பாவூர்சத்திரம்: அரசு பஸ் கண்டக்டரை கார் ஏற்றி கொலை செய்த மனைவி, அவரது கள்ளக்காதலன் மற்றும் டிரைவர் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே மேலபட்டமுடையார்புரத்தைச் சேர்ந்தவர் வேல்துரை(43). பாபநாசம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக் ர். இவரது மனைவி பேச்சியம்மாள் என்ற உமா. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். பாவூர்சத்திரம் அருகே அடைக்கலபட்டணத்தில் முத்துசேர்மன் என்ற சுதாகர் (41) வீட்டில் வாடகைக்கு குடியிருந்தனர். சுதாகர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் அதிகாலை வேல்துரை பணிக்கு செல்ல பைக்கில் பாவூர்சத்திரத்திற்கு சென்று கொண்டிருந்தார். நெல்லை – தென்காசி நான்கு வழிச்சாலையில் சிவகாமிபுரம் விலக்கு அருகே சென்றபோது பின்னால் வந்த கார், பைக் மீது வேகமாக மோதிவிட்டு சென்றது. இதில் வேல்துரை சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து பாவூர்சத்திரம் ேபாலீசார் வழக்குப்பதிந்து கார் டிரைவரான பூலாங்குளத்தைச் சேர்ந்த ஆறுமுகத்தை (36) பிடித்து விசாரித்தனர். இதில் விபத்தை ஏற்படுத்திய காரின் உரிமையாளர் முத்துசேர்மன் என்ற சுதாகர் (41) என்பதும், அவரது தூண்டுதலின் பேரிலேயே வேல்துரையின் பைக் மீது காரை மோதியதாகதெரிவித்துள்ளார்.
இதையடுத்து சுதாகரை பிடித்து விசாரித்தனர். இதில், சுதாகருக்கும் வேல்துரையின் மனைவி பேச்சியம்மாளுக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளது. இதை வேல்துரை பலமுறை கண்டித்துள்ளார். தங்களின் உறவுக்கு இடையூறாக இருக்கும் வேல்துரையை தீர்த்துக்கட்ட இருவரும் திட்டம் தீட்டியுள்ளனர் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து, பேச்சியம்மாள் என்ற உமா, கள்ளக்காதலன் முத்துசேர்மன் என்ற சுதாகர், கார் டிரைவர் ஆறுமுகம் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.