‘‘புரோக்கர் உதவியுடன் கரன்சி குவிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறாராமே மான்செஸ்டர் மாநகராட்சி பெண் அதிகாரி ஒருத்தர்..’’ என்றவாறே வந்தார் பீட்டர் மாமா.‘‘மான்செஸ்டர் மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் நகரமைப்பு பிரிவில் கடந்த ஒன்பது மாத காலமாக பல்வேறு சர்ச்சைகள் நிலவுதாம்.. இங்குள்ள பெண் உதவி நகரமைப்பு அலுவலர், சமீப காலமாக கரன்சி குவிப்பதில் வல்லவராக செயல்படுகிறாராம்..
இவருக்கு உறுதுணையாக அங்கீகாரமற்ற லைசென்ஸ் பில்டிங் சர்வேயர் ஒருவர் செயல்படுகிறாராம்.. ஆறு எழுத்து பெயர் கொண்ட இவர், நகரமைப்பு பிரிவு தொடர்பான பைல்களை ஆய்வுசெய்து, பல லட்சங்களை வசூலித்து, இந்த பெண் அதிகாரி வசம் ஒப்படைக்கிறாராம்.. அவரும், தனது சேவைக்காக கமிஷன் பெற்றுக்கொள்கிறாராம்.. இப்படி, இருவரும் சத்தம் இல்லாமல் கரன்சி குவித்து வருகின்றனராம்.. இதே மண்டலத்தில், ஏற்கனவே நகரமைப்பு பிரிவில் உயரதிகாரியின் கையெழுத்தை போலியாக போட்டு பணம் சுருட்டியதாக ஒரு பெண் ஊழியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். தற்போது மீண்டும் இதே மண்டலத்தில் கரன்சி குவிப்பு ஜரூராக நடக்கிட்டு இருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கிராமப்புற நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு இரவில் தாமதமாக திரும்பியபோது விபத்தில் புல்லட்சாமியின் கார் சிக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘யூனியன் பகுதியான புதுச்சேரியின் முதன்மை அமைச்சரான புல்லட்சாமி எளிமைக்கு பெயர்போனவர். இவரோ, உள்ளூர்வாசிகளின் எல்லா நிகழ்வுகளிலும் கலந்துகொள்வது வழக்கம்.. இதற்காக அவருக்கு மக்களிடமும் நல்ல மதிப்பும் இருக்கு.. சமீபத்தில் கிராமப்புறம் ஒன்றில் நடந்த விழாவுக்கு புல்லட்சாமி காரில் சென்றாராம்..
பின்னர் இரவில் காலதாமதமாக விழுப்புரம்- புதுச்சேரி சர்வீஸ் ரோட்டில் அவர் பயணித்தபோது வேகமாக வந்த பைக் புல்லட்சாமி கார் மீது மோதிவிட்டதாம்.. இதில் காருக்கு லேசான சேதம் ஏற்பட அதை அப்படியே சர்வீஸ் சென்டருக்கு அனுப்பிய புல்லட்சாமி, வேறொரு காரை வரவழைத்து வீடு திரும்பினாராம்.. இந்த விவகாரம் அரசல் புரசலாக புல்லட்சாமிக்கான பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக புதுச்சேரியில் சர்ச்சையை கிளப்பி இருக்காம்.. தலைவர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஒரு முதன்மை அமைச்சருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை காக்கிகள் கொடுக்க வேண்டுமென்பதுகூட தெரியாதா என்ற கேள்வி எழுந்திருக்காம்.. இதுபற்றிதான் புதுச்சேரியில் பரவலாக பேச்சு..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘நாளுக்குநாள் நெரிசலில் சிக்கும் மாங்கனி போக்குவரத்தில் ஒரு நாளைக்கு இவ்வளவு என கல்லா கட்டுறாங்களாமே காக்கி அதிகாரிங்க..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மாங்கனி மாநகரம் நாளுக்கு நாள் மக்கள் தொகை, விரிவாக்கம் மற்றும் வளர்ச்சியில வேகமாக போய்கிட்டிருக்காம்.. வீட்டுக்கு ரெண்டு மூன்று பேர் டூவீலர், கார் என வைத்துள்ளதால் மாநகரில் போக்குவரத்து நெரிசலும் அதிகரிச்சிக்கிட்டே போகுதாம்.. அதே நேரத்தில் பாதிக்கு பாதி பேர் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பதே இல்லையாம்..
