Friday, June 20, 2025
Home மகளிர்நேர்காணல் பெண்கள் போற்றப்படும் இடங்களில் எல்லாம் வெற்றிதான்!

பெண்கள் போற்றப்படும் இடங்களில் எல்லாம் வெற்றிதான்!

by Nithya

நன்றி குங்குமம் தோழி

எழுத்தாளர் மற்றும் திரைப்பட வசனகர்த்தா பொற்கொடி

ஆசிரியர் கனவோடு எழுத்தாளர் கனவையும் சுமந்து, பின்னர் பத்திரிகைத் துறையில் நுழைந்து, இன்று வெற்றிகரமாக வெள்ளித்திரையின் உதவி திரைக்கதை மற்றும் வசனகர்த்தாவாக மிளிர்ந்து வருபவர் சென்னை கேளம்பாக்கத்தினைச் சேர்ந்த பொற்கொடி. இவரது ஆக்கத்தில் இதுவரை இருபது நாவல்களும், ஒரு சிறுகதைத் தொகுப்பும் வெளியாகியுள்ளன. தற்போது எழுத்துத்துறை, பத்திரிகை துறை, சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என தன் பன்முகத் திறமையால் மிளிர்ந்து வருகிறார் எழுத்தாளரான பொற்கொடி.

‘‘பன்னிரெண்டாம் வகுப்பு முடித்ததும் பதினெட்டு வயதிலேயே திருமணமானது. 24 வயதிற்குள், இரண்டு குழந்தைகளுக்குத் தாய். இருப்பினும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் துளியும் குறையவில்லை. என் கணவர் எனக்கு அளித்த ஊக்கம் மற்றும் பெரு முயற்சிகளுக்குப் பிறகு ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்றேன். எழுத்து மேல் இருந்த ஆர்வம் மற்றும் என் முயற்சியினால், பிரபல பத்திரிகை ஒன்றில் வேலை கிடைத்தது.

ஆனால் என்னுடைய குடும்பச்சூழல் காரணமாக என்னால் வேலைக்குப் போக முடியவில்லை. அது எனக்கு பெரிய வருத்தத்தை அளித்தது. என்னுடைய தொடர் முயற்சியால், வீட்டிலிருந்தபடியே பத்திரிகைகளுக்கு கதைகளை எழுத ஆரம்பித்தேன். அந்தப் பயணம்தான் என்னை ஒரு எழுத்தாளராகவும், திரைப்பட வசனகர்த்தாவாகவும் மாற்றியது. ஒரு பக்கம் பத்திரிகை மேல் ஆர்வம் இருந்தாலும், ஆசிரியராக வேண்டும் என்ற விருப்பமும் இருந்தது. அதனை வீட்டில் மாணவ, மாணவியர்களுக்கு ட்யூஷன் எடுத்து நிறைவேற்றிக் கொண்டேன்.

எழுத்துத்துறை மீதான ஆர்வம்…

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே, படிப்பதிலும், எழுதுவதிலும் அதீத ஆர்வம் உண்டு. என் பள்ளி ஆண்டு மலரில் நிறைய கதைகளும், கவிதைகளும் எழுதுவேன். ஷேக்ஸ்பியர் நாடகங்களை ஆங்கிலத்தில் எளிமையாக மற்றவர்களுக்கு புரியும்படி மாற்றி எழுதி இருக்கேன். எட்டாம் வகுப்பு படிக்கும்போது, நானே சுயமாய் ‘Foolish Servant’ என்ற தலைப்பில் ஒரு நாடகம் எழுதினேன். அந்த நாடகத்தை எங்க பள்ளி ஆண்டு விழாவில் அரங்கேற்றினோம். அதில் நான் கதாநாயகியாக நடித்தேன். அதனைத் தொடர்ந்து மாதமிருமுறை நடக்கும் இலக்கிய விழா மற்றும் பள்ளி ஆண்டு விழாவில் என் நாடகங்கள் தவறாமல் அரங்கேற்றப்படும். அதுவே எனது எழுத்தார்வத்திற்கும் வித்திட்டது.

பத்திரிகை துறை…

‘‘சுயம்’’ என்ற தலைப்பில் நான் எழுதிய முதல் சிறுகதை, 2005ல் பிரபல இதழ் ஒன்றில் வெளியானது. அதனைத் தொடர்ந்து மற்ற பத்திரிகையிலும் சிறுகதை போட்டியில் பங்கு பெற்று வெற்றியும் பெற்றேன். அந்த வெற்றிதான் என் பத்திரிகை ஆர்வத்துக்கும் பெரும் உரமானது. மேலும் மற்றொரு பிரபல இதழில் வெளியான ‘‘வானம் விட்டு வாராயோ’’ தொடர்கதை எனக்கு ஏராளமான வாசகர்களையும், பாராட்டுதல்களையும் பெற்றுத் தந்தது. இதுவரை பல பதிப்பகங்களில் எனது இருபது நாவல்களும், ஒரு சிறுகதை தொகுப்பும் வெளியாகியுள்ளன.

சினிமாவில் வாய்ப்பு…

2021ல், பிரபல எழுத்தாளர் நடத்திய ‘‘திரைக்கதை எழுதுவது எப்படி?’’ என்ற ஆன்லைன் ஒர்க் ஷாப்பில் கலந்துகொண்டேன். அந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இயக்குநர் அ.வெங்கடேஷ் வந்திருந்தார். ஒர்க் ஷாப் முடிவில் நடத்தப்பட்ட போட்டியில் நான் வெற்றி பெற்றேன். அந்த ஒர்க்‌ஷாப் மூலமாக அயராத உழைப்பும் நல்வாய்ப்பும் இருந்தால், சினிமாவில் கதை மற்றும் திரைக்கதை, வசனம் எழுத வாய்ப்பு கிடைக்கும் என்பதை புரிந்து கொண்டேன்.

