சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றின் மது பாரில் நடனமாடும் போது, பெண் தோழிகளை இடித்து சில்மிஷம் செய்ததை தட்டிக்கேட்ட 2 ஆண் நண்பர்களுக்கு சரமாரி கத்திக்குத்து விழுந்தது. சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் ஹெக்டர் சாலமன் (24). இவர் தனது உறவினரான கார்த்திக்குமார், துனுதீன் ஆகியோருடன் நேற்று முன்தினம் நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றின் பாருக்கு வந்தார். அப்போது மது பாரில் ஏற்கனவே அறிமுகமான 2 பெண் தோழிகள் வந்துள்ளனர். அவர்களுடன் மது போதையில் இசைக்கு ஏற்றபடி நடனமாடியுள்ளார். பாரில் மது அருந்திக் கொண்டிருந்த குகன் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து நடனமாடிக் கொண்டிருந்த 2 பெண்களை இடித்தபடி சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். இதை ஹெக்டர் சாலமன் மற்றும் கார்த்திக் தட்டிக்கேட்டுள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதை கவனித்த பார் நிர்வாகம் ஹெக்டர் சாலமன் மற்றும் அவரது நண்பர்களை வெளியேறியுள்ளனர்.
அதன்படி பாரில் இருந்து வெளியே வந்து, குகன் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து ஹெக்டர் சாலமன் மற்றும் கார்த்திக்கை சரமாரியாக அடித்து உதைத்தனர். கத்தியால் குகன் இருவரையும் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடினார். படுகாயமடைந்த ஹெக்டர் சாலமன் மற்றும் கார்த்திக் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து மருத்துவமனை அளித்த தகவலின்படி, நுங்கம்பாக்கம் போலீசார் சம்பவம் நடந்த நட்சத்திர ஓட்டல் பாருக்கு ெசன்று அங்குள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று தாக்குதல் நடத்திய குகன் மற்றும் அவரது நண்பர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை வருகின்றனர். இந்த வழக்கில் விக்னேஷ் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் முக்கிய குற்வாளியான குகனை தொடர்ந்து ேதடி வருகின்றனர். அதில், குகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடுக்கடலில் மீனவர் படகு ஒன்றில் நின்று கொண்டு பெரிய ‘டான்’ போன்று கையில் துப்பாக்கி வைத்து கொண்டுள்ள புகைப்படம் மற்றும் வீட்டில் வாளுடன் காட்சி தரும் புகைப்படங்கள் இருந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து குகனிடம் புகைப்படத்தில் உள்ள துப்பாக்கி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.