Friday, June 14, 2024
Home » தலைவர் பதவியை பறிக்க ரகசிய திட்டம் போடுறாங்களே என்று வருத்தத்தில் வாடிக் கிடக்கும் இலை தலைவரை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

தலைவர் பதவியை பறிக்க ரகசிய திட்டம் போடுறாங்களே என்று வருத்தத்தில் வாடிக் கிடக்கும் இலை தலைவரை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

by Suresh

‘‘இலைக்கட்சி தலைவர் பதவியை பறிக்க கட்சிக்காரர்களே போடும் ரகசிய திட்டம் சேலத்து தலைவரின் தூக்கத்தை வெகுவாக கெடுத்திருக்காமே..’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘கூவத்தூரில் ஆட்சி பறிபோகும் நிலையில் இருந்தபோது அதனை தடுத்து நிறுத்தி நாலாண்டுகாலம் மம்மியின் ஆட்சியை நடத்த நான் பட்ட துன்பங்கள் எவ்வளவு, அரசியல் சூழ்ச்சியில் இருந்து ஆட்சியையும், கட்சியையும் கட்டி காப்பாத்தியிருக்கேன். ஆனா எதிரிகளோடு சேர்ந்து சூழ்ச்சி செய்றாங்களேன்னு இலை தலைவர் ரொம்பவே வேதனைப்படுகிறாராம். அவருக்கு ஆறுதல் கொடுக்கும் வகையில் அவரது மாங்கனி நிழலானவர், கொங்கு மண்டலத்தில் இருந்து அமைதியான மூத்த மாஜியை மாங்கனி நகருக்கு அழைத்து வந்து முருகன் கோயிலில் ஒரு பூஜையை நடத்தினாராம். அவரும் எனக்கு வயசாகிபோச்சு, எப்போதும் உங்கள் பின்னால்தான் இருப்பேன் என சத்தியம் செஞ்சாராம்.

இது இலைக்கட்சி தலைவருக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தாலும், இன்னொருவரை மட்டும் நம்பலயாம். அவர் தான் பாஜகவோடு கூட்டணி வச்சே ஆகணுமுன்னு விடாப்பிடியா இருந்தாராம். என்றாலும் கூடவே கூடாதுன்னு வெளியே இழுத்து வந்தது இலைக்கட்சி தலைவரின் செல்லப்பிள்ளையான தூங்கா நகரத்து மாஜி தந்தையின் சன்னாம். இதனால ரொம்பவே ஷாக்கில் இருந்த பெல்காரர், ஒரு நல்ல வாய்ப்பு வாயிற்கதவை தட்டும் என்று இருக்காராம். அப்படியே தனது தலைவர் பதவிக்கு நெருக்கடி வந்தாலும், நமது சமுதாயமே பதவியில் இருக்க வேண்டும், தேனிக்காரருக்கோ, சின்னமம்மிக்கோ போய்விடக் கூடாது என்பதில் இலைக்கட்சி தலைவர் உறுதியாக இருக்காராம்.

