குலசேகரம்: அடுத்தவர் மனைவிக்கு முத்தம் கொடுத்த விவகாரத்தில் டிரைவரை தற்கொலைக்கு தூண்டியதாக பாஜ கிளை செயலாளரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே பத்துகாணி பகுதியை சேர்ந்தவர் அனில்குமார் (எ) அனிகுட்டன் (48). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி தன்னியா (40). அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த பா.ஜ கிளை செயலாளர் மதுகுமார் (52) தன்னியாவுக்கு முத்தம் கொடுத்ததை அனிகுட்டன் நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனை அறிந்த மதுகுமார் அனிகுட்டனை வாளால் வெட்ட முயன்றார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் மதுகுமார் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.
இந்நிலையில் கைதான மதுகுமார் ஜாமீனில் வந்ததும் அவர்களுக்கு இடையே மீண்டும் தொடர்பு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அனிகுட்டன் மனைவியை கம்பியால் சரமாரியாக தாக்கிவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து ஆட்டோ டிரைவரை தற்கொலைக்கு தூண்டியதாக ஆறுகாணி போலீசார் வழக்குப்பதிந்து நேற்று முன்தினம் இரவு மதுகுமாரை கைது செய்தனர். இதையறிந்த பாஜ கட்சியினர் ஆறுகாணி காவல் நிலையத்தில் திரண்டனர். பின்னர் அவரை குழித்துறை அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மதுகுமாரை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து அவர் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.