‘‘சமாளிப்பு பேட்டி கொடுத்தாராமே சேலம்காரர்..’’ என கேட்டு சிரித்தார் பீட்டர் மாமா.
‘‘தூங்கா நகருக்கு நேற்று வந்த இலைக்கட்சியின் சேலத்துக்காரர், காலையிலேயே கட்டாயம் ‘சூடான’ பேட்டி கொடுப்பதாக தகவல் பரவியதால், பத்திரிகையாளர்கள் விமானநிலையத்தில் ஆர்வமாக குழுமி இருந்தார்கள். முதல்நாளில் உதயமானவரைக் கொண்டு தாமரைக்கட்சியின் மலையானவர் துரோகி என்றதற்கு பதிலடி கொடுத்திருந்த நிலையில், அதைப்பற்றித்தான் சேலத்துக்காரர் பேசும் எதிர்பார்ப்பிருந்தது. கடற்கரையோர மாவட்ட கட்சி நிர்வாகியின் இல்ல விழாவை முடித்து திரும்பும்போது பேட்டி தரலாம் என்ற கட்சியினரின் ஐடியாவால், சேலத்துக்காரரும் காலையில் தவிர்த்த பேட்டியை மாலையில் கொடுத்தார். ‘பாராளுமன்ற தேர்தலில் கட்சி படுத்து விட்டதால் இடைத்தேர்லில் போட்டியிடவில்லையா’ என்ற கருத்தில் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்க, ‘ஆளுங்கட்சி.. பணமழை, பரிசுமழை பொழிவார்கள்..’ என்ற பொருத்தமற்ற காரணத்தைக் கூறியவர், தொடர்ந்து கட்சித்தலைமையே அவராக இருக்கும்போது, எங்கோ ஒரு தலைமையின் முடிவைப்போல, ‘கட்சித்தலைமை எடுத்த முடிவால் தேர்தலை புறக்கணித்தோம்’ என்றவரிடம், ‘அப்படியென்றால் இந்த தேர்தலில் அதிமுக தொண்டர்கள் ஓட்டு போடமாட்டார்களா?’ என்றதற்கு, ‘கட்டாயப்படுத்துவது, ஓட்டுப் போட வேண்டாம் எனச் சொல்வது தவறு’ எனக்கூறி சமாளித்தார். ‘தோற்றுப்போகும் உறுதியில்தான் போட்டியே போடல, இதுல எதுக்கு இத்தனை சமாளிப்பு’ என்று கட்சிக்காரர்களே காதுபட பேசிச் சென்றனர்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இடைதேர்தல் பிரசாரத்தில் வலிய வந்து வம்பில் சிக்கினாராமே பெண் வேட்பாளர்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இடைதேர்தல் பிரசாரத்தில் வலிய வந்து வம்பில் சிக்கிய பெண் வேட்பாளரை கிராமமக்கள் விரட்டியடித்தார்களாம்.
இடைதேர்தல் நடக்கும் தொகுதியில் மைக் சின்னத்தில் களமிறங்கிய பெண் வேட்பாளர் கிராமம், கிராமமாக சென்று வாக்கு சேகரித்து வருகிறாராம். பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் போதிய கூட்டமும், வரவேற்பும் இல்லாததால் கடும் அப்செட்டில் இருக்கிறாராம். இதனிடையே தனது நிர்வாகிகளுடன் பிரசாரத்திற்கு செல்லும் வழியில் ஆளுங்கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த பிரசார கூட்டத்திற்கு திரளான பெண்கள் திரண்டிருந்தார்களாம். அவர்களை பார்த்ததும் மைக் சின்ன வேட்பாளரோ வண்டியை நிறுத்தப்பா, நல்ல கூட்டமாக இருக்கு, நாலு வார்த்தை பேசிட்டு போலாமென்னு சொல்ல, டிரைவரும் வண்டியை நிறுத்தினாராம். ஆனா நிர்வாகிகளோ நமக்கு தேர்தல் ஆணையம் இந்த பாயிண்ட் பிரசாரத்திற்கு ஒதுக்கவில்லை. தேவையில்லாம பிரச்னையாகிட போகுது என்று கூறினார்களாம்.
ஆனால் பெண் வேட்பாளரோ கூட்டத்தில் நாலு வார்த்தை ரோட்டிலிருந்தபடியே பேசிடலாம் என்று மைக் பிடித்தாராம். கடைசியில் ஆளும்கட்சியையும், ஆட்சியாளர்களையும் ஒருமையில் பேச அங்கிருந்த கிராமமக்களே ஆவேசமடைந்து கையை காண்பித்து புறப்படச் சொன்னார்களாம். ஆனால் பெண் வேட்பாளரோ விடாமல் பேச கடைசியில் பெண் வேட்பாளர் பிரசாராம் மோதலில் முடிந்ததாம். பின்னர் பொதுமக்களும், போலீசாரும் சேர்ந்து அந்த பெண் வேட்பாளரை அங்கிருந்து அனுப்பி வைத்தார்களாம். பிரசாரத்திற்கு சென்ற இடத்தில் வலிய வந்து பிரச்னையில் சிக்கிய பெண் வேட்பாளரின் மோதல் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலை கட்சி கூட்டணி கனவுல மண்ணை அள்ளி போடுறாரேனு புலம்புறாங்களாமே தாமரை தலைவர்கள்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சி தலைவருக்கும், தாமரை கட்சி பிரதர் மவுண்டன் தலைவருக்கும் இடையே வார்த்தை போர் முற்றி வருவதால், தாமரை கட்சியின் இரண்டாம் கட்ட தலைவருங்க கலங்கி போயிருக்காங்களாம். இந்த எம்பி தேர்தலில்தான் கூட்டணி இல்லாம போயி, எல்லா தொகுதியையும் பறிகொடுத்தோம். அடுத்து வரும் எம்எல்ஏ தேர்தலில் எப்படியாவது இலையை சமாதானப்படுத்தினால்தான், இப்ப இருக்கிற 4 எம்எல்ஏ என்பதை அதிகரிக்க இயலும். ஆனா அதுலயும் நம்ம தலைவரு மண்ணை அள்ளி போட்டுட்டு வர்றாரேன்னு இரண்டாம் கட்ட தலைவர்களும், அந்தந்த மாவட்ட நிர்வாகிகளும் புலம்பித் தள்ளுறாங்களாம்.
கடந்த 3 ஆண்டுகளில் கட்சி மாறி தாமரைக்கு வந்த மாங்கனி மற்றும் முட்டை மாவட்ட மூத்த நிர்வாகிகள், அடுத்த தேர்தலில் இலையோட கூட்டணி வைச்சு எம்எல்ஏ ஆகிறலாமுனு கனவு கண்டாங்களாம். அதெல்லாம் நடக்காம போயிருமேனு தற்போது மாவட்ட நிர்வாகிகளிடம் புலம்பி வர்றாங்களாம். தமிழ்நாட்ல இலை கூட்டணி இல்லாம நாம கரை சேர மாட்டோம், அது தெரிந்தும் ஏன் இப்படி நம்ம தலைவரு பேசிட்டு வர்றாருனு தீவிர டிஸ்கஷனிலும் இறங்கியிருக்காங்களாம். 6 மாதம் வெளிநாட்டில் இருக்கும்போது, இங்கிருக்கும் மூத்த தலைவர்கள் இலையோடு ஒட்டிக்கொள்ளக்கூடாதுனு இப்படி ஒரு வேலையை தலைவரு செய்றாரோனு தோணுது என்று பலரும் பேசிக்கிறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘நிலஅபகரிப்பு மோசடியில் தப்பி ஓடிய மாஜிக்கு நெருக்குதல் அதிகரிக்குதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வழக்கில் சிக்கி தலைமறைவாக உள்ள டெக்ஸ்டைல் மாவட்டத்தை சேர்ந்த இலை கட்சியின் முன்னாள் அமைச்சரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இலைக் கட்சியின் மாஜி அமைச்சரான அவர் இலைக் கட்சியினரையே நம்புவது கிடையாதாம். முக்கியமாக டெக்ஸ்டைல் மாவட்டத்தில் உள்ள இலை கட்சியினரும் மாஜி அமைச்சர் மீது அதிருப்தியில் இருந்து வருகிறார்களாம்.
இலைக் கட்சியினரைத் தாண்டி முக்கிய நபர் ஒருவருடன் இலை கட்சியின் மாஜி அமைச்சர் தொடர்பிலிருந்து வருகிறாராம். அவர் கொடுத்த ஆலோசனையின் பெயரில் தான் இலை கட்சியின் மாஜி அமைச்சர் பதுங்கியுள்ளாராம். தற்போது டெக்ஸ்டைல் மாவட்டத்தில் இலை கட்சியினர் இடையே இந்த டாப்பிக் தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.