மதுரை: மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
கேரளாவில் பெய்து தென்மேற்கு பருவமழை தமிழ்நாட்டிலும் நீடிக்கிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. இதன்படி மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் காலை வரை விடிய, விடிய கனமழை பெய்தது. விருதுநகர் மாவட்டம்: விருதுநகர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத்தில் இன்று காலை ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது.
இன்று காலை 6 மணி வரை மாவட்டத்தில் விருதுநகரில்-91 மி.மீ., திருச்சுழி-81 மி.மீ., காரியாபட்டி-13.20 மி.மீ., சாத்தூர்-15.20 மி.மீ., சிவகாசி-28.40 மி.மீ., பிளவக்கல்-22.60 மி.மீ., வத்திராயிருப்பு-31.20 மி.மீ., கோவிலாங்குளம்-58.30 மி.மீ., வெம்பக்கோட்டை-14.20 மி.மீ., அருப்புக்கோட்டை-40 மி.மீ., திருவில்லிபுத்தூர்-3.30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக விருதுநகரில் 91 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 33.20 மி.மீ. மழை பெய்துள்ளது. இந்த மழையால் விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல்லில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று காலை 4 மணி முதல் பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் பூங்கொடி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று அதிகாலை 4 மணி முதல் மாவட்டம் முழுவதும் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது’ என தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி: தேனி மாவட்டத்தில் நேற்று இரவு பலத்த மழை கொட்டியது. குறிப்பாக தேனியைச் சுற்றி உள்ள பழனிசெட்டிபட்டி, வீரபாண்டி, அன்னஞ்சி, அரண்மனைப்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், ஆண்டிபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிச்சம்பட்டி, ராஜதானி, தெப்பம்பட்டி, கண்டமனூர், க.விலக்கு, வைகை அணை பகுதி, அணைக்கரைப்பட்டி, திம்மரசநாயக்கனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு பலத்த மழை பெய்தது. நள்ளிரவில் தொடங்கிய மழை அதிகாலை வரை நீடித்தது. இதனால் சாலைகளிலும், தெருக்களிலும் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. ஓடைகள், கண்மாய்களில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. தேனி-மதுரை சாலையில் ஆங்காங்கே தேங்கி இருக்கும் மழை நீரால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஆண்டிபட்டி ரயில்வே பாலத்தில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த மழை நீரை அகற்றும் பணியில், பேரூராட்சி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்று காலையிலும் சாரல் மழை தொடர்ந்து அங்காங்கே பெய்து வருகிறது. மழையளவு வருமாறு: ஆண்டிபட்டி 31.6 மி.மீ. அரண்மனைப்புதூர் 13.8 மி.மீ, வீரபாண்டி 4.8 மி.மீ. பெரியகுளம் 89.2 மி.மீ மஞ்சளாறு 15 மி.மீ, சோத்துப்பாறை அணை 95 மி.மீ, வைகை அணை 64 மி.மீ போடிநாயக்கனூர் 15.4 மி.மீ, முல்லைப் பெரியாறு அணை17.4 மி.மீ, தேக்கடி 2.4 மி.மீ சண்முகாநதி அணை 1 மி.மீ என மழை பதிவாகியுள்ளது. இதேபோல, சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை பரவலாக லேசான மழையும், காரைக்குடி, தேவகோட்டையில் கனமழையும் பெய்தது.
ராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், மண்டபம், உச்சிப்புளி, ஆர்.எஸ்.மங்கலம், திருவாடனை, தொண்டி, திருப்புல்லானி பரமக்குடி, நயினார்கோயில், பார்த்திபனூர், அபிராமம், கமுதி, கடலாடி, முதுகுளத்தூர், சாயல்குடி மற்றும் திருஉத்தரகோசமங்கை அதிகாலை 3 மணி முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த மாதம் முதல் உழவார பணிகளை செய்து நெல், சிறுதானியங்கள் விதைகள் விதைத்த விவசாயிகள், உழவார பணிகள் செய்ய காத்திருந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் குளிர்காற்று, மேக மூட்டத்துடன் கூடிய சிறுமழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நனைந்தபடி சென்றனர். இதனை போன்று சாலை உள்ளிட்ட பொது இடங்களில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நடைபாதை வியாபாரிகள், கூலி தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை ஓரளவு பாதிக்கப்பட்டது.
திருச்சுழி அருகே காட்டாற்று வெள்ளம் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், க.விளக்கு செல்லும் சாலையில் மறவர்பெருங்குடி அருகே உள்ள உப்போடையைக் கடக்கும் தரைப்பாலத்தில் அதிகளவு வெள்ளம் செல்வதால், அப்பகுதி மக்கள் பாலத்தை கடக்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தற்போது உப்போடையில் அதிகளவில் கட்டாற்று வெள்ளம் செல்வதால் தரைப்பாலத்தை கடக்க முடியாமல் பொது மக்கள் அவதிபட்டு வருகின்றனர். மழைநீர் தரைப்பாலத்தை மூழ்கடித்துச் செல்வதால் பொது மக்களும், இரு சக்கர வாகனங்களும் செல்ல முடியாமல் எம்.ரெட்டியபட்டி வழியாக கூடுதலாக சுமார் 10 கி.மீ. சுற்றி கமுதி, சாயல்குடி போன்ற ஊர்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் மதுரை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது.