திருமலை: தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளின் ரூ.2 லட்சம் கடன் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசினார். தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டம், கானாபூரில் நேற்று நடந்த காங்கிரஸ் விஜயபேரி பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளின் ரூ.2 லட்சம் கடன் தள்ளுபடி செய்யப்படும். தனி தெலங்கானா வந்தால் நன்மை நடக்கும் என்ற மக்களின் ஆசைகள், கனவுகள் முதல்வர் கே.சி.ஆர் ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை. அவரது குடும்பத்தில் நாலு பேருக்கு வேலை கிடைத்துள்ளது.
தரணி போர்டல் என்ற பெயரில் நில மோசடி நடந்துள்ளதால் அதனை ரத்து செய்யப்படும். விவசாயிகள் விளைவிக்கும் பயிருக்கும் கட்டுப்படியான விலை வழங்கப்படும். பெரிய நிறுவனங்களின் துணையுடன் பாஜ நாட்டை சீரழிக்கிறது. நாட்டில், தெலங்கானாவில் பாஜக – பி.ஆர்.எஸ். இருவரும் மக்கள் பணத்தை குடிக்கிறார்கள். பாஜக, பிஆர்எஸ், எம்ஐஎம் ஆகிய மூன்று கட்சிகளும் கூட்டாளிகள்தான். காங்கிரஸ் ஆட்சி வந்ததும் ஜாப் காலண்டர் அறிவிக்கப்படும். 2 லட்சம் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். தெலங்கானா போராட்ட தியாகிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், ரூ.2 லட்சம் கடன் தள்ளுபடி செய்யப்படும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் 6 உத்தரவாத திட்டங்களை கண்டிப்பாக செயல்படுத்துவோம். ஜனநாயகத்தில் மக்களே எஜமானர்கள் என்று காங்கிரஸ் கட்சிக்கு தெரியும். தெலங்கானாவை எப்படி வளர்க்க வேண்டும் என்பது காங்கிரசுக்கு தெரியும். எனவே ஒருமுறை வாய்ப்பு தாருங்கள், தெலங்கானாவில் வளர்ச்சி என்றால் என்ன என்பதை செய்து காண்பிக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.