நன்றி குங்குமம் தோழி
மார்டினா மெஜீபா
‘‘நானும் எனது கணவரும் இங்கு வந்து செட்டிலாகி 12 வருடங்கள் ஓடிவிட்டது. இப்போதுதான் இரண்டு மூன்று இந்திய மாணவர்கள் படிப்பதற்காக இங்கு வந்து தங்கியிருக்கிறார்கள்’’என நம்மிடம் பேசத் தொடங்கிய தூத்துக்குடியை சேர்ந்த மார்டினா மெஜீபா, கனடா நாட்டில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், “கூட்னே தமிழ் கிச்சன்” என்ற பெயரில் தென் தமிழக உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்.முழுக்க முழுக்க வெள்ளைக்காரர்கள் மட்டுமே வசிக்கும் ஒரு பகுதியில், தமிழக உணவகம் நடத்துவது சாத்தியமா? ஆச்சரியம் கலந்த கேள்விகளோடு அவரிடம் பேசத் தொடங்கியதில்…
‘‘பிரிட்டிஷ் கொலம்பியாவில் நாங்கள் இருப்பது நெல்சன் சிட்டி. இங்கே கூட்னே எனப்படும் பகுதியில்தான் எங்கள் தமிழ் உணவகம் இருக்கிறது’’ என்றவர், ‘‘உணவகத்தை நடத்தத் தொடங்கிய இந்த 8 ஆண்டுகளில், நமது தென் இந்திய உணவுகள் அனைத்தையுமே இங்குள்ள வெள்ளைக்காரர்கள் விரும்பி ருசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்’’ எனப் புன்னகைத்தவாறு மேலும் விரிவாகப் பேச ஆரம்பித்தார்.
‘‘வெள்ளைக்காரர்களுக்கு தமிழக உணவுகளை எப்படி சாப்பிட வேண்டும் என சுத்தமாக எதுவும் தெரியாத நிலையில்தான் இட்லி, தோசை, சாம்பார், சட்னி, பொங்கல், வடை, இடியாப்பம், குழிப்பணியாரம், சமோசா, சாம்பார் சாதம், பருப்பு சாதம், லெமன் சாதம், புளி சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், பாயசம் என அனைத்தையும் அவர்களே பெயர் சொல்லிக் கேட்டு வாங்கி உண்ண நாங்கள் பழக்கப்படுத்தி இருக்கிறோம்’’ எனக் கட்டை விரல்களை உயர்த்திக் காட்டிய மெஜீபா, வெள்ளைக்காரர்கள் மத்தியில் கணவரோடு இணைந்து தமிழ் உணவகத்தை தொடங்க காரணமாக இருந்த கதையை மேலும் நம்மிடம் விவரிக்க ஆரம்பித்தார்.
‘‘நான் பக்கா தூத்துக்குடி பொண்ணு. என் பெற்றோர் இருவரும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள். வ.உ.சிதம்பரனார் கல்லூரியில் எம்எஸ்ஸி. முடித்து, பாளையங்கோட்டை செயின்ட் சேவியர் கல்லூரியில் பி.எச்.டி படித்த நிலையில் எனக்குத் திருமணம் முடிவானது.என் கணவர் சிராஜ் பிரபு, அமெரிக்க நாட்டில் இயங்கும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் கப்பல் ஒன்றில், பல்வேறு நாட்டின் உணவுகளைத் தயாரிக்கும் தலைமை செஃப்பாக இருந்தவர். அவருக்குக் கீழ் கிட்டதட்ட 60 செஃப்கள் பணியாற்றி வந்தனர். 6 மாதம் கடலில் பயணித்தால், ஒரு மாத விடுமுறை கிடைக்கும். அந்த விடுமுறையில்தான் அவர் ஊருக்கு வரமுடியும். எனவே, திருமணம் ஆனாலும், முதல் ஓராண்டுகள் நான் தூத்துக்குடியிலும், அவர் அமெரிக்காவிலும் பிரிந்தே இருந்தோம்.
இந்த நிலையில் கனடாவில் உள்ள இன்டர் நேஷனல் ஸ்டார் ஹோட்டலில் அவருக்கு வேலை கிடைத்தது. ஹோட்டல் வேலை என்பதால், நானும் அவரோடு கனடா வந்தேன். திருமணத்திற்குப் பிறகான என் வாழ்க்கை முழுக்க முழுக்க வெளிநாட்டில்தான் அமையப் போகிறது என்று கொஞ்சமும் நான் நினைத்துப் பார்க்கவில்லை. திடீரென அமைந்த திருமணம் என் வாழ்க்கையை தலைகீழாய் புரட்டிப்போட, பெற்றோரையும், சொந்த மண்ணையும், உறவுகளையும், நட்புகளையும் பிரிந்து வெகுதூரத்தில் வந்து வாழவேண்டிய நிலை…’’ மெலிதாக புன்னகைக்கிறார் மெஜீபா.
