கூடுவாஞ்சேரி: கிளாம்பாக்கத்தில் ₹394 கோடி மதிப்பில் புதிய நவீன பேருந்துநிலைய கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து, அந்த புதிய பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும் என மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதற்கிடையே அப்பேருந்து நிலையத்தை வரும் 20ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் ஊராட்சி, வண்டலூர் அருகே கிளாம்பாக்கம் ஜிஎஸ்டி சாலையோரத்தில் 110 ஏக்கர் பரப்பளவில், கடந்த 2019ம் ஆண்டு, அதிமுக ஆட்சிக் காலத்தில் சிஎம்டிஏ நிர்வாகம் சார்பில் ₹393.74 கோடி மதிப்பில் புதிய நவீன பேருந்து நிலையம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது.
எனினும், அங்கு அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய நவீன பேருந்து நிலையப் பணிகள் மந்தகதியில் நடைபெற்று, பின்னர் கிடப்பில் போடப்பட்டது. இதைத் தொடர்ந்து, திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், அமைச்சர் பி.கே.சேகர்பாபு மேற்பார்வையில் சிஎம்டிஏ நிர்வாகம் புதிய நவீன பேருந்துநிலைய கட்டுமானப் பணிகளை முடுக்கிவிட்டது. இந்த நவீன பேருந்து நிலையத்தில் 2 அடித்தளம், தரைதளம் மற்றும் முதல் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கீழ்தளத்தில் 324 நான்கு சக்கர வாகனங்கள், 2769 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதியும், 8 புறநகர் பேருந்து நடைமேடையும், 11 மாநகர பேருந்து நடைமேடையும், 226 புறநகர் பேருந்துகள், 152 அரசு பேருந்துகள் மற்றும் 63 தனியார் பேருந்துகள் வந்து செல்வதற்காக நிறுத்துமிடம், எரிபொருள் நிரப்பும் இடம், காவலர் அறை மற்றும் கண்காணிப்பு கேமிரா அறை, கீழ்தள நீர்த்தேக்க தொட்டி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
தற்போது, அங்கு 99 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, கலெக்டர் ராகுல்நாத் உள்பட பல்வேறு அரசு துறை உயர் அதிகாரிகள் அடிக்கடி நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். எனினும், இங்கு ஒன்றிய அரசின்கீழ் இயங்கும் தேசிய நெடுஞ்சாலை துறையின் அனுமதி கிடைக்காததால், புதிய நவீன பேருந்து நிலைய நுழைவுவாயிலின் முன் ₹6 கோடி மதிப்பில் எஸ்கலேட்டர், மேம்பாலம், கால்வாய் மற்றும் மழைநீர் பாலம் அமைக்கும் பணிகள் முற்றுப் பெறவில்லை. இதனால் திறப்பு விழா தள்ளிப் போய்க்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் மக்களிடையே திறப்பு விழா எப்போது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. நவீன பேருந்துநிலைய கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் 20ம் தேதி தமிழ்நாடு இளைஞர் நலன், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்கிறார். இதைத் தொடர்ந்து, கிளாம்பாக்கம் புதிய நவீன பேருந்து நிலையத்தின் திறப்பு விழா தேதி முடிவாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.