நாள் ஒன்றுக்கு ரெண்டாயிரம் பேர் மீது ஹெல்மெட் வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்படுதாம்.. ஆனால் இதை சாக்காக வைத்துக்கொண்டு போக்குவரத்து போலீசில் சிலர் கல்லா கட்டுவதில் கில்லாடிகளாக இருக்காங்களாம்.. சரக்கடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ஒன்றிய அரசு 10 ஆயிரமும், ஹெல்மெட் இல்லாமல் சென்றால் ஆயிரமும் அபராதம் விதிக்க ஆர்டர் போட்டிருக்கு.. ஒருவர் மீது ஆன்லைன் மூலம் வழக்கு பதிவு செய்தால் அபராதத்தொகையை செலுத்தியே ஆக வேண்டும். ஆனால் போக்குவரத்து அதிகாரிகள் வழக்கை பதிவு செய்துவிட்டு, பெரும் தொகையை கையில் வாங்கிக் கொண்டு வண்டியை அனுப்பி விடுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்துகிட்டே இருக்குதாம்.. இதனால் டூவீலர் போலீசாரிடம் சிக்கிக்கொண்டால் கையோடு கைபிடித்து பணத்தை சொருகிச்செல்லும் நிலையும் ஏற்பட்டிருக்காம்..
இவ்வாறு தினமும் பல ஆயிரங்களை அள்ளிக்கொண்டு ேபாறாங்களாம்.. மாங்கனி நகரில் வடக்கு, தெற்கு என ரெண்டு பிரிவா போலீசில் பிரிச்சு இருக்குது.. இதில் ஒரு மாவட்ட அதிகாரி தினமும் குறைந்தது ₹40 ஆயிரம் இல்லாமல் அவரது வண்டி வீட்டுக்கு செல்லாதாம்.. இன்னொரு அதிகாரியோ, அதிகாரிகள் செலவு வச்சிடுறாங்க, நான் மட்டும் என்ன பண்ணுவேன் என கண்ணை கசக்குகிறாராம்.. இப்படியாக போக்குவரத்து போலீசாரின் பயணம் போய்கிட்டிருக்காம்.. அதே நேரத்துல மாநகரில் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் இருந்துக்கிட்டேதான் இருக்கு.. அந்நேரத்தில் அவர்கள் எங்கு போவார்கள் என்றே தெரியவில்லை, ரோட்ல ஒருத்தரையும் பார்க்கவே முடியலன்னு மக்கள் அங்கலாய்க்கிறார்கள்.. இந்த சீர்கேடுகளை யார் சீர்படுத்துவார்கள் என்ற கேள்வி நேர்மையான காக்கிகள் மத்தியில் எழுந்திருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மலராத கட்சி கூட்டணியால் அமைதியான மாவட்ட நிர்வாகியின் தகிடுதத்தங்களை தலைமைக்கு படம்பிடித்து அனுப்பிய அதிருப்தி கோஷ்டியும் எந்த சத்தமும் இல்லாததால் ஆப் ஆகிவிட்டதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கடைக்கோடி மாவட்ட இலை கட்சியில் கோல்டுக்கு பெயர் போன அந்த மாவட்ட நிர்வாகி ரொம்ப கப்சிப் மூடில் இருக்கிறாராம்.. கட்சி தலைமை உத்தரவுப்படி எந்த நடவடிக்கையிலும் ஆர்வம் இல்லையாம்.. அண்ணன் ஏன் எதுவுமே செய்யாமல் அமைதியாக இருக்காரு.. இப்படி இருந்தா கட்சி கடலில்தான் மூழ்கும் என்று அந்த கால ரத்தத்தின் ரத்தங்கள் பேசிக்கிறார்களாம்.. மலராத கட்சியுடன், இலை கட்சி கூட்டணி வைத்ததால எப்படியும் இந்த மாவட்டத்துல இலைக்கட்சிக்கு ஓட்டு விழ போறது இல்ல..
இருக்கிற தொகுதியும் மலராத கட்சிக்கு தான் தாரைவார்க்க போறதா பேசிக்கிறாங்க.. இதுல நாம ஏன் இறங்கி தடபுடல் காட்ட வேண்டும். தொகுதி அறிவிச்சு வேட்பாளரு அறிவிச்ச பின்தான் களத்துக்கே வருவேன்.. அதுவரை என்னை இடையூறு செய்யாதீர்கள் என நெருக்கமானவர்களிடம் கூறி விட்டாராம்.. கட்சி தலைமைக்கு வேலை செய்தது போல் காட்ட வேண்டும் என கூறி சில பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தை இவரே பெயரளவுக்கு கூட்டி செல்போனில் படம் பிடிச்சு வைச்சுருக்காராம். இவரின் பல தகிடுதத்த வேலைகளை அதிருப்தி கோஷ்டியினர், பொது செயலாளர் பார்வைக்கும் கொண்டு போய் இருக்கிறார்களாம்.. ஆனால் இதுவரை எந்த சத்தமும் கேட்கவில்லை என்பதால் அதிருப்தி கோஷ்டியும் அலுப்பாகி விட்டதாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா