Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

தைலாபுரத்திற்கு செல்லாமல் மூத்த கண்மணிகள் ஆப்சென்ட் ஆனது பற்றி சொல்கிறார்; wiki யானந்தா

‘‘பால்கோவாவிற்கு பெயர்போன தொகுதி எம்எல்ஏவின் பாராமுகம் காரணமாக இலைக்கட்சிக்காரங்க மீண்டும் அவர் சீட்டு வாங்குவதை தடுத்தே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்காங்களாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘மெடல் மாவட்டத்தில் பால்கோவாவிற்கு பெயர் போன தொகுதியில் இலைக்கட்சியைச் சேர்ந்த மான் பெயரை முன்பாதியாக கொண்டவர் எம்எல்ஏவாக உள்ளார். கடந்த 2021 தேர்தலில் அவர் ேபாட்டியிட்டபோது, கட்சியினர் முழுமையாக அவருக்காக வேலை பார்த்தாங்களாம்.. ஆனால், ‘சமஉ’ ஆனதும் அவர், தன்னையே மறந்ததோடு மட்டுமின்றி தனக்காக செலவழித்து வேலை பார்த்தவர்களையும் மறந்து விட்டாராம்.. இதனால் இலைக்கட்சியினர் யாரும் தற்போது இவரை கண்டுகொள்வதே இல்லையாம்.. இப்படி ஒருவர் ‘சமஉ’ ஆக இருக்கிறாரா என்பதே தெரியாத அளவிற்கு தனிமைப்பட்டு விட்டாராம்.. இதனால், இவரது ஆதரவாளர்கள் அனைவரும் இவருக்கு மாஜி ‘சமஉ’ ஆக இருந்த பெண்ணின் கணவர் ஆதரவாளர்களாக மாறி விட்டனர். மேலும், இவர் மீண்டும் சீட் வாங்குவதை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்பதில் தொகுதியைச் சேர்ந்த இலைத்தரப்பு மட்டுமின்றி, மாவட்டம் முழுவதும் உள்ள இலைத்தரப்பும் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்காங்களாம்.. அந்தளவிற்கு மான் பெயரைக் கொண்டவரின் செயல்பாடுகள் மோசமாக இருக்கிறதா சொந்தக்கட்சியினரே புலம்பித் தவிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மலராத கட்சியுடன் கூட்டணியால் கொந்தளித்த கடைகோடி மாவட்ட இலைக்கட்சி நிர்வாகிகள் மா.செ.விடம் சென்று கேள்வி மேல் கேள்வி எழுப்பினாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடைகோடி மாவட்டத்தில் இலைகட்சியை சேர்ந்த கடலோர பகுதியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் அதன் மா.செ.வை அண்மையில் சந்தித்தார்களாம்.. மலராத கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பது தங்களுக்கு கடும் அதிர்ச்சி அளிப்பதாகவும், இதனால் கடைகோடி மாவட்டத்தில் எப்படி தொகுதிகளை பெற முடியும், எப்படி கடலோர மக்களின் வாக்குகளை பெற முடியும் என்று கேள்வி எழுப்பினார்களாம்.. அதற்கு மா.செ தரப்பில் பொறுத்திருங்கள், கூட்டணியில் மாற்றம் வரலாம்.. புது கட்சி தொடங்கிய நடிகர், இலை கட்சியுடன் இணைந்தால் மலராத கட்சியை கழற்றி விட்டுவிடலாம் என்ற திட்டம் இருக்கு.. எனவே இப்போதைக்கு எந்த முடிவுக்கும் வர வேண்டாம் என்று சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்களாம்.. இதனால் கடைகோடி மாவட்டத்தில் கடலோர பகுதியை சேர்ந்த இலை கட்சியினர் மனதை ஆசுவாசப்படுத்திக் கொண்டு திரும்பினாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தைலாபுரத்துக்கு செல்லாமல் மூத்த கண்மணிகள் ஆப்சென்ட் ஆனதும், நிறுவனர் சென்னைக்கு விசிட் அடித்து பரபரப்பை ஏற்படுத்தி விட்டாரே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மாங்கனி கட்சியில் மேலும் மேலும் பிரச்னை பூதாகரமான நிலையில், சமரச பணிகளை தொடர்ந்து முன்னெடுத்த மூத்த கண்மணிகள் கடும் அப்செட் ஆகி விட்டார்களாம்.. தந்தை- மகன் இடையிலான நீயா, நானா போட்டியில் தாங்கள் இரையாகி விடுவோமோ என்ற அச்சம் எழ, இதற்கு ஒரே தீர்வு ஆஸ்பிட்டல்தான் என்ற முடிவுக்கு வந்து விட்டார்களாம்.. தைலாபுரம் வந்தால் பனையூர் பதைபதைக்கிறது, பனையூர் சென்றால் தோட்டத்தில் புயல் வீசுகிறது. இதனால் ஆளை விட்டால் போதுமடா சாமி என்ற மனவேதனையில் இருந்தவர்கள் பிபி எகிறி விட்டதாக கூறி சிகிச்சை என்ற பெயரில் ஆஸ்பிட்டலில் தஞ்சமடைந்து விட்டாங்களாம்..

மூத்த கண்மணிகள் உடன் இல்லாததாலே வழக்கமான வியாழன் செய்தியாளர் சந்திப்பை கடைசியாக தள்ளி வைத்தாராம் நிறுவனர். கண்மணிகள் ஆப்சென்ட் ஆனதற்கான காரணம் அறிய, மகள் வீட்டிற்கு பயணம் எனும் பெயரில் சென்னைக்கு உடனே விசிட் அடித்தாராம்.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதில் கைதேர்ந்தவர்தான் எங்கள் தாஸ் என்ற பேச்சு தோட்டத்து வட்டாரத்தில் உலாவுகிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.‘‘கொஞ்சம் கொஞ்சமா நம்பிக்கை போனதால நிழலானவரின் பரிந்துரையை திடீரென தூக்கிப்போட்டு விட்டாராமே இலைக்கட்சி தலைவர்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.‘‘இலைக்கட்சி தலைவர் ஊரில் கட்சியை வழிநடத்த ரெண்டு பொறுப்பாளர்கள் இருந்தார்களாம்.. இவர்களுக்குள் இருக்கும் மோதலால் எப்படியும் செயலாளர் பொறுப்பை பெற்றுவிட வேண்டும் என்பதில் நாலுக்கும் மேற்பட்டோர் அதிதீவிர முயற்சியில் இறங்கியிருக்காங்க.. இதற்காக மாநகரில் உள்ள மாஜி ஒருவர், புறநகருக்கு அடிக்கடி சென்றிருக்காரு..

இலைக்கட்சி தலைவரின் நிழலானவரை சந்திப்பதும் வருவதுமாக இருந்திருக்காரு.. அதோடு திருப்பதி சென்று தரிசனம் செய்து வரும்வரை அனைத்து ஏற்பாடுகளையும் கனகச்சிதமாக செஞ்சி கொடுப்பதாக கட்சிக்காரங்க சொல்றாங்க.. நிழலானவரும் இலைக்கட்சி தலைவரிடம் பேசி வாங்கித் தருவதாக உறுதி சொன்னதாகவும் சொல்றாங்க.. இதன் காரணமாகவே இன்னும் மூணு மாசத்துல மா.செ. ஆகிடுவேன், பொதுச்செயலாளருதான் கொஞ்சம் பொறுமையாக இருன்னு சொல்லியிருக்காரு என சொல்லிக்கிட்டே இருந்தாராம் அந்த மாஜி. அதோட மேற்கு தொகுதியில் நான் தான் போட்டியிடுவேன் எனவும் உறுதியாக சொன்னாராம்.. ஆனால் எல்லாமே பொய்யாகும் வகையில் நிழலானவரின் பரிந்துரையை தூக்கி எறிந்துவிட்டு, பொறுப்பாளரில் ஒருவரை மா.செ. ஆக்கிட்டாராம்..

அதே நேரத்தில் இன்னொரு தகவலையும் இலைக்கட்சிக்காரங்க சொல்றாங்க.. இலைக்கட்சி தலைவருக்கு அந்த மாஜி மீதிருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக போயிட்டதாம்.. ஏனென்றால் ஆட்சியில் இருக்கும்போது பல்வேறு வழிகளில் வந்த வருவாய் எல்லாமே இலைக்கட்சி தலைவருக்கு தெரியாமல் மறைச்சிட்டாராம்.. அந்த தகவல் தற்போது தான் தெரிய வந்துச்சாம்.. அதே நேரத்தில் புதிய மா.செ.வால் சுதந்திரமாக செயல்பட முடியாது எனவும் சொன்னதை மட்டுமே செய்வார் என்பதால் அவருக்கு இந்த பொறுப்பு கிடைச்சதாகவும் கட்சிக்காரங்க பேசுறாங்க..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.