‘உப்பில்லா பண்டம் குப்பையிலே’… ‘நொறுங்க தின்றால் நூறு வயது’ என பழமொழிகளுக்கு ஏற்ப உணவுதான் நம் ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கிறது. தற்போது உள்ள தலைமுறையினர் வேலைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதும், ஆரோக்கிய உணவின் மேல் சரியான பற்றுதல் இல்லாமல் இருக்கிறார்கள். இயந்திர மயமான வாழ்க்கையில் என்னதான் வீட்டு உணவு என்று சமைத்து பரிமாறினாலும் நாம் அதிகம் தேடுவது நம் பாட்டி, அம்மா சமைத்த உணவுகளும் அதன் ரெசிபிகளும்தான். உறவுகளை இணைக்கும் மகத்துவம் சாப்பாட்டிற்கு உள்ளது.
அப்படிப்பட்ட சாப்பாட்டினை சமைப்பது என்பது அவ்வளவு சுலபம் கிடையாது. பார்த்து பார்த்து சமைத்தாலும் ஏதேனும் ஒரு குறை இருப்பதாக தோன்றும். சிலர் விருந்து படைக்கும் அளவிற்கு சமைப்பார்கள், ஆனால் பலகாரங்கள் சரியாக செய்ய வராது. சமையல் முதல் சின்னச் சின்ன பலகாரம் வரைக்கும் தனக்கு தெரிந்த பாரம்பரியமான முறையில் செய்து தனது குடும்பத்திற்கு மட்டும் அல்லாது பலருக்கும் ஆர்டரின் பேரில் கொடுத்து வருகிறார் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த கிரிஜா பாட்டி.
‘‘நான் பெரிய குடும்பத்தில் இருந்து வந்ததால் அதிக பேருக்குதான் சமைக்க தெரியும். கொஞ்சமாக சமைக்க எனக்கு வராது. இதிலிருந்துதான் என் பயணம் துவங்கியது’’ என பேச ஆரம்பித்தார் கிரிஜா பாட்டி. ‘‘எனக்கு 18 வயசில் திருமணமானது. திருமணமான புதிதில் என் மாமியார் அப்பளம் பொரிக்க சொன்னாங்க. எனக்கு சமையல் பற்றி எதுவுமே தெரியாது. அப்பளத்தை கருக விட்டுட்டேன். அதுமட்டுமில்லாமல் எண்ணெய் தெறித்து காயமும் ஏற்பட்டது.
அப்ப முடிவு செய்தேன். எல்லா சமையலும் கத்துக்கணும்னு. என் அம்மாதான் எனக்கு சமைக்க கற்றுக் கொடுத்தாங்க. என் மாமியார் மட்டுமில்லை அவங்க மாமியாரும் எனக்கு சில சமையல் கற்றுக் கொடுத்தாங்க. பொதுவாக வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகள் தான் பாதுகாப்பானது, ஆரோக்கியமானதும் கூட. ஆனால் வளர்ந்து வரும் தலைமுறையினருக்கு சமைக்க போதிய நேரம் இல்லாததால் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் ஒரு வட்டத்திற்குள் இருப்பதில்லை.
இதில் என் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளும் அடக்கம். அவங்களுக்காக நான் என் கைப்பட சில உணவுகளை தயாரித்து கொடுப்பேன். அப்போது தான் என் குழந்தைகள் போல் பலரும் வேலைக்கு தரும் முக்கியத்துவத்தினை தரமான உணவிற்கு கொடுப்பது என்பது சிக்கலாக இருக்கிறது என்று தெரிந்தது. அவர்களுக்கும் நம் உணவினை கொடுக்க முடிவு செய்தேன்’’ என்றவர் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் அதன் தரம் குறித்து விளக்கினார்.
‘‘எங்களின் சமையலில் தரமான பொருட்களுக்கு மட்டுமே இடமுண்டு. சில உணவுப் பொருட்களுக்கு கடலை எண்ணெயும், மற்ற உணவுகளுக்கு தேங்காய் எண்ணெயும் பயன்படுத்துகிறோம். ஊறுகாய் போன்றவற்றுக்கு நல்லெண்ணைதான். பெருங்காயம் மற்றும் குங்குமப்பூ தான் எங்கள் உணவின் முதன்மை பொருட்கள். ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயினை மறுமுறை உபயோகிக்க மாட்டோம். மேலும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களும் இயற்கையான முறையில் விளைந்தவற்றைதான் பயன்படுத்துகிறோம். பதப்படுத்தப்பட்ட, நிறத்தை கூட்டக்கூடிய பொருட்கள், டால்டா மற்றும் பாமாயிலுக்கு எங்க கிச்சனில் இடம் கிடையாது.
