சவுத்ஹாம்படன்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 3வது டி20 போட்டியிலும் இங்கிலாந்து அணி அமோக வெற்றி பெற்று ஒயிட் வாஷ் செய்துள்ளது. இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் சவுத்ஹாம்டன் நகரில் நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனால் முதலில் விளையாடிய இங்கிலாந்து வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன் குவிக்க ஆரம்பித்தனர். தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேமி ஸ்மித், பென் டக்கெட், இருவரும் முதல் விக்கெட்டுக்கு 120 ரன் விளாசினர். இவர்கள் இருவரும் முறையே 60 (26 பந்து), 84 (46 பந்து) ரன் விளாசினர். அடுத்து வந்த ஜோஸ் பட்லர் 22 (10பந்து) விளாசி ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து கேப்டன் ஹாரி புரூக் 35 (22பந்து), ஜேகப் பெதேல் 36 (16பந்து) ரன்னுடன் கடைசி வரை களத்தில் நின்றனர். அதனால் இங்கிலாந்து 20 ஓவர் முடிவில் 3விக்கெட் மட்டும் இழந்து 248 ரன் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அகேல் ஹோசின், குடகேஷ் மோதி, ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு தலா ஒரு விக்கெட் மட்டும் எடுத்தனர். அதனையடுத்து 249 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ், 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 211 ரன் மட்டுமே விளாசியது. அதனால் இங்கிலாந்து 37 ரன் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. மொத்தம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஏற்கனவே 2 ஆட்டங்களில் வென்று டி20 தொடரை கைப்பற்றிவிட்ட இங்கிலாந்து, 3வது ஆட்டத்திலும் வென்று 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீசை ஒயிட் வாஷ் செய்தது. முன்னதாக நடந்த 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இங்கிலாந்து 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட் வாஷ் செய்திருந்தது.