திருவொற்றியூர்: திருவொற்றியூர், விம்கோ நகர் அருகே சின்ன எர்ணாவூர் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி (45). இவர் தமிழ்நாடு மின்சார வாரியம், சுனாமி குடியிருப்பு துணை மின் நிலையத்தில் வயர்மேனாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு திருவொற்றியூர் ஜீவன்லால் நகர் பகுதியில் மழை காரணமாக மின் துண்டிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து வீரமணி மற்றும் 5 பேர் கொண்ட ஊழியர்கள் அஜாக்ஸ் அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் பழுதை சரி செய்து கொண்டிருந்தனர். இதில் வீரமணி கீழே நின்றிருக்க, வயர் மேன் முருகேசன் என்பவர் மேலே நின்று பழுதை சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென்று முருகேசன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சுதாரித்துக் கொண்ட அவர் டிரான்ஸ்பார்மரில் இருந்து கீழே குதித்தார். அதே நேரத்தில் கீழே நின்றிருந்த வீரமணி மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் 2 பேரும் சுருண்டு விழுந்தனர். அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள், இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் வீரமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். முருகேசன் ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘‘டிரான்ஸ்பார்மரில் பழுதை சரி செய்வதற்காக மின்சாரத்தை துண்டித்து ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அருகில் உள்ள பிஎஸ்என்எல் குடியிருப்பு பகுதிகளில் மின்சாரம் இல்லை என்பதற்காக ஜெனரேட்டரை ஆன் செய்துள்ளனர். அதனால் டிரான்ஸ்பார்மருக்கு எதிர் மின் சப்ளை ஏற்பட்டு இந்த விபத்து ஏற்பட்டதுள்ளது,’’ என்றனர். இதுகுறித்து போலீசார் மற்றும் மின்வாரிய தலைமை பொறியாளர், மேற்பார்வை பொறியாளர் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
* உறவினர்கள் சாலை மறியல்
இந்த விபத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வீரமணியின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அஜாக்ஸ் அருகே திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் போராட்டக்காரர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியதைத் தொடர்ந்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.