ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே ஒரு பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுக்கும், சேலம் மாவட்டத்தை சேர்ந் 28 வயது வாலிபருக்கும் கடந்த 4 மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது. கடந்த 3ம்தேதி, ஆடிப்பெருக்கு விழாவுக்காக தாய் வீட்டிற்கு வந்த இளம்பெண் மறுநாள் மாலை, எலி பேஸ்ட்டை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். பெற்றோர் அவரை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது, கண்ணீருடன் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது: எனக்கு 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு நாங்கள் தனிமையில் உல்லாசமாக இருந்தபோது, எனக்குத் தெரியாமல் எனது நிர்வாண புகைப்படங்களை கணவர் செல்போனில் எடுத்துள்ளார்.
இதையறிந்த நான் அவரது செல்போனை வாங்கி பார்த்த போது, அவருடன் நெருங்கி பழகும் பல பெண்களின் நிர்வாண புகைப்படங்களையும் அதில் வைத்திருந்தார். மேலும், அந்த புகைப்படங்களை தனக்கு தெரிந்த பல ஆண்களிடம் விலைக்கு விற்றதும் தெரியவந்தது. இதனை தட்டிக்கேட்ட என்னை, அவர் அடித்து துன்புறுத்தினார். மேலும், பல ஆண்களை வீட்டிற்கு அழைத்து வந்து, பகலிலேயே அவர்களுடன் உறவு வைத்துக்கொள்ள சொல்லி, அடித்து கொடுமைப்படுத்தினார். இந்நிலையில், ஆடிப்பண்டிகைக்கு வீட்டிற்கு வந்த போது, என்னுடைய செல்போனை எடுத்து பார்த்த எனது அத்தை அதில் இருந்த ஆபாச படங்களை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து என்னிடம் கேட்ட போது, நடந்த சம்பவங்களை அவரிடம் தெரிவித்தேன். அவர் எனது பெற்றோரிடம் கூறியதால் வீட்டில் தகராறு ஏற்பட்டது.
இது தெருவில் உள்ளவர்களுக்கும் தெரிந்து விட்டதால், அவமானமடைந்த நான் எலி பேஸ்ட் தின்று தற்கொலைக்கு முயன்றேன். ஆனால் பெற்றோர் என்னை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றி விட்டனர். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மகளிர் போலீசார், பெண்ணின் கணவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, பெண்ணின் கணவர் ஆத்தூர் டவுன் போலீசில் அளித்த புகாரில், கடந்த 5ம்தேதி மாமனார் வீட்டிற்கு தான் வந்த போது மனைவியின் தாய் மற்றும் அத்தை சண்டை போட்டனர். இதை தட்டிக் கேட்ட போது, மாமனார், மாமியார், உறவினர்கள் தன்னை தாக்கியதாக தெரிவித்துள்ளார். அதன் பேரிலும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.