காஞ்சிபுரம்: வந்தவாசி அருகே கோயிலுக்கு சென்று திரும்பியபோது பள்ளத்தில் கார் கவிழ்ந்து காஞ்சிபுரம் ஆசிரியை உயிரிழந்தார். அவரது கணவர் மற்றும் மகள் படுகாயமடைந்தனர்.
காஞ்சிபுரம் மின்னல் நகர் ராஜராஜன் தெருவை சேர்ந்தவர் சிவபிரகாசம் (54). இவர் காஞ்சிபுரம் வலைத்தோட்டம் நகராட்சி நடுநிலை பள்ளியில் தலைமையாசிரியராக உள்ளார். இவரது மனைவி மாலதி (53). இவர், சிவகாஞ்சி நகராட்சி மேல்நிலை பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவரது மகள் நிவேதா (24), பெங்களூருவில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். 3 பேரும் நேற்று முன்தினம் இரவு மேல்மலையனூர் கோயிலுக்கு காரில் சென்றனர்.
சுவாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று காலை வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். காலை 6.30 மணி அளவில் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி-சேத்துப்பட்டு நெடுஞ்சாலை கோழிபுலியூர் கூட்ரோடு அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், மாலதி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். சிவபிரகாசம் மற்றும் நிவேதா ஆகியோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கும் பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டனர். இதுகுறித்து தேசூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.