Monday, July 22, 2024
Home » ஏன் பதினான்கு ஆண்டுகள் காட்டுக்குப் போக வேண்டும்?

ஏன் பதினான்கு ஆண்டுகள் காட்டுக்குப் போக வேண்டும்?

by Nithya
Published: Last Updated on

மனிதர்களின் சுபாவம் விசித்திரமானது. சுயமாகச் சிந்திக்கின்றவர்கள் மிகவும் குறைவு. பெரும்பாலான மனிதர்கள் தங்கள் நலன்களுக்காக பிறரைச் சார்ந்து இருக்கின்றார்கள். அப்படி இருப்பது தவறல்ல என்றாலும்கூட, பல நேரங்களில் மற்றவர்களின் கைப்பாவையாக மாறிவிடும் அபாயமும் நேர்ந்துவிடுகின்றது. நாம் ஒருவரை நேசிப்பதாக இருந்தாலும், வெறுப்பதாக இருந்தாலும், பெரும்பாலும் காரணமில்லாமலே நேசிக்கிறோம். காரணம் இல்லாமலேயே வெறுக்கிறோம். ஏன் நேசிக்கிறோம் ஏன் வெறுக்கிறோம் என்பதை ஆராய்வதற்குக்கூட நம் மனம் ஒப்புக் கொள்வது கிடையாது. வெறுத்த விஷயமே நேசிப்புக்கு உள்ளாகிறது, நேசித்த விஷயமே வெறுப்புக்கு உள்ளாகிறது இவைகளுக்கான காரணங்கள் பெரும்பாலும் கற்பனையின் சார்பு கொண்டதாகவே இருக்கின்றன.

அதைவிட மிகவும் அபாயம் நம்மை நேசிப்பவர்களாக கருதுகின்ற சிலரிடம் நாம் அடிமையாகி விடுகின்றோம். அவர்கள் எப்படியெல்லாம் நம்மை வளைக்க முயல்கின்றார்களோ, அதற்கெல்லாம் நாம் வளைந்து விடுகின்றோம். அதற்குப் பிறகு நாமே நினைத்தாலும்கூட அந்த ஆபத்திலிருந்து நம்மால் மீள முடிவதில்லை. சில குடும்பங்களில் கணவன் – மனைவி இருவருக்கும் உள்ள நம்பிக்கை குறைவதற்கு யாரோ மூன்றாவது மனிதர் காரணமாகிவிடுகின்றார்.

அந்த மனிதர் கணவரையோ, மனைவியோ தன்னுடைய இஷ்டத்துக்கு கைப்பாவையாக ஆட்டிவைக்கிறார். இதில் என்ன விசேஷம் என்று சொன்னால், ஆட்டி வைக்கப்படும் நாம், முழுக்க முழுக்க நம்முடைய நன்மைக்காகத்தான் அந்த நபர் செயல்படுகிறார் என்று நம்பி, நம்முடைய வாழ்க்கையை இழக்கின்றோம். தகாத காரியங்களைச் செய்கின்றோம். இந்த அதீத நம்பிக்கையானது, சுய பரிசோதனை செய்து கொள்ளவும், காரண காரியங்களை ஆராயவும் மறுத்துவிடுகின்றது. தசரதனின் அன்பையும் ராமனின் அன்பையும் மிகவும் பெருமையாகவும் நம்பிக்கைக்கு உரியதாகவும் கருதிய கைகேயி, மந்தரையின் சூழ்ச்சிக்கு ஆட்பட்டவுடன் தன்னை இழக்கிறாள். தன்னுடைய அறிவை இழக்கிறாள்.

அதற்குப் பிறகு அவள் எதையும் சிந்தித்துப் பார்க்கும் நிலையில் இல்லை. தம்முடைய வாழ்க்கை எப்படி எல்லாம் மாற்றப்படும் என்பதைக் குறித்து ஒரு கணம்கூட அவள் ஆராயவில்லை. அவள் தன்னை முழுமையாக, தன்னை ஆட்டிப் படைக்கும் மந்தரையிடம் ஒப்படைத்துவிடுகிறாள்.

