பென்னாகரம்: குடும்ப தகராறில் மனைவி தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவன், போலீசுக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்ைப ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த ஏரியூர் திருத்தங்கல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன்(55). இவரது மனைவி சின்னபொண்ணு(50). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். 3 பேருக்கும் திருமணமாகி, தனியாக வசித்து வருகின்றனர். இதனால் கோவிந்தன் தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்தார். இருவரும் சொந்த நிலத்தில் விவசாயம் செய்தும், ஆடு மேய்த்தும் பிழைப்பு நடத்தி வந்தனர்.
இந்நிலையில், கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று விவசாய நிலத்தில் சின்னபொண்ணு ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த கோவிந்தன், மனைவியுடன் வழக்கம்போல் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரம் அடைந்த கோவிந்தன், அருகில் இருந்த பெரிய கல்லை எடுத்து சின்னபொண்ணுவின் தலை மீது போட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர், ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதை கண்ட கோவிந்தன், ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்து விட்டோமே என்று கலங்கினார். மேலும், தன்னை போலீசார் கைது செய்து விடுவார்கள் என பயந்து, வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உயிரிழந்த இருவரது சடலங்களையும் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.