திருவண்ணாமலை: கணவர் கோயில் உண்டியலில் செலுத்திய ரூ.4 கோடி சொத்து பத்திரத்தை திரும்ப கேட்டு திருவண்ணாமலை கலெக்டரிடம் மனைவி மனு அளித்தார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த படவேடு அருகே கோணையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன்(65), முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி கஸ்தூரி, இவர் அரசு பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது 2 மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விஜயன் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். அவர், கடந்த 24ம் தேதி தனக்கு சொந்தமான ரூ.4 கோடி மதிப்பிலான 2 வீட்டின் பத்திரங்களை படவேடு ரேணுகாம்பாள் அம்மன் கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளார்.
அதனை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், விஜயனின் மனைவி கஸ்தூரி கலெக்டர் தர்ப்பகராஜிடம் மனு அளித்தார். அதில், ‘எனது கணவர் எங்கள் குடும்பத்தினர் மீது இருந்த விரக்தியால், வீடு மற்றும் சொத்து அசல் பத்திரங்களை கோயில் உண்டியலில் செலத்திவிட்டார். ஆசிரியராக பணிபுரியும் என்னுடைய ஊதியத்தில் இருந்தே அந்த வீட்டை கட்டினேன். வேறு வீடு எதுவும் இல்லை. எனவே, உண்டியலில் செலுத்திய பத்திரத்தை திரும்ப வழங்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார்.