கொழும்பு: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஏ பிரிவில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் நாளை பல்லேகலேவில் நடைபெற உள்ளது. முதல் ஆட்டத்திலேயே பாகிஸ்தான் அதிரடி காட்டியுள்ள நிலையில் இந்திய வீரர்கள் நேற்று திவீர வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சிக்கிடையில் ஷமி அளித்த பேட்டி ஒன்றில், ‘பந்து புதிதாக இருந்தாலும், பழையதாக இருந்தாலும் அதை வீசுவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. நான் மட்டுமல்ல பும்ரா, சிராஜ் ஆகியோரும் 2 வகையான பந்துகளையும் சிறப்பாக வீசுவார்கள். ஆட்டத்தின் எந்த சூழலாக இருந்தாலும் கவலையில்லை.
அந்த நேரத்தில் அணிக்கு என்னத் தேவையோ அதை செய்ய வேண்டியதுதான் எங்கள் வேலை. எதிரில் யார் விளையாடுகிறார் என்பதை பொறுத்து பந்து வீசும் முறை வேண்டுமானால் வேறுபடும். எங்களுக்கு ஒரே ஒரு இலக்குதான் 100சதவீத பலன் கிடைக்க என்ன செய்ய வேண்டுமோ அதற்காக 100சதவீதம் முயற்சியை தருவோம். அதில்தான் எங்கள் கவனம் இருக்கும். அதுதான் எங்கள் எளிமையான திட்டம். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒருநாள் ஆட்டத்தில் பும்ராவுடன் களம் காண உள்ளது மகிழ்ச்சியை தருகிறது. உலக கோப்பைக்கு முன்னதாக ஆசிய கோப்பையில் விளையாடுவது நல்ல வாய்ப்பாக அமையும்’ என்று கூறியுள்ளார்.