சமுதாயம் என்று வந்துவிட்டால், இலைக்கட்சி தலைவருக்கு யாரும் துரோகம் நினைக்க மாட்டார்கள் என ரத்தத்தின் ரத்தங்கள் உறுதியா சொல்றாங்களாம். அதே நேரத்தில் இலைக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட யாரும் உள்ளே எளிதில் நுழைய முடியாது. அவர்கள் கட்சியின் சின்னத்தை முடக்கும் வேலையில் ஈடுபட்டதை கோடிக்கணக்கான ரத்தத்தின் ரத்தங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என இலைக்கட்சி தலைவர் உறுதியா சொல்றாராம். இதற்காக ரங்கத்திற்கு இணையான சக்திகொண்ட ஆதிதிருவேங்கடம் கோயிலுக்கு சென்று வேண்டுதலும் வச்சிருக்காராம் இலைக்கட்சி தலைவர்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலை ஆட்சியில் நடந்த முறைகேட்டை விசாரிக்க விவசாயிகள் ேகாரிக்கை வைக்கிறாங்களாமே’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தமிழ்நாட்டுல விவசாயிகளோட நலனை கருத்துல கொண்டு, நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. அந்தந்த பகுதி விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செஞ்சி, அதுக்கான தொகைய வங்கி மூலம் கொடுத்தாங்க. போன இலை ஆட்சியில நெல் வியாபாரிங்க சில பேரு, வெளிமாநிலத்துல இருந்து தரம் இல்லாத நெல்லை குறைஞ்ச விலைக்கு வாங்கி, நிலம் இல்லாதவங்க பெயர்ல, விவசாயிகள்னு டாகுமென்ட் வாங்கி, நெல் கொள்முதல் நிலையங்கள்ல விற்று மானியமும் வாங்கி வந்தாங்களாம்.
அதிகாரிகள் ஆசியோட, கொள்ளை லாபம் பார்க்கப்பட்டதாக புகார்கள் எழுந்துச்சு. அப்புறம் அரசு உத்தரவுல, சிபிசிஐடி விசாரணை நடந்துச்சு. அதுல இலை ஆட்சியில, அரசு அதிகாரிகள்ல இருந்து, அரசியல் வாதிகள் வரைக்கும் 8 சி வரைக்கும் முறைகேடு செஞ்சதாக 68 பேர் கண்காணிப்பு வளையத்துக்குள்ள வந்தாங்க. இதுல 33 பேர் வரைக்கும் கைதும் செய்யப்பட்டாங்க. ஆனா, இதுநாள் வரைக்கும் முக்கிய பிரமுகர்கள் சிக்காமலே இருக்குறாங்களாம். ஜெட் வேகத்துல போன முறைகேடு வழக்கு, கிணத்துல போட்ட கல்லாக மாறிடுச்சு. இதுதொடர்பா விசாரணையை தீவிரப்படுத்தி குற்றவாளிங்க மேல உடனடியா நடவடிக்கை எடுக்கணும்னு விவசாயிங்க மத்தியில கோரிக்கை எழுந்திருக்குதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தேனிக்காரர் வந்துடுவாரோ என மாஜி மந்திரி ரொம்ப பயத்துல இருக்காரு போல..’’ என சிரித்தார் பீட்டர் மாமா.
‘‘தூங்கா நகரத்து இலைக்கட்சியின் மாஜியான உதயமானவர், தேனிக்காரருக்கு மீண்டும் இலை கட்சியில் வாய்ப்பில்லை என்று எல்லோருக்கும் முந்திக்கொண்டு ‘நோ என்ட்ரி’ போட்டுள்ளார். இலைக்கட்சிக்குள் விரிசல் பெருகி வருவதையும், சேலத்துக்காரரின் பிறந்தநாளில் கட்சியின் முக்கிய கோட்டைக்காரர், மணிக்காரர் உள்ளிட்டோரே வாழ்த்தாததும், தேர்தல் முடிவுக்கு பிறகு இலைக் கட்சியில் மீண்டும் இரட்டைத் தலைமை வர வாய்ப்பிருப்பதாகவும் தொடர்ந்து தகவல்கள் கசிய ஆரம்பித்திருக்கிறது. இந்நிலையில், தான் கடுமையாக எதிர்த்து வந்த தேனிக்காரர் கட்சிக்குள் நுழைந்து விடக்கூடாது என்பதில் தீவிரம் காட்டி, இந்த ‘நோ என்ட்ரி’யை உதயமானவர், பேட்டியாக்கினாராம். கட்சிக்குள் தேனிக்காரர் நுழைந்து விட்டால் தென்மாவட்டப் பகுதிக்குள் தனக்கான மரியாதை பறிபோய் விடுமோ என்கிற அச்சம் உதயமானவரை ஆட்கொண்டிருக்கிறதாம். ‘எந்தக் காலத்திலும் தேனிக்காரரை சேர்க்க வாய்ப்பில்லை. மீண்டும் விஷப்பரிட்சைக்கு தயாராக மாட்டோம்’ எனத்தெரிவித்த உதயமானவர், முடிவாக, ‘சேலத்துக்காரின் ஒப்புதலோடுதான் இதனை அறிவிக்கிறேன்’ எனவும் கூறி, சேலத்துக்காரையும் சேர்த்து விட்டு, தன் வார்த்தையை வலிமைப்படுத்தி விட்டார் என சக கட்சியினரே பேசி வருகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.

You may also like

Leave a Comment

3 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi