சில்லாங்: மேகாலயாவுக்கு ஹனிமூனுக்கு அழைத்து சென்று கூலிப்படையை வைத்து கணவனை கொலை செய்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த கொலை தொடர்பான விசாரணையில் புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் ராஜா ரகுவன்ஷி (28). டிராவல்ஸ் நிறுவன அதிபர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சோனம் (25) என்பவருக்கும் கடந்த மாதம் 11ம் தேதி திருமணம் நடந்தது. புதுப்பெண் சோனத்தின் தந்தையும் இந்தூரில் பர்னிச்சர் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் புதுமண தம்பதியான இவர்கள், தேனிலவை கொண்டாட கடந்த மாதம் 20ம் தேதி மேகாலயா சென்றனர். அங்கு பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்து விட்டு நொங்ரியாட் என்ற கிராமத்தில் தங்கினர். கடந்த மாதம் 23ம் தேதிக்கு பிறகு இருவரும் தங்கள் உறவினர்களை தொடர்பு கொண்டு பேசவில்லை. அவர்களின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 2ம் தேதி மேகாலயாவின் சிரபுஞ்சியில் உள்ள வெய் சாவ்டாங் அருவி அருகே உள்ள பள்ளத்தாக்கில் ராஜா ரகுவன்ஷியின் உடல் மீட்கப்பட்டது. மேகாலயா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில், ராஜா ரகுவன்ஷி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதுதொடர்பாக மனைவி சோனம், அவரது காதலர் ராஜ் குஷ்வாகா (21) மற்றும் ஆகாஷ் (19), விஷால் (22), ஆனந்த் (23) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில், அடுத்தடுத்து பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகின்றன. சோனத்தின் தந்தை தேவி சிங், இந்தூரில் பிளைவுட் கடை நடத்தி வருகிறார். அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதால் மகன் விபின், மகள் சோனம் ஆகியோர்தான் கடையை கவனித்து வந்தனர். இந்த கடையில் ராஜ் குஷ்வாகா கணக்காளராக பணியாற்றி வந்தார். அவருக்கும் சோனத்துக்கும் காதல் மலர்ந்தது. சில ஆண்டுகளாக ரகசியமாக காதலித்து வந்தனர். வேறு சாதி என்பதாலும், பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர் என்பதாலும் ராஜ் குஷ்வாகாவை தனது குடும்பத்தினர் ஏற்க மாட்டார்கள் என சோனத்துக்கு தெரிந்துள்ளது. இந்நிலையில்தான் சோனத்துக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் நடந்தது. வேறு வழியில்லாமல் குடும்பத்தினர் ஏற்பாடு செய்த திருமணத்துக்கு சோனம் சம்மதித்தார். கடந்த மாதம் 11ம் தேதி ராஜா ரகுவன்ஷி, சோனம் திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்தபின் கணவரை கொலை செய்துவிட்டு காதலர் ராஜ் குஷ்வாகாவுடன் நேபாளத்துக்கு தப்பி செல்லலாம் என சோனம் திட்டம் தீட்டியுள்ளார். இதற்காகவே தேனிலவுக்கு கணவரை மேகாலயாவுக்கு அழைத்து சென்றார். அங்கு கணவனை திட்டமிட்டபடி கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளார் சோனம். இதற்காக ராஜ் குஷ்வாகாவிடம் கூலிப்படைக்கு ரூ.14 லட்சம் பேசி முன்பணமாக சில லட்சங்களை கொடுத்துள்ளார் சோனம். கொலை நடப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன், கூலிப்படையினர் தயங்கவே, அவர்களுக்கு ரூ.20 லட்சம் தருவதாக கூறியுள்ளார். சிரபுஞ்சி அருவிப்பகுதியில் சிசிடிவி கேமரா இல்லாத பகுதிக்கு கணவரை அழைத்து சென்றதும், அவர்களை பின்தொடர்ந்து வந்த கூலிப்படையை சேர்ந்த விஷால் உள்ளிட்டோர், கோடரியால் ராஜா ரகுவன்ஷியை வெட்டினர். இந்த காட்சியை சற்று தூரத்தில் இருந்து சோனம் ரசித்தார். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்ததும், அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.15 ஆயிரத்தை சோனம் எடுத்து கூலிப்படைக்கு கொடுத்தார். பின்னர் அவர் அணிந்திருந்த நகைகளையும் கூலிப்படையினர் எடுத்து கொண்டனர்.
தனது காதலன் ராஜ் குஷ்வாகா சிக்கி கொள்ள கூடாது என்பதிலும் சோனம் மிகவும் கவனமாக இருந்துள்ளார். கொலை நடக்கும் இடத்துக்கு வரவேண்டாம் எனவும் கூறியுள்ளார். கூலிப்படையினரை மட்டும் அவர் புறப்பட்ட அன்றே ரயிலில், சோஹ்ராவுக்கு வரவழைத்துள்ளார். கூலிப்படையினராக விஷால், ஆகாஷ், ஆனந்த் ஆகியோர் சிரபுஞ்சியில் சுற்றுலா பயணிகள் போல் ராஜா ரகுவன்ஷிக்கு அறிமுகம் ஆகியுள்ளனர். சோஹ்ராவில் ராஜா ரகுவன்ஷி – சோனம் தம்பதி தங்கியிருந்த ஓட்டல் நிர்வாகம், அவர்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டியை ஏற்பாடு செய்து கொடுத்தது. தினமும் அவர்களுடன் அந்த சுற்றுலா வழிகாட்டி சென்று வந்தார். ஆனால் கொலை நடந்த நாளன்று அவரை வர வேண்டாம் என சோனம் தவிர்த்துள்ளார். மேலும் ஹனிமூன் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்த அவர், திரும்பி வருவதற்கு டிக்கெட் முன்பதிவு செய்யவில்லை. தான் அங்கிருந்தபடியே தனியாக, ராஜ் குஷ்வாகாவை வரவழைத்து, வேறு எங்காவது செல்ல திட்டமிட்டிருந்தார். இவ்வாறு விசாரணையில் இந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.