முதன் முதலில் நான் வீட்டில் சமைத்த மிளகாய் கறியை வைத்துதான் பிசினசை துவங்கினேன். இது குழம்பிற்கு சேர்க்கப்படும் மிளகாய்ப் பொடி கிடையாது. பச்சை மிளகாய் மற்றும் புளி சேர்த்து செய்வது. இது எங்க குடும்பத்தின் பிரதான உணவும் கூட. அதேபோல் மாலட்டு. இதனை ரொம்ப காலமா என் குடும்பத்திற்கு மட்டுமில்லாமல், என் நண்பர்களுக்கும் செய்து தருகிறேன். சிலர் தங்களின் வீட்டு விசேஷங்களுக்கு முன்கூட்டியே ஆர்டர் செய்திடுவாங்க.
இதனைத் தொடர்ந்து பலர் ஊறுகாய், இனிப்புகள், காரம் மற்றும் சில பொடிகள் செய்து தர சொல்லி கேட்டாங்க. நானும் செய்து கொடுத்தேன். அப்படித்தான் படிப்படியாக என்னுடைய பிசினஸ் வளர்ந்தது. பலர் என்னை தொடர்பு கொண்டு பேசும் போது அவர்களின் பாட்டியின் சமையல் நினைவிற்கு வருவதாக கூறுவார்கள். அதைக் கேட்கும் போது மனசுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கும்.
என்னை பொறுத்தவரை, பெண்கள் ஒரே நேரத்தில் பல விஷயங்களை கையாள்வதில் திறமையானவர்கள். ஆனால் அவர்களின் திறமையினை வெளிப்படுத்த போதிய வாய்ப்புகள் கிடைப்பதில்லை. ஒரே நேரத்தில் அவர்களுக்கு குடும்பத்தையும் வேலையையும் கவனித்துக்கொள்ள சாதகமான முறைகள் அமைவதில்லை. இதே அவர்களுக்கான வாய்ப்புகள் மறுக்காமல் கொடுக்கப்பட்டால் அவர்களும் சில அற்புதமான விஷயங்களை சாதித்துக் காட்டுவார்கள். கொரோனா காலத்தில் பலருக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போனது.
அந்த சமயத்தில் பாதிக்கப்பட்ட பல குடும்ப பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தோம். இதன் மூலம் என்னுடைய முக்கிய நோக்கமான வசதி குறைந்த, வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எனது கனவினையும் நிறைவேற்ற முடியும் என நம்பினேன்’’ என்ற கிரிஜா பாட்டி இதனை எவ்வாறு பிசினசாக மாற்றினார் என்பது பற்றி குறிப்பிட்டார்.
‘‘ஆரம்பத்தில் எனக்கு தெரிந்தவர்களுக்கும் என்னிடம் கேட்பவர்களுக்கும் சமையல் குறிப்புகளை சொல்வேன். சிலர் சமைத்து தரச்சொல்லி கேட்பார்கள். அவர்களுக்கு செய்து தருவேன். 2018-ல் இனிப்பு மற்றும் காரத்திற்கு மட்டும் சமூக வலைத்தள பக்கத்தை துவங்கினேன். அதன் மூலம் ஆர்டர்கள் குவிந்தன. தற்போது வாட்ஸ் ஆப் மூலமாகவும் ஆர்டர்கள் எடுத்து செய்கிறேன். ஆரம்பத்தில் சென்னையில் தெரிந்தவர்களுக்கு மட்டுமே செய்து கொடுத்தேன்.
இணையத்தில் பதிவு செய்த பிறகு இந்தியா முழுதும் ஆர்டர் வர ஆரம்பித்தது. சொல்லப்போனால், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி, மேகாலயா வரை வாடிக்கையாளர்கள் உள்ளனர். வெளி இடங்களில் இருந்து வரும் ஆர்டர்களை முடிந்த அளவில் விரைவாகவும் ப்ரெஷாகவும் அனுப்பிடுவோம். அவர்களை அது அடையும் போதும் அப்போது செய்தது போல் இருக்க வேண்டும் என்பதால் பேக்கிங்கில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம்.
