?வாஸ்துப்படி ஒரு வீடு நன்றாக இல்லை என்பதை நான் எப்படி அறிவது?
– ருக்மணி, ஸ்ரீவில்லிபுத்தூர்.
மிகவும் சுலபம். ஏற்கெனவே கட்டப்பட்ட ஒரு வீடு வாங்குவதற்கு அல்லது வாடகைக்குப் பார்க்கப் போகிறீர்கள் என்றால், கையில் ஏதேனும் தின்பண்டம் மற்றும் குடிநீர் எடுத்துச் செல்லுங்கள். குறிப்பாக, சூரிய அஸ்தமனத்திற்குள் அதாவது பகல் பொழுதில்தான் வீட்டைப் பார்க்கச் செல்ல வேண்டும். அந்த வீட்டை நன்றாக சுற்றிப்பாருங்கள். வீட்டில் உள்ள ஜன்னல்கள் மற்றும் கதவுகள் எல்லாவற்றையும் திறந்துவையுங்கள். வீட்டிற்குள் வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் எப்படி உள்ளது என்பதையும் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த வீட்டிற்குள்ளேயே அமர்ந்துகொண்டு, கையில் கொண்டுவந்திருக்கும் தின்பண்டத்தை சாப்பிட்டுவிட்டு தண்ணீர் அருந்துங்கள். அன்று மாலையோ அல்லது மறுநாளோ பதில்சொல்வதாக சொல்லிவிட்டு வாருங்கள்.
நீங்கள் சாப்பிட்ட தின்பண்டம் நன்றாக ஜீரணம் ஆகிவிட்டது என்று சொன்னால், அந்த வீட்டில் பிரச்னை ஏதும் இல்லை என்று பொருள். மாறாக அஜீரணமாகவோ, ஒரு வித ஏப்பம் வந்துகொண்டோ அல்லது வாந்தி, பேதி பிரச்னைகளை சந்தித்தாலோ, நிச்சயமாக அந்த வீட்டில் தோஷம் இருப்பதை புரிந்துகொண்டு விலக்கிவிடுங்கள். அதே போல, ஒரு வீட்டினை பார்த்துக் கொண்டிருக்கும்போது வெளியில் இருந்து நம் காதில் வந்து விழும் ஒலிச்சத்தம் அல்லதுநேர்மறையான வார்த்தைகள் அந்த வீட்டில் தோஷம் ஏதுமில்லை என்பதை உணர்த்தும். உதாரணத்திற்கு யாரோ ஒருவர் தெருவில் யாருடனோ செல்போனில் பேசிக் கொண்டே சென்றுகொண்டிருப்பார். எல்லாம் நல்லபடியாக நடக்கும் போன்ற நேர்மறையான வார்த்தைகளை அவர் எதிர்முனையில் இருப்பவரிடம் பேசிக் கொண்டே சென்றால், அதனையே அசரீரி வாக்காகக் கொண்டு தாராளமாக நீங்கள் அந்த வீட்டினை வாங்கி விடலாம். அங்கே வாஸ்து உட்பட எந்தவிதமான தோஷமும் இருக்காது என்பதையும் எளிதாகப் புரிந்துகொள்ள இயலும். உணவும் தண்ணீரும் வாஸ்துப்படி வீடு உள்ளதா என்பதை அறிந்துகொள்ள உதவும் எளிதான உபகரணங்கள் ஆகும்.
?தென்மேற்கு அறை ஏன் சக்திவாய்ந்த அறையாகக் கருதப்படுகிறது?
– வே.அருணாச்சலம், சென்னை.
தென்மேற்கு மட்டுமல்ல, வடகிழக்கும்கூட பலம் பொருந்தியதுதான். இந்த இரண்டையும்தான் தெய்வீக மூலைகள் என்று குறிப்பிடுவார்கள். தென்மேற்கு பருவக்காற்று, வடகிழக்கு பருவக்காற்று என பருவநிலையைக் குறிப்பிடுவதற்கு உதவுவதும் இந்த இரண்டு திசைகளும்தானே. குறிப்பாக, தென்மேற்கு மூலையை கன்னி மூலை என்றும், வடகிழக்கு மூலை என்பது ஈசான்ய மூலை என்றும் சொல்வார்கள். இந்த ஈசான்ய மூலை என்பது மருவி நாளடைவில் சனிமூலை என்றாகி விட்டது. உண்மையில், சனிக்கும் இந்த மூலைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. கன்னி மூலை என்பது பிள்ளையார் மூலை (கன்னிமூலை கணபதி என்ற வார்த்தையை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்) என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. ஈசான்ய மூலை என்பது சிவனின் அம்சத்தைப் பெற்றது. இந்த இரண்டுக்கும் மூலைகளும் தெய்வ சாந்நித்யம் நிறைந்தது என்பதால், சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
?ஐந்து முக ருத்ராட்சத்தை அனைவரும் அணிகிறார்களே, விரதக் கட்டுப்பாடு தேவையில்லையா?
– சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
வயது வித்தியாசம் மற்றும் ஆண் பெண் பேதமின்றி அனைவரும் பஞ்சமுக ருத்ராட்சத்தை அணியலாம். பெரிதாக விரதக் கட்டுப்பாடு அவசியமில்லை என்றாலும், மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற தகாத செயல்களை நிச்சயமாக செய்யக்கூடாது. ருத்ராட்சம் அணியும்போது மனம் ஒருமுகப்படும் என்பதாலும், இறைசிந்தனை தூண்டப்பட்டு காம, குரோத, மதமாச்சர்யங்கள் கட்டுக்குள் வைத்திருப்போம் என்பதாலும், பஞ்சமுக ருத்ராட்சம் அணிவது என்பது நற்பலனையே தரும்.
?வீரபத்திரர் – காலபைரவர் யார் என்பதை விளக்கமாகக் கூறவும்.
– ஏ.மூர்த்தி,திருவள்ளூர்.
வீரபத்திரர் தட்சனின் யாகத்தை அழிக்க வேண்டி சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்டவர். எம்பெருமானின் ஜடாமுடியில் இருந்து தோன்றியவர். தட்சனின் யாகத்திற்கு சென்ற பார்வதி தேவி அதே யாகத்தீயில் விழுந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். பார்வதிதேவி தீயில் விழுந்து உயிர்தியாகம் செய்ததை அறிந்த சிவபெருமான், சினம் கொண்டு தன் ஜடாமுடியில் இருந்து வீரபத்திரரையும் பத்ரகாளியையும் தோற்று வித்தார் என தேவி பாகவதத்தின் ஏழாவது ஸ்காந்தம் உரைக்கிறது. வீரபத்திரர் சிவபெருமானின் எட்டு மெய்காப்பாளர்களில் ஒருவர் ஆவார். காலபைரவர் என்பவர் சிவபெருமானின் மற்றொரு அம்சமே. ருத்ர ரூபமாக இருப்பவர். அந்தகாசுரனை சம்ஹாரம் செய்தபோது இறைவனின் அம்சமாகத் தோன்றிய எட்டு பைரவர்களுள் முதன்மையானவர்.
காசிமாநகரின் காவலராக இருப்பவரும் இவரே. அனைத்து சிவாலயங்களின் பாதுகாப்புப் பணியில் இருப்பவரும் காலபைரவ மூர்த்தியே ஆவார். ஆலயத்தில் அர்த்தஜாம பூஜையை முடித்த பின்னர் ஆலய அர்ச்சகர் சந்நதியை பூட்டி சாவியை காலபைரவர் சந்நதியில் வைத்துவிடுவார். மீண்டும் மறுநாள் காலையில் பைரவரிடம் அனுமதி பெற்று சாவியை எடுத்துச் சென்று சந்நதியைத் திறப்பார். காலபைரவரே சிவாலயத்தின் பாதுகாவலர் ஆக விளங்குகிறார்.
?பூஜை மணியின் கைப்பிடியில் சக்கரம், அனுமன், நந்தி என இறைவடிவங்கள் உள்ளன. இவற்றிற்கும் அபிஷேக ஆராதனை செய்ய வேண்டுமா?
– ராமச்சந்திரன், திரு.வி.க.நகர்.
செய்ய வேண்டும். நித்தியபூஜை முடிந்தவுடன் அதாவது வீட்டில் உள்ள மற்ற தெய்வ விக்கிரகங்களுக்கு அபிஷேகம், அர்ச்சனை, நைவேதியம், தீபாராதனை ஆகியவற்றை செய்து முடித்தபிறகு, இனிமேல் அன்றைய தினம் மணி அடிப்பதற்கான வேலை இல்லை என்றானவுடன், மணியின் மேல் உள்ள தெய்வ வடிவத்திற்கு சுத்தமான ஜலம்விட்டு அபிஷேகம் செய்து சந்தனம், குங்குமம், புஷ்பம் வைத்து சிறிதளவு அன்னமும், பருப்பும் நைவேத்தியம் செய்து அதனைக் கொண்டுபோய் காகத்திற்கு வைக்க வேண்டும். இவற்றிற்குத் தனியாக தீபாராதனை செய்ய வேண்டிய அவசியமில்லை.
?பலர் தம் உடலை வருத்தி இறைவனை வழிபடுகின்றனர், இது அவசியமா?
– கே.அனந்தநாராயணன், கன்னியாகுமரி.
இது இறைவனின்பால் அவர்கள் வைத்திருக்கும் பக்தியின் வெளிப்பாடு தானே. இதனை தவறாகக் கருத முடியாது. தீமிதித்தல், தீச்சட்டி ஏந்துதல், அலகு குத்திக்கொள்ளுதல், தலையில் தேங்காயை உடைத்தல் என்று பலவிதமாக உடலை வருத்தி வழிபாடு மேற்கொள்கின்றனர். இவை அனைத்தும் இறைவனின்பால் அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும், முழுமையான ஈடுபாட்டினையும் உணர்த்துவதால் இதில் எந்தவிதமான தவறும் இல்லை.