‘‘பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் பார்க்க நகரமாக இல்லாமல், கிராமமாக இல்லாமல் கிட்டதட்ட நமது ஊர் ஊட்டி, கொடைக்கானல் மாதிரியான சுற்றுலாத்தளமாக இருக்கும். பெரும்பாலும் இங்கு வசிப்பவர்கள், கனடா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட பூர்வகுடிகளான வெள்ளைக்காரர்களே. தமிழர்கள் என்று பார்த்தால் எங்களைத் தவிர்த்து இன்னும் இரண்டு தமிழ் குடும்பங்கள் இருந்தது.
மக்கள் தொகையும் இங்கு மிகமிகக் குறைவு என்பதால், இந்தப் பகுதியில் வசிக்கும் எல்லோரையும் எல்லோருக்கும் தெரியும்.இந்த நிலையில் என் கணவர் பணியாற்றிய ஹோட்டலில் நானும் அக்கவுன்டென்டாக வேலையில் சேர்ந்தேன். நாங்கள் வசித்த இடத்தில் இருந்து சுற்று வட்டாரத்தில் தமிழர் உணவகம் எதுவுமே அப்போது இல்லாமல் இருந்தது. ஆசைப்பட்டு இட்லி, தோசை சாப்பிட நினைத்தாலும், அதற்கான உணவகம் தேடி 8 மணிநேரம் பயணிக்க வேண்டிய நிலை இருந்தது.
நமது தென்னிந்திய உணவுகள் மட்டுமல்ல, நமது சமையலுக்கான உணவுப் பொருட்களும் சுற்றுவட்டாரப் பகுதியில் எங்குமே கிடைக்காது. அரிசி, பருப்பு, எண்ணெய் வாங்குவதற்குக்கூட 8 மணி நேரம் பயணித்து, தமிழர்கள் நடத்தும் கடைகளைத் தேடிப் பிடிக்க வேண்டிய நிலையே இருந்தது. எனவே ஊரில் இருந்து அரிசி, பருப்பு, எண்ணெய் போன்றவற்றை கொரியலில் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். இது செலவை அதிகமாக்கியது. இந்த நிலையில் எங்கள் மகன் பிறந்தான்.
உதவிக்கு யாருமே இல்லாத நிலையில், கைக்குழந்தையையும் வைத்துக்கொண்டு வேலைக்குச் செல்வது சிரமமாக, ஏன் நமது தென்னிந்திய உணவுகள் கிடைக்கிற உணவகம் ஒன்றை நாமே தொடங்கி இந்தப் பகுதியில் நடத்தக்கூடாது என யோசிக்க ஆரம்பித்தேன். ஆனால் நாங்கள் இருப்பது முழுக்க முழுக்க வெள்ளைக்காரர்கள் மட்டுமே வசிக்கும் ஒரு சுற்றுலாப் பகுதி. அந்த இடத்தில் தமிழக உணவகத்தை தொடங்குவது சவால் நிறைந்ததாக தோன்றியது. என்றாலும், நம்பிக்கையோடு நானும் எனது கணவருமாக 2017ம் ஆண்டில், நாங்கள் வசிக்கும் கூட்னே பகுதியின் பெயரைக் குறிக்கும் விதமாக, “கூட்னே தமிழ் கிச்சன்” (Kootenay Tamil Kitchen) உணவகத்தைத் தொடங்கினோம்.
வெள்ளைக்காரர்களின் உணவு பிரெட் அண்ட் பட்டர், பிரெட் அண்ட் ஜாம், பீசா, பர்க்கர் என்றே இருக்கும். வட இந்திய உணவுகளை மட்டும் கொஞ்சம் தெரிந்து வைத்திருப்பார்கள். நமது
தென்னிந்திய உணவுகள் சுத்தமாகத் அவர்களுக்குத் தெரியாது. தொடக்கத்தில் நமது தமிழக உணவுகளை அவர்களிடம் கொண்டு சேர்ப்பதில், கடினமான முயற்சிகள் பலவும் எங்களுக்கு இருந்தது.
நமது நாட்டின் உணவு தானியங்களான அரிசி, பருப்பு, எண்ணெய் இவற்றில் உள்ள புரோட்டீன், நியூட்ரிஷியன் சத்து குறித்தும், மஞ்சள், மிளகு, பூண்டு, இஞ்சி இவற்றில் உள்ள மருத்துவ குணம் குறித்தும் அவர்களுக்கு விளக்குவதுடன், “இட்லியை சட்னியில் தொட்டு சாப்பிடணும், தோசையை சாம்பாரில் முக்கி சாப்பிடணும்” என ஒவ்வொரு டேபிளாகச் சென்று விளக்க ஆரம்பித்தோம்.
எனது கணவர் எங்களின் கூட்னே தமிழ் கிச்சனை சோஷியல் மீடியா பக்கத்தில், தென்னிந்திய உணவுகளின் பெயர்கள் என்னென்ன? அதில் நிறைந்துள்ள ஹெல்த் பெனிஃபிட் என்னென்ன என்பது குறித்தெல்லாம் விளக்கி, காணொளியாக்கி அதனை வெளியிட்டார். இது உணவகத்திற்கு வரும் வெள்ளைக்காரர்களை வெகுவாகக் கவர, நாங்கள் எதிர்பார்த்ததைவிட உணவகம் சிறப்பாக, சக்சஸ்ஃபுல்லாக இயங்க ஆரம்பித்தது.உணவகத்திற்கு வரும் வெள்ளைக் காரர்களின் வாயில் இருந்து இட்லி, தோசை, வடை, பொங்கல், பூரி, இடியாப்பம், சட்னி, சாம்பார் போன்ற நமது உணவுகளின் பெயர்கள் அசால்டாக வர ஆரம்பித்தது. இதுதான் எங்கள் தொழிலின் சக்சஸ்’’ என புன்னகைக்கிறார் மீண்டும் அழுத்தமாய் மெஜீபா.
‘‘நாங்கள் இந்த தமிழ் உணவகத்தை தொடங்கி 8வது ஆண்டில் இருக்கும் அதே நேரத்தில், எங்கள் உணவகத்தை ஒட்டியே ‘எத்னிக் க்ராஷரி ஷாப்’ என்ற பெயரில், இன்டர்நேஷனல் க்ராஷரி ஸ்டோர் ஒன்றையும் நடத்தி வருகிறோம். இதில் பல்வேறு நாட்டின் உணவுப் பொருட்கள், மசாலாப் பொருட்கள் அனைத்தும் கிடைக்கும். எங்கள் சிட்டிக்கு அருகிலேயே, எங்கள் க்ராஷரி ஷாப்பின் மற்றொரு கிளையினையும் தொடங்கி அதுவும் சிறப்பாகவே இயங்கி வருகிறது’’ என அடுத்தடுத்து நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடித்த மெஜீபாவிடம், உணவகத்திற்கு தேவையான நமது நாட்டுக் காய்கறிகளை எங்கிருந்து கொண்டு வருகிறீர்கள் என்ற கேள்வியையும் முன் வைத்ததில்..?
‘‘இங்கு ஸ்பிரிங், ஸம்மர், ஃபால், வின்டர் என நான்கு விதமான சீசன் உண்டு. ஸம்மர் முதல் ஃபால் வரை உள்ள சீசன் க்ரோவிங் சீசன் எனப்படும். இந்த சீசனில் நம்மால் என்னவெல்லாம் விளைவிக்க முடியுமோ அதை விளைவித்துக் கொள்ளலாம். நான் நம்முடைய நாட்டுக் காய்கறிகளான கத்தரிக்காய், வெண்டைக்காய், அவரைக்காய், கீரை வகைகள், உருளைக் கிழங்கு, பீட்ரூட், கேரட், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், குடைமிளகாய் இவற்றோடு இந்த நாட்டில் விளையும் ஸ்டாபெர்ரி, ராஸ்பெர்ரி, ப்ளாக் பெர்ரி, பிளெம்ஸ், செரி மரம், ஆப்பிள் மரம், பீச் மரம், ப்ளாக் வால்நட் மரங்களை என் தோட்டத்தில் வைத்து வளர்க்கிறேன். கூடவே வண்ண வண்ண நிறங்களில் உள்ள ரோஜா, ஃப்யூனி, லாவண்டர் மலர்களும் எங்கள் தோட்டத்தை அலங்கரிக்கிறது. எங்கள் குடும்பத்திற்குத் தேவையான பழங்களை அப்போதைக்கு அப்போது மரத்தில் இருந்து நேரடியாகவே பறித்துச் சாப்பிடுகிறோம்.
சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இடம் என்பதால் ஹஃப் சீசன், பீக் சீசன் என இரண்டுமே இங்கு பிரபலம். ஹஃப் சீசனில் பல்வேறு உணவகங்களும் இணைந்து நடத்துகிற, மாபெரும் உணவுத் திருவிழாவில், எங்களின் கூட்னே தமிழ் உணவகமும் பங்கேற்கும்’’ என்றவர், வெள்ளைக்காரர்கள் மட்டுமே வாழுகிற, நமக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத ஒரு அந்நிய மண்ணில், மிகவும் தனித்துவமான முறையில், அதுவும் உணவுத் துறையில் கால் பதித்து, வெற்றி பெற்ற கதையை நம்மிடம் முழுமையாக விவரித்து விடைபெற்றார்.
தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்