என்னுடைய உணவு பொருளின் மிகவும் முக்கியமான மூலப்பொருள் அன்பும் அக்கறையும்தான் அதை ஒருபோதும் நான் குறைக்கவோ அல்லது தவறவிடவோ மாட்டேன். மேலும் பெரும்பாலான சமையல் வகைகள் மிகவும் பழமையானவை. என் கொள்ளு பாட்டியிடமிருந்து அவரின் மகளுக்கு பிறகு என் அம்மாவிற்கும் கொடுக்கப்பட்ட சில குறிப்புகள் தலைமுறை கடந்து எனக்கும் கொடுக்கப்பட்டது. இதில் ஒரு சில உணவுகள் என்னுடைய கண்டுபிடிப்பும் அடங்கும்.
ஒருமுறை எனது குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் வீட்டிற்கு வந்திருந்த போது, அவர்கள் மாலை நேரம் சாப்பிடுவதற்காக சமையலறையில் இருந்த பொருட்களை வைத்துதான் இந்த மிளகாய் கறி, சேவ் முறுக்கு இரண்டையும் செய்தேன். அதிகபட்சமாக இங்கிருக்கும் பொருட்கள் என் தயாரிப்பு என்பதால் என்னுடைய பெயரையே இதற்கு வைத்து விட்டனர் எனது குடும்பத்தினர். இந்த மிளகாய் கறி கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக எனது தந்தைக்கு நான் செய்து கொடுப்பது’’ என முகம் கொள்ளா புன்னகையுடன் பதிலளித்தவருக்கு சமையல் போட்டிகளில் பங்கு பெறுவதில் பெரிய ஆர்வம் ஏற்பட்டதுஇல்லையாம்.
‘‘சமையல் சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளில் பங்கு பெறும் படி எனக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் எனக்கு அதில் பங்கு பெற ெபரிய அளவில் ஆர்வம் இருந்ததில்லை. எனக்கு மற்றவர்களுக்கு உணவு சமைத்து கொடுப்பதில் தான் மகிழ்ச்சி மற்றும் ஆர்வம் இருந்தது. காரணம், அந்த உணவினை சாப்பிடும் போது நம் மனதில் இருக்கும் பழைய நினைவுகளை
மீட்டுக் கொடுக்கும். மிளகாய் கறி, கார தட்டை, வெண்ணெய் மாலட்டு, கிளாசிக் மிக்சர், பாதுஷா, பூண்டு, கறிவேப்பிலை பொடி, மாங்காய் தொக்கு, இட்லி மிளகாய்ப் பொடி, சேவ் முறுக்கு மற்றும் கல்யாண லட்டு இவை அனைத்தும் எங்களின் சிறப்பு உணவுகள்.
திருமணத்தின் போது மட்டுமில்லாமல் ஆண்டுக்கு இரண்டு முறை கல்யாண லட்டு செய்து மற்ற இனிப்புகளோடு வழங்குவோம். மற்ற அனைத்தும் ஆர்டரின் பேரில்தான் செய்து தருகிறோம். இந்த ஆண்டு தீபாவளிக்காக பழம் மற்றும் பருப்பு வகைகள் கலந்த உலர் பழ அல்வா, முந்திரி குங்குமப்பூ முறுக்கு, முந்திரி பாதாம் ரோல், கோவில் லட்டு, மைசூர்பாக், அதிரசம், பச்சை மிளகாய் ரிப்பன் பக்கோடா, ஸ்பெஷல் மிக்சர், மோட்டா காரா சேவ் மற்றும் வெண்ணெய் முறுக்கு போன்றவை உள்ளது.
மேலும் எங்களின் வலைத்தள பக்கத்தில் இதுவரை நாங்க செய்த பல பாரம்பரியமான உணவுகளின் செய்முறைகளையும் பதிவிட்டுள்ளோம்’’ என்றவர் தன் வாடிக்கையாளர்களுக்கு அன்பும் அக்கறையும் கலந்த இனிப்பான தீபாவளி வாழ்த்தை தெரிவித்தது மட்டுமில்லாமல், அதற்கான பலகாரம் செய்ய தயாரானார்.
தொகுப்பு: காயத்ரி காமராஜ்