?எல்லா மனிதர்களாலும் ஏன் வெற்றிபெற முடியவில்லை?
– சி.பாக்கிய லட்சுமி, திருப்பூர்.
“செய்தக்க அல்ல செயக்கெடும், செய்தக்க செய்யாமையாலும் கெடும்” என்றான் வள்ளுவன். 2000 வருடங்கள் கழிந்தாலும்கூட இந்த விஷயத்தை கவனத்தில் கொள்ளத் தவறுவதால்தான் நாம் தோல்வி அடைகிறோம். எதைச் செய்ய வேண்டுமோ அதை விட்டுவிட்டு எதைச் செய்ய முடியாதோ அதைச்செய்ய முயன்று கொண்டிருக்கிறோம். நான் 36 ஆண்டு காலம் கல்லூரியில் பணி புரிந்திருக்கிறேன். கணிதத்துறையில் ஆர்வம் இல்லாத மாணவரை பொறியியல் துறையில் சேர்த்து விடுவார்கள். அவர் முதல் இரண்டு ஆண்டுகளிலேயே களைத்துவிடுவார். ஆனால் அவர் கலைத்துறையில், பேச்சுத் துறையில் வல்லவராக இருப்பார். ஆனால், அதை விட்டுவிட்டு அவருக்கு வராத ஒரு துறையில் கொண்டு போய்ச் சேர்த்து அவருடைய வாழ்க்கையை தோல்வியடையச் செய்து விடுவார்கள். லியோ டால் ஸ்டாய் ஒரு விஷயத்தைச் சொல்லி இருக்கிறார். அற்புதமான விஷயம்.
“ஒவ்வொரு மனிதரிடமும் ஒரு வித திறமை இருக்கிறது. அதை அவர் பயன் படுத்தாமல் இருப்பது வங்கியில் பணத்தைப் போட்டு வைத்துவிட்டு பட்டினி கிடப்பதற்குச் சமமாகும்’’ என்றார். அதைத் தான் பெரும்பாலோர் செய்து கொண்டிருக்கிறோம்.
?இறைவனிடம் இன்பத்தை பிரார்த்திக்க வேண்டுமா, வருகின்ற துன்பத்தை நீங்க வேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டுமா?
– செல்வ கணபதி, திருவனைக்காவல்.
முதலில் வருகின்ற இன்பம், துன்பம் இவை இரண்டும் இறைவன் அருளினாலோ, அருள் இல்லாததாலோ வருவது அல்ல. காரணம் இவை இரண்டையும் ஒருவருக்கு இறைவன் தருவது கிடையாது என்பது ஆன்மிகத்தின் அடிப்படையான கொள்கை. அப்படியானால் ஒருவன் நன்மை பெறுவதும் அல்லது துன்பப்படுவதும் அவரவர்கள் செய்த வினையின் பயன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதனால் ஆன்றோர்கள் இறைவனுடைய அருள் வேண்டும் என்று தான் பிரார்த்திப்பார்களே தவிர, அவனிடத்திலே இன்பத்தையோ துன்பம் நீக்குதலையோ பெரும்பாலும் பிரார்த்திப்பதில்லை. பட்டினத்தார் “என் செயலால் ஆவது யாதொன்றுமில்லை, முன் செய்த தீவினையோ இங்கனே வந்து மூண்டதுவே” என்றார். அதைப் போலவே மணிவாசகரும் “வேண்டத்தக்கது அறிவோய் நீ வேண்டிய அனைத்தும் தருவோய் நீ” என்றார். இறைவனை வழிபடுவதன் மூலம் துன்பம் நீங்குகிறதோ இல்லையோ துன்பத்தை நீக்கிக் கொள்ளும் வல்லமையைப் பெற முடியும். மகாபாரதத்தில் யுத்தமெல்லாம் முடிந்தபின் பாண்டவர்கள் ராஜ்ஜியத்தை அடைந்தனர். கண்ணன் விடைபெறும் பொழுது குந்தி கேட்ட வரம் “கஷ்டத்தைக் கொடு” என்பது. இதென்ன வித்தியாசமாக இருக்கிறது என்று நினைக்கலாம். அதற்கு குந்தி சொன்ன விளக்கமாக பெரியவர்கள் சொல்வதுதான் வித்தியாசமாக இருக்கும். ஏன் குந்தி கஷ்டத்தை கண்ணனிடம் கேட்டாள் தெரியுமா? “கண்ணா, எங்களுக்குக் கஷ்டம் வருகின்ற ஒவ்வொரு நிலையிலும் நீ எங்கள் கூடவே இருந்தாய். நீ எங்களுடன் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதனால் நீ எங்களுக்குக் கஷ்டத்தைக் கொடு” இதனுடைய சூட்சமமான பொருள்: பக்தர்களின் கஷ்டத்தின் பொழுது இறைவன் கூடவே இருந்து அவர்களுக்குக் கஷ்டத்தைத் தாங்கும் சக்தியைத் தந்து காப்பாற்றுகிறான் என்று பொருள்.
?உபயப் பிரதான திவ்யதேசம் என்றால் என்ன பொருள்?
– தேவி கலா, சென்னை.
உபயம் என்றால் இரண்டு. பிரதானம் என்றால் முக்கியம். எந்த இடத்தில் இரண்டு முக்கியங்கள் இருக்கிறதோ அந்த இடத்திற்கு உபயப் பிரதானம் என்று சொல்வார்கள். சில திருத்தலங்களில், மூலவருக்கு உள்ள அத்தனைச் சிறப்புகளும் உற்சவருக்கும் இருக்கும். அப்படி இருக்கும் திருத்தலத்தை உபயப் பிரதான திவ்ய தேசம் என்பார்கள். 108 திவ்ய தேசங்களிலே திருக்குடந்தைத் தலத்திற்கு உபயபிரதான திவ்யதேசம் என்று பெயர். இந்த திவ்ய தேசத்தில் மூலவருக்குள்ள அத்தனை மரியாதைகளையும் உற்சவருக்கும் செய்வார்கள்.
?அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்வதின் பொருள் என்ன?
– பா.ரவிச்சந்திரன், திருச்சி.
அல்வா சுவையானது. ஆனால் அதையே முழு உணவாகச் சாப்பிட்டால் வயிறு ஜீரணிக்குமா? பொதுவாகவே எதுவுமே ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருந்தால் அது ஆபத்தாக முடியும். நம் உடலில் உஷ்ணம் குறைந்தால் ஜன்னி என்று அவஸ்தைப் படுகின்றோம். உடல் உஷ்ணம் அதிகமானால் ஜுரம் என்று அவஸ்தைப் படுகின்றோம். கொழுப்பு அதிகமாகிவிட்டால் அது இதய அடைப்புக்கும் மற்ற நோய்களுக்கும் காரணமாகி விடுகிறது. அந்தக் கொழுப்பு குறைந்துவிட்டால் நமக்குத் தேவையான சக்தி கிடைக்காமல் போய்விடுகிறது. எனவே எதுவுமே அளவுக்கு மீறினால் அது ஆபத்தாகிவிடுகிறது. உறவுகள் பழக்கங்களில்கூட இந்த அளவை கவனிக்க வேண்டும். ஒருவரிடத்தில் நீங்கள் வைக்கின்ற அன்புகூட அளவாக இருப்பது நல்லது. காரணம், சூழ் நிலைகளால் அவரை நீங்கள் பிரிய நேரிடலாம். அதைப் போலவே ஒருவரிடம் வைக்கின்ற வெறுப்பு கூட அளவாகவே இருக்கட்டும். சில சூழலினால் அவரிடம் நாளையே பழக நேரிடலாம். எனவே எதுவும் அளவாக இருந்தால் ஆபத்து இருக்காது.
?எதைக் கைவிடாமல் இருந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம்?
– வித்யா சுந்தரமூர்த்தி, தாராபுரம்.
1. தன்னம்பிக்கை,
2. தெய்வபக்தி,
3. முயற்சி.
குறிப்பாக முயற்சியைக் கைவிடக்
கூடாது. 999 முறை தோல்வியுற்ற எடிசன் ஆயிரமாவது முறையில் வெற்றி பெற்றார் என்று படிக்கிறோம். 100 அடியில் தண்ணீர் இருக்கும் 99 வது அடிவரை முயற்சி செய்து பார்த்து குழியை மூடி விடுபவர்கள் உண்டு. முயற்சியில் தளர்ச்சி இருக்கக்கூடாது. வெற்றி பெற்றவர்கள் எல்லாம் தொடர் முயற்சியால் வெற்றி பெற்றவர்கள்தான்.
?முறையாக கோபூஜை செய்ய இயலவில்லை என்றால் என்ன செய்யலாம்?
– பிரகாஷ், திண்டிவனம்.
முறையாகச் செய்ய வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் அதற்கான வாய்ப்பு கிடைக்கும். இருந்தாலும், பல காரணங்களினால் செய்ய முடியவில்லை என்றால் பசுவுக்கு கீரையோ பழமோ கொடுத்து வணங்குங்கள். அதுவும் கோ பூஜைக்கு சமானமான பலனைத் தரும்.
?தர்மம், சட்டம் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
– சரஸ்வதி ராமமூர்த்தி, ஸ்ரீரங்கம்.
தர்மமாக உள்ளதெல்லாம் சட்டமாக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. காரணம், சட்டத்தை நாம்தான் இயற்றுகின்றோம். தேவைப்பட்டால் நமக்கு ஏற்றது போல் மாற்றிக் கொள்கிறோம். ஆனால், தர்மம் என்பது என்றைக்கும் மாறாது. உதாரணமாக, ஒருவர் தன்னுடைய மகனை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு சிகிச்சைக்காக அவசரமாக உங்களிடம் ஆயிரம் ரூபாய் கேட்கிறார். உங்களிடம் நிறைய பணம் இருக்கிறது. ஆனால், நீங்கள் ஏதோ காரணத்தினால் மறுத்து விடுகின்றீர்கள். பணம் கிடைக்காத அவர் வருத்தத்தோடு போகிறார். சரியான நேரத்தில் பணம் கிடைத்து மருந்து வாங்க முடியாததால் அவருடைய மகன் இறந்து விடுகின்றான். இப்பொழுது ‘‘நீ ஏன் பணம் தரவில்லை?’’ என்று அவர் சட்டத்தின் முன் உங்களை நிறுத்த முடியாது. காரணம், பணம் தர வேண்டும் என்று சட்டம் கிடையாது. ஆனால், நிறைய பணம் வைத்துக் கொண்டு ஆபத்தில் நீங்கள் உதவவில்லை அல்லவா! எனவே தர்மப்படி அந்த பாவம் உங்களைச் சேரத்தானே செய்யும். அது ஏதாவது ஒரு ரூபத்தில் உங்கள் வாழ்க்கையில் எதிரொலிக்கத் தானே செய்யும்.