‘‘சொந்தக்காரர் ஆதிக்கம் அல்லோகல்லோலப்படுதுன்னு கட்சிக்காரங்க சொல்றாங்களே..உண்மைதானா..’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘சேலத்துக்காரரின் சொந்த மாவட்டத்திலுள்ள கிரி தொகுதியில் மைத்துனரின் ஆதிக்கம் நாளுக்குநாள் ஓவராகி கிட்டே போகுதாம். கட்சியே எங்களதுதான் என்று கூறி, மூத்த ரத்தத்தின் ரத்தங்களை அவர் ஓரம் கட்டுறாராம். இந்தவகையில் தொகுதி எம்எல்ஏவை டம்மியாக்கி வச்சிருக்காராம். இங்கு எல்லாமே மைத்துனர் கை காட்டியபடிதான் நடக்குதாம். எம்எல்ஏவை கட்சியினர் யாரும் தொடர்புகொள்ள வேண்டாம் என்று ரகசியமாக வாய்மொழி உத்தரவு வேறு வந்திருக்காம். ஓட்டு வாங்கி ஜெயித்த தோரணையில் எம்எல்ஏ, தனிஆவர்த்தனம் நடத்த ஆரம்பிச்சாராம். இதனால் கடுப்பான மைத்துனர், முதலில் எம்எல்ஏ வசமிருந்த மேற்கு ஒன்றிய செயலாளர் பதவியை பறிச்சிட்டாராம். இதனால் கடந்த ஆறுமாசமாக, எம்எல்ஏ பழைய சுறுசுறுப்பு இல்லாமல் ஓய்ஞ்சு நிக்குறாராம். அவரது ஆதரவாளர்கள் என்று சிலரை பட்டியல் எடுத்து, அவர்களையும் ஓரம் கட்டி வச்சிருக்காராம். அதற்கு பதில், தனது அடிப்பொடிகள் சிலருக்கு கட்சி பொறுப்புகள் வழங்கி இருக்கிறாராம் மைத்துனர். இதனால் அதிருப்தியில் இருக்கும் மூத்த நிர்வாகிகள், கட்சி கூட்டங்களுக்கு செல்லாமல் முடிந்தவரை தவிர்த்து விடுகிறார்களாம்.
டிஸ்ட்ரிக் பூராவும் பூத் கமிட்டி போட்டும், இந்த தொகுதியில் மட்டும் எதுவும் நடக்கலையாம். இதற்கு பொறுப்பாளரான மாஜி எம்எல்ஏவும், மைத்துனரின் தலையீட்டால் ஏற்பட்டுள்ள அதிருப்தியை கண்டு மிரண்டுபோயிட்டாராம். இந்த அதிருப்தி, எதிர்வரும் தேர்தலில் பயங்கரமாக எதிரொலிக்கும் என்கின்றனர் பொறுப்பில் இருக்கும் உள்ளூர் ரத்தத்தின் ரத்தங்கள்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மாஜி அமைச்சருக்கு விரக்தி ஏனாம்..’’ என கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடலோர மாவட்டத்தில் மணியானவர் கை ஓங்கி வருகிறது. இதனால் தேனிக்காரர் அணியில் இருந்து விலகி சேலத்துக்காரர் அணியில் சேர்ந்த மாஜி அமைச்சர் விரக்தி அடைந்துள்ளார். வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட நாகப்பட்டினம் தொகுதியில் வாய்ப்பு கிடைக்குமா அல்லது மணியானவர் ஆதரவாளர்களுக்கு தான் சீட்டு கிடைக்குமா என மாஜி தனக்கு விசுவாசமாக இருக்கும் காவல்துறை வட்டாரத்தில் விசாரணை செய்ய தொடங்கியுள்ளாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அதிகாரிகள் கெடுபிடியால் டிரைவர், கண்டக்டர்கள் தவிக்கிறார்களாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கடைக்கோடி மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகத்தில் அதிகாரிகள் கெடுபிடியால் டிரைவர், கண்டக்டர்கள் சிலர் புலம்புகின்ற நிலை உள்ளதாம். அண்மையில் திருச்செந்தூருக்கு பஸ் இயக்கிய டிரைவர் ஒருவர் வழியில் வழக்கமாக உணவு உண்ண நிறுத்தும் ஓட்டல் பகுதியில் பஸ்சை நிறுத்தினாராம். கடந்த பல ஆண்டுகளாக இந்த இடத்தில் தான் பஸ்சை நிறுத்துவது வழக்கமாம். ஆனால் இப்போது திடீரென்று சுத்தமில்லாமல் இருந்த உணவகத்தில் பேருந்தை நிறுத்தியதாக டிரைவருக்கு மெமோ வழங்கப்பட்டுள்ளதாம். இது ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம். போக்குவரத்து கழக அதிகாரிகள் எதற்காக இவ்வாறு செய்கிறார்கள் என்று புரியாமல் தவிக்கிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கட்சி தாவும் படலங்கள் அடுத்தடுத்து நடக்க உள்ளதாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘குட்டி பிரான்ஸ் என்றழைக்கப்படும் யூனியன் பகுதியில் தேர்தல் ஜுரம் இப்போதே தொடங்கி விட்டதாம். இருக்கையை பிடிக்க கட்சி தாவும் படலங்கள் அடுத்தடுத்து அரங்கேற உள்ளதாம். இதற்கான திரைமறைவு பேச்சு வார்த்தைகள் ரகசியமாக நடந்துக்கிட்டு இருக்கிறதாம். கடந்த தேர்தலில் இடம் மாறிய சிவன் பெயரை கொண்ட அமைச்சரானவர் மீண்டும் அதே தொகுதியில் களமிறங்குவதில் உறுதியாகி விட்டாராம். வீட்டையே அங்கு இடமாற்றி விட்டதால் புல்லட்சாமி கட்சியில் அங்கு சீட்டு கேட்டு கடந்தமுறை கடைசி நேரத்தில் கழற்றி விடப்பட்ட செல்வமானவர், மீண்டும் சீட் கேட்டு வருகிறாராம். கடந்த முறை சாமியின் காரை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் தற்போது அமைச்சரானவரும் பயத்தில் உள்ளாராம். அதற்கு, தான் நின்று சந்தித்த எம்பி தேர்தல் முடிவும் ஒரு காரணமாம்.
இந்த முறை சீட் கிடைக்காவிடில் செல்வமானவர் கட்சி தாவும் முடிவில் இருப்பதாகவும் ஆதரவாளர்கள் பேசி வருகிறார்களாம். இந்த முறை அமைச்சருக்கு எதிராக தீவிரமாக செயல்படும் முடிவில் செல்வம் இருப்பதால் தேர்தல் விளையாட்டுகளும் அரங்கேறி விட்டதாம். இதனால் கடந்த முறை இங்கு மயிரிழையில் வாய்ப்பை இழந்த சூர்யகுமார் ஜொலிக்கும் வாய்ப்பும் பிரகாசமாகி வருகிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘குழம்பிக்கிடக்கிற கட்சிக்குள்ள தூண்டில் வீசி மீன் பிடிக்க பார்க்குதாமே நடிகர் கட்சி..’’ என்றார் பீட்டர் மாமா. ‘கண்ணா நீயும் நானுமா?’ என்று தந்தையும், மகனும் எதிரும் புதிருமாக வலம் வரும் பழம் கட்சிக்குள்ள நிலவுற குழப்பம், அக்கட்சியில இருக்குற அடிமட்ட நிர்வாகிகள் மத்தியில் ஒருவித விரக்தியை ஏற்படுத்தியிருக்குதாம். அந்த குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முடியுமான்னு ஒரு நடிகர் கட்சி தூண்டில் வீசி வருதாம்.
அந்த தூண்டில தன்னோட உள்ளூர் நிர்வாகிகள் கையில் கொடுத்து, பூத் கமிட்டிக்கு பழம் கட்சி இளசுகளை சேர்க்க அசைமென்ட் கொடுத்திருக்காங்களாம். அதாவது வெயிலூர் மாவட்டத்துல அணையான தொகுதி, குயின்பேட்டை மாவட்டத்துல மலை கோயில் இருக்குற தொகுதி, கோணம் பாதியான தொகுதின்னு உள்ளூர் பழம் கட்சி இளசுகளை வளைக்குற பணி ஜரூராக நடந்து வருதாம். இதை அறிந்த அக்கட்சியின் மூத்த உள்ளூர் நிர்வாகிகள், என்னடா இது நம்ம கட்சிக்கு வந்த சோதனை? தந்தையும், தனயனும் எப்போதான் ஒன்று சேர்ந்து, இந்த குழப்பத்துக்கு முடிவு வரும்னு புலம்பி வர்றாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.