பல்லாவரம்: குன்றத்தூர் அருகே, வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் பைக் மீது கார் மோதியதில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். இதில் 4 நாட்களுக்கு முன்பு பிறந்த தனது குழந்தையை பார்க்கச் சென்றபோது விபத்தில் அவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (26). இவர், குன்றத்தூர் அடுத்த எருமையூரில் தங்கி நெடுஞ்சாலைத்துறையில் சாலை போடும் பணியில் ஒப்பந்த டிரைவராக வேலை செய்து வந்தார். இவரது திருமணமாகி நர்மதா என்ற மனைவி உள்ளார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு நர்மதாவிற்கு குறை பிரசவத்தில் குழந்தை ஒன்று பிறந்ததால் தற்போது சென்னை அரசு மருத்துவமனையில் தங்கியிருந்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரைப் பார்ப்பதற்காக நேற்று ராஜேந்திரன் தனது பைக்கில் வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் தவறாக எதிர் திசையில் வேகமாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது குன்றத்தூர் நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் ராஜேந்திரன் வந்த பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்த ராஜேந்திரன் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் காரில் வந்தவர்கள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
விபத்து நடந்த பகுதியில் ராஜேந்திரனின் உறவினர்கள் சாலை பணியை முடித்துவிட்டு வேனில் வந்தபோது, இறந்து கிடந்த ராஜேந்திரன் உடலைப் பார்த்து கதறி அழுதனர். ராஜேந்திரனின் சடலத்தை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் ஸ்டார்ட் ஆகாததால் அங்கிருந்த போலீசாரும், பொதுமக்களும் அதனை தள்ளி ஸ்டார்ட் செய்து அனுப்பி வைத்தனர். பிறந்த குழந்தையை பார்க்க சென்ற போது நடந்த விபத்தில் டிரைவர் ராஜேந்திரன் பலியான சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.