‘‘தேனி, குக்கர் அணி முக்கிய நிர்வாகிகளை இழுக்கும் வேலையில் சேலத்துக்காரர் டீம் மும்முரமா இருப்பதாக சொல்கிறார்களே.. உண்மைதானா..’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘நெற்களஞ்சியம், மலைக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டத்தில் தேனிக்காரர், குக்கர் தலைமைக்கு செல்வாக்கு இருப்பதால் இவர்களது அணியில் உள்ள முக்கிய நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுத்தால் டெல்டாவில் இலை கட்சிக்கு மேலும் பலம் அதிகரிக்க கூடும் என சேலத்துக்காரர், டெல்டாவில் உள்ள அவரது நெருங்கிய ஆதரவாளர்களிடம் ஆலோசித்துள்ளாராம். இதற்காக அவரது ஆதரவாளர்களிடம் அந்தந்த மாவட்டத்தில் அதிக செல்வாக்கு இருக்க கூடிய முக்கிய நிர்வாகிகள் யார் யார் என பட்டியல் கேட்டுள்ளார். அந்தந்த மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகளுக்கு இருக்கும் செல்வாக்கை வைத்து விட்டமின் ப மற்றும் முக்கிய பொறுப்புகளும் கொடுக்க முடிவு செய்ததோடு, அந்த பணியை விரைந்து முடிக்கும்படி சேலத்துக்காரர் அவரது டீமுக்கு உத்தரவு போட்டுள்ளாராம்.இந்த உத்தரவை தொடர்ந்து அவரது டீம் அதற்கான திரைமறைவான வேலையில் இறங்கியுள்ளதாம். டெல்டா மாவட்டத்தில் இதன் மூலம் தேனிக்காரர், குக்கர் தலைமையானவருக்கு செக் வைக்க தான் சேலத்துக்கார் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார் என சேலத்துக்காரரின் நெருங்கிய ஆதரவாளர்கள் கூறுகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘போதையில போயி பாதை மாறிய பாரஸ்ட் ஆபிசர் பத்தி சொல்லுங்க..’’ என ஆர்வமாக கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கிரிவலம் மாவட்டத்துல அணை இருக்குற பாரஸ்ட் லிமிட் ஆபிசராக, வாசனை பெயர் கொண்டவரு பணியாற்றி வர்றாரு. இவரு, நைட் டியூட்டில போதையில தான் டியூட்டிக்கு வருவாராம். அதோட பெண் பாரஸ்ட் பணியாளர்களை தொட்டு பேசுறது, அநாகரீக வார்த்தைகளை பேசி டார்ச்சர் செய்வதுன்னு எல்லை மீறியிருக்காரு. ஆரம்பத்துல பெண் பணியாளர்களோட மட்டும் தான் நைட் ரவுண்ட்ஸ் போவாராம். ஆண் பணியாளர்களை காட்டுக்கு வெளிய நிற்க வெச்சிடுவாராம். அதோட பெண் பணியாளர்கள் அவங்க வண்டியிலதான் கூட்டிக்கிட்டு போகணுமாம். அதுமட்டுமில்லாம, லீவு ேகட்டா 1கே கொடுத்துவிட்டுத்தான் லீவு எடுக்கணுமாம். இப்படி அந்த பாரஸ்ட் ஆபிசர் எல்லைமீறியிருக்குறாரு. ஒட்டுமொத்த பெண் பணியாளர்களும் பொறுக்க முடியாம போட்ட புகார்ல, இப்ப அந்த பாரஸ்ட் ஆபிசர் போதை தெளிஞ்சு சஸ்பெண்ட்ல இருக்காராம். சஸ்பெண்ட் போதாது, இனி இதுபோல, அவர் எங்க பணிக்கு மாறி போனாலும் இந்த தப்பு நடக்காம இருக்க நடவடிக்கை எடுக்கணும்னு பெண் பாரஸ்ட் பணியாளர்கள் கிட்ட இருந்து கோரிக்கை குரல் ஒலிக்குதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘காக்கிகள் ஆட்டம் காணுவது ஏன்..’’ என கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கோவை புறநகர் காவல்துறையை சேர்ந்த காவலர்கள் சமீபகாலமாக, நவீன தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சப்தம் இல்லாமல் வசூல் வேட்டை நடத்தி வருகிறார்கள். இது, தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பேரூர் போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த போலீசார், தங்களுக்குள் மொபைல் போனில் பேசிக்கொண்ட ஆடியோ தற்போது வைரலாகியுள்ளது. இந்த விவகாரத்தில் சிக்கியுள்ள பேரூர் போலீஸ் ஸ்டேஷன் ஏட்டுகள் முரளிதரன், அஜித்குமார், நுண்ணறிவு பிரிவு காவலர் பரமேஸ்வரன் ஆகியோர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கோவை மாவட்ட எஸ்.பி., பத்ரிநாராயணன் பிறப்பித்துள்ளார். இவர்கள் மூன்று பேர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டாலும், இந்த விவகாரம் தொடர்பாக கூடுதல் எஸ்.பி., ஒருவர் விசாரணை நடத்தி வருகிறார். இவர், மாவட்ட எஸ்.பி.க்கு அறிக்கை அளிக்கவேண்டும் என்பதற்காக தனது விசாரணையை முடுக்கி விட்டுள்ளார். இவரது விசாரணையில், பல பகீர் தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது, பேரூர் சப்-டிவிஷனில் உள்ள சில உயரதிகாரிகளும் இந்த விவகாரத்தில் சிக்குவார்கள் என்கிற பேச்சு எழுந்துள்ளது. இவர்களது மொபைல் போன் மற்றும் வங்கி கணக்கும் ஆய்வு செய்யப்படுகிறதாாம். அதனால், மூன்று ஸ்டார் மற்றும் இரண்டு ஸ்டார் கொண்ட சில அதிகாரிகள் நடுக்கத்தில் இருக்கிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘புதுவை பாஜவில் உச்சக்கட்ட பூசலாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ கூட்டணி சார்பில் வேட்பாளராக நின்ற சிவாயமானவர் தோல்வி அடைந்ததால் பாஜவில் உச்சக்கட்ட பூசல் நிலவி வருகிறது. இதனால் இரண்டு அணியாக உடைந்து கிடக்கிறது. பாஜ எம்எல்ஏ கல்யாணம் பெயர் கொண்டவர் தலைமையில் பாஜ ஆதரவு சுயேச்சைகளும் கைகோர்த்து தனியாக அரசியல் செய்து வருகின்றனர். புல்லட்சாமிக்கு எதிராக டெல்லி வரை சென்று புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் புல்லட்சாமி கை ஓங்கி உள்ளதாக கூட்டணி கட்சியினர் கூறி வருகின்றனர். இதற்கிடையில் மற்றொரு அணியை சேர்ந்த பாஜ எம்எல்ஏக்கள், புல்லட்சாமிக்கு தொடர்ந்து ஆதரவு கொடுப்போம் என தலைமைக்கு உறுதியாக கூறிவிட்டதால் பாஜ தலைமை அமைதி காத்து வருவதால் பாஜ அதிருப்தி கோஷ்டி கடும் அப்செட்டில் உள்ளதாம். ஆனாலும் தற்போது நடக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் புதுவையில் நிலவும் பல்வேறு மக்கள் பிரச்னைகளை பாஜ அதிருப்தி எம்எல்ஏக்கள் கிளப்ப திட்டமிட்டுள்ளதால் ஆளும் கூட்டணியில் விரிசல் ஏற்படும் என்று நடுநிலையாக இருக்கும் எம்எல்ஏக்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக திறக்கப்பட்ட ரெஸ்டோ பார் பிரச்னை தான் அரசுக்கு தலைவலியாக உள்ளது. ஏனெனில் மக்கள் சாலைக்கு வந்து போராட்டம் நடத்தியது அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது..’’ என்றார் விக்கியானந்தா.