அதனால் தசரதனின் சமாதானங்களையோ, தன்னுடைய மகன் பரதன் தன்னுடைய நடவடிக்கைகளை எப்படி எதிர் கொள்வான், தான் செய்கின்ற காரியங்களில் அவனுக்கு மகிழ்ச்சி ஏற்படுமா, தான் இதுநாள் வரை நேசித்த ராமன் தன்னைப் பற்றி என்ன நினைப்பான், ராமனின் தாய் கோசலை தன்னைப் பற்றி என்ன நினைப்பாள், இந்த அயோத்தி மக்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி எல்லாம் அவள் கொஞ்சமும் கவலைப்படவில்லை.

தன்னை ஆட்டுவித்த மந்தரையிடம் தன்னை ஒப்புவித்துவிடுகின்றாள். அது முதல் கைகேயி பேசவில்லை. கைகேயியின் வாழ்க்கையை மூன்றாவது மனிதராக அவள் வாழ்க்கையில் வேலைக்காரியாக நுழைந்த மந்தரை தீர்மானிக்கிறாள். மந்தரை என்ன யோசனை சொல்கின்றாளோ அந்த யோசனைப்படி கைகேயி ஆடுகிறாள். இதுதான் பல குடும்பங்களிலும் நடக்கிறது என்பதற்காகத்தான் இத்தனையும் நாம் ராமாயணத்தோடு இணைத்து பார்க்கிறோம்.

‘‘ராமன் ராஜ்ஜியத்தை ஆளப்போகிறான் என்று கேட்டவுடன், ஒரு முத்துமாலையை பரிசு தந்த அதே கைகேயி, இப்பொழுது எக்காரணத்தை முன்னிட்டும் ராமன் இந்த நாட்டை ஆளக்கூடாது. என்னுடைய மகன் பரதன்தான் ஆள வேண்டும். அதற்கு ஒரு உபாயத்தைச் சொல்’’ என்று மந்தரையிடம் கேட்க, மந்தரை சொல்லுகின்றாள்;

‘‘உனக்கு நினைவு இருக்குமோ இருக்காதோ தெரியவில்லை. முன்பொருநாள் தேவாசுர யுத்தம் நடந்தது. அந்த யுத்தத்தில் இந்திரனுக்கு உதவியாக உன்னுடைய கணவன் தசரதன் போருக்குச் சென்றான். அப்பொழுது நீயும் தசரதனோடு போருக்குச் சென்றாய், அசுரர்கள் மாயப்போர் புரிந்தார்கள். மாயப்போர் புரிந்த அசுரர்கள் உன் கணவனை அம்பினால் அடித்து மயக்க நிலைக்கு வீழ்த்தினார்கள். அப்பொழுது உன்னுடைய கணவனைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ரதத்தை போர்க்களத்தில் இருந்து அப்புறப்படுத்தி வேறு இடத்துக்குக் கொண்டு சென்றாய்.

இது போல் இரண்டு முறை நடந்தது. மயக்கம் தெளிந்து இதைத் தெரிந்து கொண்ட தசரதன், தன்னுடைய உயிரைக் காப்பாற்றிய உனக்கு “இரண்டு வரங்களைத் தருகிறேன், கேள்” என்று கேட்டான். அப்பொழுது நீ, ‘‘இப்பொழுது எனக்கு என்ன குறை? நான் தேவைப்படும்போது உங்களிடம் வரம் கேட்டு வாங்கிக்கொள்கிறேன்’’ என்று சொல்லிவிட்டாய்.

இதை நீ மறந்து இருக்கலாம். ஆனால் உனக்கு நன்மையை செய்வதற்காகவே உயிரை வைத்துக் கொண்டிருக்கும் நான் ஞாபகப்படுத்தி வைத்திருக்கிறேன். அது உபயோகப்படுத்தும் காலம் இப்போது வந்துவிட்டது. அந்த வரத்தை இப்பொழுது உபாயமாகப் பயன்படுத்தி தசரதனிடம் இரண்டு வரங்கள் கேள். ஒரு வரத்தால் உன்னுடைய மகன் பரதன் நாடாள வேண்டும்.

இன்னொரு வரத்தால் ராமன் 14 ஆண்டுகள் காட்டுக்குச் செல்ல வேண்டும்.” இப்பொழுது கைகேயி குழம்பினாள். குழப்பம் வந்துவிட்டது என்று சொன்னாலே சுய அறிவு கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்துவருகிறது என்று பொருள். இந்த நேரத்தில் சுயஅறிவு விழித்துவிடாமல் ஓங்கி அடிக்க வேண்டும். அதைத்தான் மந்தரை, கைகேயி விஷயத்தில் செய்தாள்.

அவளுக்கு ராமன் எதற்காக 14 வருடம் காட்டிற்கு போக வேண்டும் என்கிற சந்தேகம் வந்துவிடுகிறது. அதற்கு மந்தரை என்ன சொல்கிறாள் தெரியுமா? இப்பொழுது ராமருக்கு பட்டாபிஷேகம் என்று நினைத்த மக்கள், அவன் காட்டுக்கு போகின்றான்; பரதன் நாடாளப் போகின்றான் என்பதை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் மனதை சமாதானப்படுத்தாமல் அதிக நாட்கள் பரதனால் ஆளமுடியாது. அதே நேரத்தில், ராமன் பரதனுக்கு அருகில் இருக்கும் பொழுது சூழல் சரியாக வராது. அது ராமனுக்குச் சாதகமாகத்தான் முடியும். எனவே, ராமன் அயோத்தியில் இருக்கக் கூடாது. கண் காணாத இடத்திற்குச் சென்றுவிட வேண்டும். அவனுடைய மாமனார் வீட்டுக்குச் சென்றாலும், அவன் எங்கே இருக்கிறான் என்பது மற்றவர்களுக்குத் தெரிந்துவிடும்.

அவன் காட்டுக்குச் சென்றுவிட்டால், காட்டில் அவன் எங்கே இருக்கிறான் என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம்.” இவ்வளவு அறிவாளியா மந்தரை என்று கைகேயி வியந்து பார்க்க, மந்தரை தொடர்கிறாள்;

“கைகேயி, மக்களிடம் ஒரு மனநிலை உண்டு. அவர்கள் எந்த விஷயத்தையும் மறக்க கொஞ்ச காலம் தேவைப்படும். அந்த காலம் கடந்துவிட்டால், பழைய விஷயங்கள்கூட அவர்களுக்கு நினைவுக்கு வராது. அதற்குத்தான் 14 வருஷங்கள். ராமன் என்கிற விஷயத்தை இந்த கால இடைவெளியில் அவர்கள் மறந்துவிடுவார்கள்.’’ “அதற்குள் பரதன் இந்த நாட்டை நல்லபடியாக ஆட்சி செய்து, மக்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்துவிட்டால், மக்கள், அட, பரதன் பரவாயில்லை’’ என்று நினைக்க ஆரம்பித்து விடுவார்கள். மறுபடியும் ராமனே வந்தாலும்கூட மக்கள், பரதன் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் வந்துவிடாமல் துணையாக இருப்பார்கள். பரதனின் பிள்ளைகளும், இந்த கால அவகாசத்தில் அயோத்தி மக்களின் அன்பைச் சம்பாதித்துவிட்டால், பரதன், பரதனின் பிள்ளைகள், அவனுடைய பிள்ளைகள் என்று ராஜ்ஜியம் போகும். இனி ராம ராஜ்ஜியம் இல்லை. பரதராஜ்ஜியம்தான் என்பது, உறுதியாகும். அதற்கு ராமன் இங்கே இருக்கக் கூடாது. 14 வருஷங்கள் காட்டுக்குப் போய்விடவேண்டும் புரிகிறதா?

-தேஜஸ்வி

You may also like

Leave a Comment

16 − fifteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi