Friday, February 23, 2024
Home » படம் மாறிப்போனதால் பதறிப்போன இலைகட்சி செயலாளரை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

படம் மாறிப்போனதால் பதறிப்போன இலைகட்சி செயலாளரை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

by Suresh

‘‘இலைகட்சி செயலாளர் பதறிப்போனது எதனாலாம்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலைகட்சி பொதுச்செயலாளரின் சொந்த ஊரில், இலைகட்சி மாஜி எம்எல்ஏ தாமரை கட்சியில் இணைஞ்ச சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியிருச்சாம். திருப்பதிசாமியின் பெயர் கொண்ட இலைகட்சியின் மாஜி எம்எல்ஏ ஒருத்தரு, சமீபத்தில் தாமரை கட்சியில் ஐக்கியம் ஆனாராம். இவரு அந்த கட்சியில் மாநகர் மாவட்ட செயலாளராகவும் இருந்தவரு. அதே நேரத்தில், இப்போது அந்த கட்சியில் சிட்டிங் மாநகர் மாவட்ட செயலாளராக இருக்கும் மாஜி எம்எல்ஏவின் பெயரும், திருப்பதிசாமியின் திருநாமம் தானாம். ஆனால், சமூக வலைதளங்களில் தற்போதைய சிட்டிங் இலைகட்சி செயலாளரின் படத்தை போட்டு, தாமரையில் ஐக்கியமானதாக பரப்பி விட்டாங்களாம். இதனால் சேலத்துக்காரரின் அடிப்பொடிகள் ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டாங்களாம். தலைவருக்கு ரொம்ப நெருக்கமானவரு. அவரு எப்படி தாமரை கட்சியில் சேர்ந்தாரு என்று ஏகத்துக்கும் குழப்பமாம். இதனால் பதறிப்போன சிட்டிங் செயலாளரு, உடனடியாக ஓடிப்போய் சேலத்துக்காரரை சந்தித்து, அது நான் இல்லீங்கோன்னு தெளிவான விளக்கம் அளிச்சாராம். இதை ஏத்துக்கிட்ட சேலத்துக்காரரும், சிட்டிங் செயலாளரிடம் தனது டிரேடு மார்க் சிரிப்பை உதிர்த்து வழியனுப்பி வச்சாராம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஆக்கிரமித்த அரசு இடங்களில் வீடுகள் கட்டியவர்கள் இப்போ கலங்கிப் போய இருக்கிறார்களாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மாநிலத்தில் அரசுக்கு தேவையான கட்டிடங்களை கட்டுவதற்கு இப்போதெல்லாம் அரசுக்கு சொந்தமான இடங்களே பெரும்பாலும் இருப்பதில்லையாம். காரணம், அவை அனைத்தும் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியிருப்பதுதானாம். தற்போது அரசின் உத்தரவின்படி அரசு நிலங்கள் படிப்படியாக மீட்கப்பட்டு வருகின்றன. வெயிலூர் மாவட்டத்தில் எல்லா தாலுகாக்களிலும் அந்த பணி நடந்து வருகிறது. அதில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ள பகுதியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடங்களை பலரும் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்களாக கட்டி அவசர அவசரமாக பட்டாவும் வாங்கி விற்பனை செய்து வருகிறார்களாம்.
இரண்டு நாட்களுக்கு முன்பு அங்குள்ள மேடான பகுதியில் அடித்தட்டு வர்க்கத்தை சேர்ந்த ஒருவர் சிறிய அளவில் ஒரு அறை கொண்ட வீடு கட்டியிருந்தாராம். அதை ஆக்கிரமிப்பு என்று சொல்லி இடித்து தள்ளினார்களாம். மேலும் சிலருக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாம். அதற்கு முன்பாக அதே பென்னான பேரூரில் பல ஏக்கர் அரசு நிலங்கள் மீட்கபட்டுள்ளது. அது சரியான நடவடிக்கைதான். ஆனால், அதே மேடான இடத்தில் காட்பாடியை சேர்ந்த ஒருவர் ரூ.50 லட்சத்தில் வீடு கட்டி வாடகைக்கு விட்டு சம்பாதித்து வருகிறாராம். இலை கட்சியோட ஆட்சியில் இப்படி அவர் காட்பாடி வண்டறந்தாங்கல், கார்ணாம்பட்டு என பல இடங்களில் அரசு புறம்போக்கு இடங்களை வளைத்து லோக்கல் புள்ளிகளின் ஆதரவுடன் வீடு கட்டி பட்டா பெற்று விற்பனை செய்யுறாராம். அல்லது வாடகை விடுகிறாராம். இங்கும் அப்படி அவர் வீடு கட்டியுள்ளதற்கு லோக்கல் அரசியல் புள்ளிகள்தான் காரணமாம். அவரை போன்றே வசதியானவர்கள் பலரும் அரசு இடத்தில் வீடு கட்டி வாடகைக்கு விட்டு வருகிறார்களாம். இவற்றை கணக்கெடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி அரசு நிலத்ைத மீட்க வேண்டும் என்று கோரிக்கை குரல் எழுந்திருக்குது’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அதிரடி அதிகாரியால் வேறு இடத்தில் ஓபி அடிக்கும் ஊழியர்கள் தேடுவதாக சேதி வருதே.. என்னா விஷயம்..’’ என ஆர்வமாக கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தூங்கா நகர் மாவட்டம் முதல்படை வீட்டு யூனியன் அலுவலகத்தில் உள்ள சில முறைகேடு அதிகாரிகள் பற்றி புகார்கள் குவிந்ததை அடுத்து தற்போது புதிதாக தலைநகரில் இருந்து பெண் அதிகாரி ஒருவர் பொறுப்பேற்றுள்ளார். இந்த அதிகாரி பொறுப்பேற்றவுடன் கரப்ஷன் அலுவலர்கள், புரோக்கர்கள் உட்பட பலரையும் அலறவிட்டு கொண்டிருக்கிறாம். அலுவலகத்திற்கு அனைவரும் சரியான நேரத்திற்கு வர வேண்டும். எந்த கோப்புகளையும் பெண்டிங் வைக்கக் கூடாது. மக்கள் பணிகள் ஏதும் பாதிக்கக்கூடாது எனவும் கடுமையான உத்தரவுகளை இடுகிறாராம். மேலும் அரசு நிதியின் கீழ் நடைபெற்று வரும் பணிகளின் தரத்தையும் முழுமையாக ஆய்வு செய்கிறாராம். இதனால் மக்கள் பணிகள் தொய்வின்றி நடப்பதாகவும் யூனியன் அலுவலக வேலைகள் அனைத்தும் சரியாக நடைபெறுவதாகவும் பொதுமக்களே கூறுகின்றனர். இதுவரை தூங்கி வழிந்த சிலர் இப்போது வேறு யூனியனுக்கு ஓடி விடலாமா என புலம்பிக் கொண்டிருக்கின்றனராம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘உள்துறை மீது கடும் அதிருப்தியில இருக்காங்களாமே பொதுமக்கள் என்னவாம்…’’ என கேட்டார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரியில என்.ஆர்.காங்கிரஸ், பாஜ கூட்டணி அரசில் உள்துறையை கவனிக்கும் சிவாயமானவர், கடந்த சட்டமன்ற தேர்தலின்போது காங்கிரசில் இருந்து பாஜவுக்கு திடீரென எகிறி குதித்தவர். கட்சி மாறியதை தொடர்ந்து தொகுதியையும் மாற்றினார். வில்லி தொகுதியில் இருந்து மண்ணாடி தொகுதியில் நின்று வெற்றி பெற்று உள்துறையை கடும் போராட்டத்திற்குப் பின்னர் வாங்கினார். ஆனால், தனது சொந்த தொகுதியில் பெயரளவில் நலத்திட்டங்களை தொடங்கி வைப்பது உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் மட்டும் அவ்வப்போது கலந்துகொள்கிறாராம்.. இருந்தாலும், தனது பழைய தொகுதி மேல தான் ெராம்ப பாசம் காட்டுகிறாராம்.. அவரது வீடும் பழைய தொகுதியில் இருப்பதால் தினமும் நிர்வாகிகளை சந்திப்பது, பேசுவது என இருந்து விடுகிறாராம்.. இதனால, மண்ணாடி தொகுதி மக்கள், உள்துறை மீது கடும் அதிருப்தியில இருக்கிறார்களாம்.. மக்களின் எதிர்ப்பை அறிந்த உள்துறை, நான் இனிமேல் இங்கே நிற்க மாட்டேன். வரும் தேர்தலில் மங்கலமான தொகுதிக்கு மாறிவிட தயாராகிவிட்டேன்னு சொல்றாராம்.. அவருடன் இருக்கும் கைதடிகளும், எங்க அண்ணன் எப்போதும் வலுவான தலைவர்கள் இல்லாத தொகுதியில் நின்னு கரன்சிகளை அள்ளி வீசி வெற்றி பெற்றுவிடுவதில் பலே கில்லாடி என அலப்பறை வேற செய்கிறார்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

You may also like

Leave a Comment

five − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi