திருச்செங்கோடு: திருச்செங்கோடு அருகே மனைவியை கொலை செய்து விட்டு, தற்கொலை நாடகமாடிய ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வாலரைகேட் அடுத்த பண்ணைக்காட்டை சேர்ந்தவர் செல்வம் (57), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி விஜயலட்சுமி (34). தர்மபுரியை சேர்ந்த இவரது குடும்பத்தினர் திருச்செங்கோடு அடுத்த ஊஞ்சப்பாளையம் பகுதியில் தங்கியிருந்தனர். அப்போது, அவ்வழியாக மினிபஸ் டிரைவராக இருந்த செல்வத்துக்கும், விஜயலட்சுமிக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் கடந்த 18 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகனும், 12 வயதில் மகளும் உள்ளனர். செல்வம் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கும் பணத்தை மது குடித்து செலவு செய்து வந்தார். இதனால், கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் விஜயலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக, செல்வம் அக்கம் பக்கத்தில் கூறியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த திருச்செங்கோடு டவுன் போலீசார், விஜயலட்சுமியின் சடலத்தை மீட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில், விஜயலட்சுமி மூச்சுத் திணறடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, செல்வத்தை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், அவர் விஜயலட்சுமியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீசாரின் விசாரணையில் செல்வம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: நேற்று முன்தினம் நான் வீட்டில் மது அருந்தினேன். அப்போது, வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காமல், மது குடிப்பதாக விஜயலட்சுமி தகராறில் ஈடுபட்டார். நான் அப்படி தான் குடிப்பேன் எனக்கூறியதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த நான் அவரது மூக்கையும், வாயையும் சேர்த்து பொத்தியதில் அவர் இறந்துவிட்டார். இதனால், கொலையை மறைக்க திட்டமிட்டு, அவரது கழுத்தில் துப்பட்டாவை சுற்றி தூக்கில் தொங்கவிட முயன்றேன்.
ஆனால், நான் போதையில் இருந்ததால் அவரை தூக்கில் தொங்கவிட முடியாததால், துப்பட்டாவை கத்தியால் அறுத்து, அவர் தூக்கில் தொங்கியதால் காப்பாற்ற முயன்றது போல் சம்பவத்தை சித்தரித்தேன். ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையால் மாட்டிக்கொண்டேன். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, செல்வத்தை திருச்செங்கோடு நீதிமன்றத்தில் நீதிபதி சுரேஷ்பாபு முன் போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவரை 15 நாள் காவலில் அடைக்க உத்தரவிட்டதால் சேலம் மத்திய சிறையில் செல்வத்தை போலீசார் அடைத்தனர்.