திருவாரூர்: போலீசாரிடமிருந்து தப்பிக்க முயன்ற பிரபல ரவுடி, ரயில்வே பாலத்திலிருந்து தவறி விழுந்த போது கால் முறிந்து மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி காவல் சரகத்திற்குட்பட்ட அபிஷேக கட்டளை கிராமத்தை சேர்ந்தவர் குருமாறன் (24). இவர் மீது கஞ்சா விற்பனை, வழிப்பறி, திருட்டு என 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஜனவரி 5ம்தேதி கஞ்சா விற்றதாக திருவாரூர் போலீசாரால் குருமாறன் கைது செய்யப்பட்டார். திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வந்த போது குருமாறன் நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்.
கடந்த 7 மாதமாக குருமாறனை போலீசார் தேடி வந்த நிலையில் சிங்களாந்தி கிராமத்தில் பதுங்கியிருப்பதாக தகவலின் பேரில் போலீசார் நேற்று அங்கு சென்று அவரை பிடிக்க முயன்றனர். போலீசாரை கண்டதும் தப்பியோட முயற்சித்து ஓடியவர் சிங்களாந்தி ரயில்வே பாலத்திலிருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு இடது காலில் முறிவு ஏற்பட்டது. தொடர்ந்து குருமாறனை போலீசார் கைது செய்து சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.