?எந்த தோஷம் இருந்தாலும் பரிகாரம் செய்தால் போய்விடுமா?
– வண்ணை கணேசன், சென்னை.
இந்த சந்தேகம் எல்லோருடைய மனதிலும் இடம்பிடித்திருக்கிறது. பரிகாரம் என்றால் என்ன என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஆன்மிக ரீதியாகவும், ஜோதிட ரீதியாகவும் இந்தக் கேள்விக்கான பதிலைக் காண்போம். இன்றைய சூழலில் அவரவர் ஜாதகங்கள் ஆராயப்பட்டு நவக்ரஹங்களின் சஞ்சார நிலையை வைத்து பெரும்பாலான பரிகாரங்கள் சொல்லப்படுகின்றன. ஜனன ஜாதகத்தின்படி, அவரவருக்குரிய தசாபுக்தி காலங்களில் அதற்கென விதிக்கப்பட்ட பலன்களை அனுபவித்தே ஆக வேண்டும். பூர்வ புண்யத்தின் அடிப்படையில் விதிப்பலன்கள் எழுதப்படுகின்றன. தீயகிரஹங்களின் தசாபுக்தியும், சரியில்லாத கிரஹ நிலையும் நிலவும்போது கெடுபலன்களை அனுபவித்து ஆக வேண்டும் என்பது விதி. இந்த நிலையில், பிறந்த ஜாதகத்தில் பூர்வ புண்ய ஸ்தானம் வலுவாக இருந்துவிட்டால், அம்மனிதன் செய்யும் பரிகாரங்கள் நிச்சயம் பலிக்கும்.
கெடுபலன்கள் குறைந்து நற்பலன்கள் கிடைக்கும். மாறாக, பூர்வ புண்ய ஸ்தானம் வலுவற்று இருந்தால், அவன் அனுபவிக்க வேண்டியதை நிச்சயமாக அனுபவித்தே ஆக வேண்டும். அதிலிருந்து தப்பிக்கும் வழிமுறையைத் தேடக்கூடாது. பலனை அனுபவிப்பதே அவன் செய்யும் பரிகாரம். மாறாக தப்பிக்கும் வழிமுறையாக பரிகாரங்களைத் தேடத் தொடங்கினால், நல்ல தசாபுக்தி காலத்திலும் நற்பலன்களை அனுபவிக்க இயலாது போய்விடும். கெட்ட நேரத்தில் அவன் கெடுபலன்களை அனுபவித்துவிட்டானேயாகில் நல்ல தசாபுக்தி நடக்கும் காலத்தில் நற்பலன்களையும் அனுபவிப்பான். ஐம்பெருங்காப்பியங்களுள் பிரதானமான சிலப்பதிகாரம் நமக்குச் சொல்வது “ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’’ என்பதுதானே. ஊழ்வினைப் பயனை அனுபவித்துத்தான் ஆகவேண்டும் என்பது அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. பரிகாரங்கள் செய்வதால் கெடுபலன்கள் உண்டாக்கும் தாக்கத்தினை வேண்டுமானால் குறைத்துக் கொள்ள முடியும். ஆயினும் அதன் அடிப்படைப் பலனை நிச்சயம் அனுபவித்தே ஆகவேண்டும். ஒரு ஜீவனுக்கு ஒருவேளை வயிறார உணவளித்தாலே அவன் அறியாமல் செய்த பாபம் அகலுகிறது என்கிறது தர்மசாஸ்திரம். இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் உதவி செய்வோம். பொருளாதார ரீதியாக மட்டுமல்ல. படிப்பறிவு உள்ளவர்கள் பாமரனுக்கு படிக்கக் கற்றுக் கொடுக்கலாம். அதுவும் ஒருவகையில் பரிகாரமே. பரிகாரம் என்பது செய்த தவறுக்கான பிராயச்சித்தம் அல்ல. விதிப்பயனை மாற்றி அமைக்கும் வழிமுறையும் அல்ல. பரிகாரம் செய்வதால் விதிப்பயனை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் கிடைக்கிறது. மனம் பக்குவம் அடைந்தாலே துன்பம் என்பது
காணாமல் போகிறது.
?வீடு கட்ட கடகால் போட்டபின் எத்தனை மாதத்தில் கட்டி முடித்துவிட வேண்டும்?
– பொன்விழி, அன்னூர்.
