செங்கல்பட்டு: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவளூர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (41). இவர், அதே பகுதியை சேர்ந்த முனுசாமி என்பவரது மகள் மாரியம்மாள் (35). இவர்கள், கடந்த 12.7.2013 அன்று காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், சில மாதங்களுக்கு பிறகு மாரியம்மாள் கர்ப்பமாக இருந்தபோது குழந்தை வயிற்றிலேயே இறந்து விட்டதால் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை வெளியே எடுக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இதனால், குமரேசன் தினந்தோறும் குடித்து விட்டு தனது மனைவி மாரியம்மாளை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 19.11.2014ம் தேதி வழக்கம்போல குடித்து விட்டு வந்த குமரேசன் தனது மனைவியிடம் சண்டை போட்டுள்ளார். அப்போது, போதை தலைக்கேறியதால் மாரியம்மாளின் தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக சசிரேகா வாதாடினார்.
இந்நிலையில், குமரேசன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் உறுதியானதால், அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற நீதிபதி எழிலரசி தீர்ப்பு அளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாருக்கு ரூ.7 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது.