போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே சாலிகொக்கரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன்கள் பாபு(32), மூர்த்தி(30). கட்டிட தொழிலாளிகள். பாபு கோவையிலும், மூர்த்தி உள்ளூரிலும் வேலை செய்துள்ளனர். பாபு திருமணம் செய்யவில்லை. அவர் கோவையில் இருந்து அடிக்கடி சொந்த ஊருக்கு வந்து தம்பி மனைவியான மஞ்சுளாவிடம் சில்மிஷம் செய்து, தகாத உறவிற்கு அழைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது கணவர் மூர்த்தியிடம் கூறினார். பின்னர் மஞ்சுளா கோபித்துக்கொண்டு கடந்த 3 மாதங்களுக்கு முன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் போதையில் வீட்டிற்கு வந்த பாபு, தம்பியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மூர்த்தி, தடியால் சரமாரியாக தாக்கி பாபுவை கொன்று சாக்கு பையில் கட்டி வீட்டிற்கு அருகே உள்ள கிணற்றில் வீசியுள்ளார். அப்பகுதியினர் புகாரின்படி மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி, கிணற்றில் சாக்கு மூட்டையில் அழுகிய நிலையில் கிடந்த பாபு உடலை மீட்டனர். பின்னர் மூர்த்தியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.