அது, நாம் கட்டும் வீட்டின் அளவைப் பொறுத்தது. பொதுவாக குடியிருப்பதற்காக ஒரு வீட்டைக் கட்டும்போது, கடகால் போட்ட நாளில் இருந்து பஞ்சபட்சம் என்று சொல்லப்படும் 75 நாட்கள் முதல் ஐந்து பஞ்சபட்சம் வரை அதாவது 25 பட்சம் என்ற கால அளவில், 375 நாட்களுக்குள் வீடு கட்டி முடித்து, கிருஹபிரவேசம் செய்துவிட வேண்டும். கால தாமதம் ஆகும் பட்சத்தில், மீண்டும் ஒருமுறை அதற்குரிய பிராயச்சித்த பூஜைகளைச் செய்துவிட்டு பணியைத் தொடர வேண்டும். கடகால் போட்ட நாளில் இருந்து மூன்று மாதம் முதல் அதிக பட்சமாக ஒரு வருடத்திற்குள் வீட்டை கட்டி முடித்துவிட வேண்டும் என்று நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளலாம்.
?ஜாதகத்தில் பன்னிரண்டு கட்டம் அமைப்பது எதனால்?
– சு.பாலசுப்ரமணியன், ராமேஸ்வரம்.
அது மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய பன்னிரண்டு ராசி மண்டலங்களைக் குறிக்கிறது. அவற்றையே 12 பாவகங்கள் என்ற பெயரில் நம் வாழ்வின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான செயல்களுக்கும் பொருத்திப் பார்த்து பலன் உரைக்கிறார்கள் ஜோதிடர்கள்.
?வீட்டில் சிலை வழிபாடு கூடாது என்கிறார்களே, இது சரியா?
– என்.இளங்கோவன், மயிலாடுதுறை.
சரியே. கற்சிலைகளை வீட்டில் வைத்து வழிபாடு செய்யக் கூடாது. பஞ்சலோகத்தில் ஆன சிலைகள்கூட அளவில் சிறியதாக இருக்க வேண்டும். அங்குஷ்ட மாத்ரம் என்று சொல்வார்கள். அதாவது அந்த வீட்டின் எஜமானருடைய கட்டைவிரல் அளவிற்கு மிகாமல் இருக்கக்கூடிய சிலைகளை வைத்து வழிபடலாம். அதைவிட அளவில் பெரியதாக சிலைகள் இருக்கும் பட்சத்தில், அவற்றிற்குரிய பூஜாவிதானத்தின்படி முறையாக பூஜித்து வரவேண்டும். ஒரு ஆலயம் போல அனைத்துவிதமான உபசார பூஜைகளையும் தினசரி செய்து வழிபட வேண்டும். வீட்டில் இது சாத்தியமில்லை என்பதால், சிலைகளை வீட்டில் வைத்து வழிபடக்கூடாது. மரத்தால் செய்யப்பட்ட சிலைகளுக்கு இந்த விதி பொருந்தாது.
?கடவுளின் படத்தைப் போல கோயிலின் கோபுரம் உள்ள படத்தை பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்வது சரியா?
– ஜெ.மணிகண்டன், வேலூர்.
அவசியம் இல்லை. கோபுரதரிசனம் கோடி புண்ணியம் என்ற பெயரில் இதுபோன்ற படத்தை வைத்து பூஜை செய்கிறார்கள். இந்த சொற்றொடர் கோபுரத்தை நேரில் தரிசிப்பவர்களுக்கு மட்டும்தான் பொருந்துமே தவிர, அதே கோபுரத்தை படமாக வைத்து வழிபடுபவர்களுக்கு அல்ல.
?நவகிரகங்களை சனிக்கிழமை நாளில் சுற்றி வணங்குவது மிகச் சிறந்ததா?
– த.சத்தியநாராயணன், அயன்புரம்.
அப்படி எல்லாம் விதிமுறை ஏதும் இல்லை. எல்லா நாட்களிலும் சுற்றி வந்து வணங்கலாம். நவகிரஹம் என்றாலே சனி மட்டுமே நம் கண் முன்னால் வந்து நிற்பதால் இதுபோன்ற சந்தேகம் உதிக்கிறது. நவகிரஹங்கள் இறைவன் இட்ட பணியைச் செய்து கொண்டிருக்கும் பணியாளர்கள். ஆலயத்தில் பரிவார தேவதைகளில் ஒன்றாக அவர்களையும் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். எந்த நாளாக இருந்தாலும், ஆலயத்திற்குச் செல்லும்போது மூலவரை வழிபட்ட பின்பு பிரகாரம் சுற்றி வரும்போது நவகிரஹங்களையும் வணங்கிவிட்டு வருவது நல்லது. இதில் கிழமை பேதம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.