ஒர்க்‌ஷாப் முடிந்து ஒரு மாதம் இடைவேளைக்குப் பிறகு இயக்குநர் வெங்கடேஷ் அவர்களிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. நான் எழுதியுள்ள புத்தகங்களைப் பற்றி விசாரித்தது மட்டுமில்லாமல் என்னுடைய ஐந்து நாவல்களையும் அவருக்கு அனுப்பி வைக்கச் சொன்னார். நாவல்களை படித்துவிட்டு நன்றாய் இருப்பதாகவும் பாராட்டினார். அதன்பின், அவர் இயக்க இருக்கும் ‘‘ஆபரேஷன் லைலா!’’ என்ற படத்திற்கு வசனம் எழுத முடியுமா? என்று கேட்டார். கதையின் கருவினை தெரிந்து கொண்டு அந்தப் படத்திற்கு வசனம் எழுதிக்
கொடுத்தேன்.

இது பேய்ப்படம்தான். பொதுவாக பேய்ப்படம் என்றாலே, எனக்கு ரொம்ப பயம். நான் அந்தப் படங்களை பார்க்கவே மாட்டேன். ஆனால் எனக்கு அப்படிப்பட்ட ஒரு படத்திற்கு முதல் முறையாக வசனம் எழுத வாய்ப்பு வந்தது என்பதுதான் வேடிக்கை. அது எனக்கு ஒரு பெரிய சவால் என்று நினைத்துக் கொண்டுதான் எழுதத் துவங்கினேன். பள்ளி வளாகத்தில் நடைபெறும் அமானுஷ்ய சம்பவங்களும், அதன் காரணங்களும்தான் படத்தின் கதை.

இந்தப் படம் ஒரு நல்ல சமூக கருத்தை வலியுறுத்தும் திரைப்படம். படம் பார்த்த அனைவருமே படம் நன்றாக இருப்பதாக பாராட்டினார்கள். படம் பார்த்த தாய்மார்கள், அது ஒரு பேய்ப்படம் என்பதையும் மறந்து எமோஷனலாக கனெக்டானதை நேரில் பார்த்த போது எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருந்தது.

சினிமாத்துறையில் பெண் எழுத்தாளர்களுக்கான வாய்ப்பு…

பெண் எழுத்தாளர்களுக்கு இந்த துறையில் வாய்ப்புகள் மிகவும் குறைவுதான். காரணம், இயக்குநர்களே வசனமும் எழுதி விடுவதால், வசனகர்த்தாக்கள் விரல்விட்டு எண்ணும் அளவிலேயே இருக்கிறார்கள். பெண்களுக்கு எழுத்துத்திறமை இருந்தாலும், அதை அங்கீகரிக்கும் மனப்பாங்கு பெரும்பாலும் இருப்பதில்லை. ஒரு ஆண் எழுதுவதற்கும் அதையே பெண் எழுதுவதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. ஆண்கள் Clinically Correct முறையில் எழுதுவார்கள். ஆனால், பெண் எழுத்தாளர்கள் அதே விஷயத்தை Audience Emotionally Connect என்ற கண்ேணாட்டத்தில் எழுதுவதில் தேர்ந்தவர்கள். அவர்களை புரிந்துகொண்டு வாய்ப்பளித்தால், கண்டிப்பாக அவர்களாலும் இந்த துறையில் வெற்றி பெற முடியும்.

எதிர்கால ப்ராஜக்ட்கள்…

நடிகை ஒருவர் நடிக்கும் வெப் சீரீசுக்கு திரைக்கதை வசனம் எழுதி கொடுத்துள்ளேன். மற்றுமொரு திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதுவது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பிரபல தொலைக்காட்சியில் நான் எழுதிய கதை ஒன்றினை சீரியலாக எடுப்பதற்கான ஆலோசனையும் உள்ளது.

இயக்குநர் வெங்கடேஷ்…

திறமையான எழுத்தாளர்கள் என்றால் அவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்க தயங்கமாட்டார். கதையை விவரிக்கும்போதே, காட்சியினை எவ்வாறு நகர்த்த வேண்டும் என்று விளக்குவது மட்டுமில்லாமல் அதில் எவ்வாறு காமெடியினை புகுத்த வேண்டும் என்பதையும் விளக்குவார். ஒரு ஸ்கிரிப்ட் முழுவதும் முடித்த பிறகுதான் அந்த படத்திற்கான தயாரிப்பாளரை அணுகுவார். அதனால்தான் அவரால் ‘‘ஆபரேஷன் லைலா’’ திரைப்படத்தை 28 நாட்களுக்குள் முடிக்க முடிந்தது.

இதில் நான் உதவி வசனகர்த்தாவாகவும், கார்த்திகா என்பவர் இசையமைப்பாளராகவும், பானுமதி அவர்களை துணை இயக்குநராகவும் அறிமுகப்படுத்தினார். தமிழ்த்திரை உலகில் வசனகர்த்தா என்ற அறிமுகம் எனக்கு கிடைக்க காரணம் அவர்தான். அதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையிலும் எனக்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தார். அதற்கு நான் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை போல் பல பெண் எழுத்தாளர்கள் இத்துறைக்கு வரவேண்டும்’’ என்ற பொற்ெகாடி எழுத்துச் செம்மல், பெருமைமிகு பேராசிரியர், தேசப்பிதா, சிங்கப்பெண் 2024 போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.

தொகுப்பு: தனுஜா

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi