‘‘வெயிலூர் மாவட்டத்துல பதிவுக்கு ஏகப்பட்ட பணம் வசூலிக்குறாங்களாமே..’’ என்று ேகட்டார் பீட்டர் மாமா.
‘‘ஆமா.. இந்த மாவட்டத்துல பள்ளியில தொடங்கி கொண்டால முடியுற ஏரியாவுல பதிவுத்துறை ஆபிஸ் இருக்குது. இங்க ஒரு நாளைக்கு 30ல இருந்து 50 வரைக்கு பத்திரங்கள் பதிவு செய்றாங்க. அப்படி பத்திரப்பதிவு செய்ய வர்ற ஆபிஸ்ல ஒரு சில பத்திர எழுத்தருங்க, ஏகப்பட்ட பணம் வசூலிக்குறாங்களாம். தேவையில்லாத கணக்கு காட்டி மோசடி நடக்குதாம். பெரும்பாலும், கிராம பகுதியில இருந்து வர்ற விவரம் அறியாத ஜனங்களை குறிவெச்சி மோசடி செய்றாங்களாம். இதுல சரிபாதி தொகை, மாலை நேரம் ஆனதும், ஆபிசருக்கு போய்டுதாம். இதனால, சம்மந்தப்பட்ட பத்திர எழுத்தர் கொண்டு போற கோப்புகள்ல சிக்கல் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பதிவு ஜோரா நடக்குதாம். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ஆக்கிரமிப்பு இடங்களுக்கு சிலர் பதிவு செய்றாங்களாம். இதனால், பதிவு செய்த இடங்களை வேறொருவருக்கு கைமாற்றும்போது பல இடியாப்ப சிக்கல்கள் எழுந்து வருவதாம். சம்மந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் இதில் தலையீட்டு விதிமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்கணும்னு ஜனங்களோட கோரிக்கை குரலாக உள்ளது’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பிரேக் டவுன் பஸ்சை மாணவிகள் தள்ளிய விவகாரம் பூதாகரமாகி இருக்கு போலயே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘நாகர்கோவிலில் அரசு பஸ் பிரேக் டவுன் ஆகி, அதை கல்லூரி மாணவிகள் தள்ளிய காட்சிகள் சமூக வலை தளத்தில் பரவியது. இதனால் அந்த பஸ்சின் டிரைவர், கண்டக்டர் மற்றும் பராமரிப்பு பிரிவில் இருந்த 2 பேர் என 4 பேரை, அதிகாரி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டாரு. மாணவிகளை வச்சு எப்படி பஸ்சை தள்ள செய்தீங்க என்பது தான் டிரைவர், கண்டக்டர் மீதான புகாராம். ஆனால் இந்த விவகாரம் இப்போது போக்குவரத்து கழக அதிகாரிக்கு பெரும் தலைவலியாக மாறி இருக்கிறதாம். சம்பந்தப்பட்ட பஸ்சில் பேட்டரி இல்லை. செல்ப் சரியில்லை என்று 4 மாதங்களாக அந்த பஸ்சின் டிரைவர் மாறி, மாறி லாக் சீட்டில் எழுதி வைத்துள்ளார். ஆனால் யாரும் கண்டு கொள்ளவில்லை. லாக் சீட்டை ஆய்வு செய்ய வேண்டிய டெப்போ அதிகாரியும் நடவடிக்கை எடுக்காம இருந்திருக்காரு. இப்போது பஸ் பாதியில் நின்று சமூக வலைதளத்தில் தள்ளு வீடியோ வைரல் ஆனதால் டிரைவர், கண்டக்டரை பலிகடா ஆக்கி பொறுப்பு அதிகாரிங்க தப்பிச்சுட்டாங்களாம். ஆனால் தொழிற்சங்கத்தினர் இந்த பிரச்னையை விடாமல், லாக் சீட்டில் எழுதி இருந்த விபரத்தை படம் பிடிச்சு, இப்போது சமூக வலை தளங்களில் பரப்பிட்டு இருக்காங்களாம். அது மட்டுமல்ல, அந்த பஸ் காலையில் ஒரு ட்ரிப், மாலையில் ஒரு ட்ரிப் என மாணவிகளுக்காக மட்டும் செல்லும் பஸ் ஆகும். அப்படி மாணவிகள் மட்டும் செல்லும் ட்ரிப் தான் பழுதாகி இருக்கு. மாணவிகள் மட்டும் இருந்ததால், அவங்களே பஸ்சை தள்ளி இருக்காங்க. இது எப்படி டிரைவர், கண்டக்டர் மீது தப்பாகும் என கேள்வியும் எழுப்பி வீடியோவை வைரலாக்கி வருகிறார்களாம். லாக் சீட்டில் எழுதியது எப்படி வெளியே பரவியது என்பது பற்றி இப்போது அடுத்த கட்ட விசாரணை நடக்கிறதாம். ஆனால் டெப்போ அதிகாரிங்க மீது நடவடிக்கை எடுப்பது பற்றி சம்பந்தப்பட்ட உயர் அதிகாரி யோசிக்கவே இல்லை என்கிறார்கள்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தாசில்தாரை மிரட்டினாராமே தாமரை கட்சி தலைவர்.. என்னா விஷயம்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘புரம் என்று முடியும் மாவட்டத்தில் தாமரை கட்சி தலைவர்கள் சர்ச்சை புகாரில் அடுத்தடுத்து சிக்குவது வழக்கமான ஒன்றாகி விட்டதாம். தற்போது தெற்கு மாவட்டத்தை தொடர்ந்து, வடக்கு மாவட்ட தலைவரும் புகாரில் சிக்கியிருக்கிறாராம். பிரபல திரைப்பட இயக்குனர், நடிகர் பெயரை கொண்டவர், தனது சொந்த ஊரில் தலைவர் பதவியில் தனது ஆதரவாளரை நிற்க வைத்து தலைவராக்கி, நிர்வாகம் முழுவதையும் அவரே செய்து வருகிறாராம். அவர் சொல்லும் இடத்தில்தான் தலைவரும் கையெழுத்திட வேண்டும் என்ற நிலையில் தலைவர் இருக்கிறாராம். ஊராட்சியில் குழாய் பொருத்தும் பணிக்காக தேசிய நெடுஞ்சாலை உடைக்கப்பட்டிருந்ததாம். இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மரக்காணம் தாசில்தாரிடம் புகார் அளிக்க, முருகன் பெயரைக் கொண்ட அதிகாரியே நேரில் சென்று விசாரித்தாராம். அங்கு வந்த தாமரைக் கட்சி தலைவரோ, தாசில்தாரிடம் மல்லுக்கட்டி உன்னை சட்டையை கழட்டி ஓட விட்டு விடுவேன் என மிரட்டியிருக்கிறாராம். அவரை கண்டித்து 5 பேருடன் சென்று தாலுகா அலுவலகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டாராம்.
தாசில்தாரை ஒருமையில் பேசி திட்டிய தாமரைக் கட்சி தலைவர் மீது ஆத்திரமடைந்த அதிகாரியோ தனது சங்கத்திலும், தான் பட்டியலின் அதிகாரி என்பதால் ஒருமையில் பேசியதை கண்டித்து அவரும் போராட்டத்தை கையில் எடுத்துள்ளாராம். ஆனால் தாமரைக் கட்சித் தலைவரோ, எனது தம்பி எதிர்க்கட்சியில் ஒன்றிய செயலாளராக உள்ளார். இரு கட்சிகளும் சேர்ந்து உன்னை ஒரு வழி பண்ணாமல் விடமாட்டோம் என்று சபதம்விட்டு சென்றிருக்காராம். தாமரைக் கட்சித் தலைவர் மீது சட்டவிரோதமாக இறால் பண்ணை அமைத்த வழக்கு நீதிமன்றத்தின் நிலுவையில் இருக்கிறதாம். அதேபோல் பட்டியலின மக்களுக்கான பஞ்சமி நிலத்தை அபகரித்த புகாரும் நிலுவையில் உள்ளதாம் என்றார் விக்கியானந்தா.