்டசபை இருப்பதால வரமுடியலன்னு சொல்லி தட்டிக்கழித்தாக கட்சிக்காரங்க சொல்றாங்க.. ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பது இலைக்கட்சி தலைவருக்கு கைவந்த கலை என்பது எல்லோருக்கும் தெரியுமுன்னு கட்சிக்காரங்க சொல்றாங்க.. என்றாலும் அந்த கதர்சட்டைக்காரரின் நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு இலைக்கட்சி தலைவரை வரவழைப்பேன்னு அவரது உறவுகள் சொல்றாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘எந்த நேரத்திலும் அதிரடி ஆக்‌ஷன் இருக்கலாம் என்பதால் வசூல் வேட்டையாடிய ஒரு பதிவுத்துறை அலுவலக ஊழியர்கள் கலக்கத்தில் இருக்காங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மெடல் மாவட்டத்தில் உள்ள கோட்டை என முடியும் பகுதியில் உள்ள பதிவு அலுவலகம் எப்போதும் பிசியாக இருக்குமாம்.. இங்குள்ள ஊழியர்கள் பலர், பல ஆண்டுகளாக இங்கேயே உள்ளார்களாம்..

மாவட்டத்திலேயே இங்குதான் கலெக்ஷனும் அதிகமாம்.. ஒவ்வொரு விதமான பதிவிற்கும் ஒவ்வொருவிதமான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, வசூலிக்கப்படுகிறதாம்.. அதேபோல, ஒவ்வொரு வசூலுக்கும், ஒவ்வொரு தொகைக்கும் ஏற்ப சங்கேத வார்த்தைகளும், ரகசிய குறியீடும் வைத்து பணத்தை கணக்கிடுகிறார்களாம்.. மாவட்டத்திலேயே அதிகளவு தனி வருமானம் இங்குதான் கிடைக்கிறதாம்.. இதனால் இந்த ஊருக்கு வந்து பணியாற்ற பலரும் அடிதடி போட்டு போட்டிப் போடுகிறார்களாம்.. தமிழகம் முழுவதும் இருந்து இங்கு பணிமாறுதல் கேட்கிற அளவுக்கு நிலைமை இருப்பது தற்போது, துறையின் மேலதிகாரிகள் கவனத்துக்கு போயிருப்பதால், எந்த நேரத்திலும் அதிரடி ஆக்‌ஷன் இருக்கும் என்கிறார்கள்.. இதனால், வசூல் வேட்டையாடி கொண்டிருந்த ஊழியர்கள் பலர் கதிகலக்கத்துக்கு ஆளாகி இருக்கிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi