சென்னை: மனைவியின் தங்கையை கர்ப்பம்மாக்கிய கணவனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. ஒரிசா மாநிலத்தை சேர்ந்த ராஜ்குமார் நாயக்(28). இவர் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது குடும்பத்துடன் சென்னை சாலவாயல் பகுதியில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தன்னுடன் தங்கி இருந்த மனைவியின் தங்கையான 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கியதாக எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 4ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், 9 சாட்சிகள் விசாரிக்கப்பட்டும், புகார்தாரர் மற்றும் ராஜ்குமார் நாயக் ஆகியோர் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பெறப்பட்ட மருத்துவ சான்றிதழ்கள் ஆகியவற்றுடன் மகிளா நீதிமன்ற அரசு தரப்பு வழக்கறிஞர் அமுதா விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி விசாரணை முடிந்தது.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 8ம் தேதி போக்சோ வழக்குகளை விசாரிக்கும் போக்சோ சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டு வழக்கறிஞர் நிர்மலா ஆஜராகி வாதாடி வந்தார். இந்நிலையில் வழக்கு விசாரணை தொடர்பாக கடந்த 11ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ராஜ்குமார் நாயக்கிற்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும், கட்டத் தவறினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி சரஸ்வதி உத்தரவிட்டார். இதனையடுத்து ராஜ்குமார் நாயக் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.