அகமதாபாத்: விமானம் 600 அடி உயரத்தை அடைந்த பிறகே கோளாறு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்றும், 50 அடி உயரத்தை அடைந்தவுடன் சக்கரங்கள் உள்ளிழுக்கப்படாதது ஏன்? என்று ட்ரீம்லைனர் விமானத்தை இயக்கிய மாஜி கேப்டன் கேள்வி எழுப்பி உள்ளார். அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தை இயக்கிய அனுபவம் கொண்ட ஓய்வுபெற்ற கேப்டன் ராகேஷ் ராய் அளித்த பேட்டியில், ‘விபத்துக்குள்ளான விமானத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த விமானம் புறப்பட்ட நேரம் சாதாரணமாகவே தெரிகிறது. சுமார் 600 அடி உயரத்தை அடைந்த பிறகே ஏதோ பெரிய கோளாறு நிகழ்ந்துள்ளது. விமானத்தின் சக்கரங்கள் (லேண்டிங் கியர்) ஏன் கடைசி வரை உள்ளிழுக்கப்படவில்லை என்பதே முதல் மற்றும் முக்கியமான கேள்வியாக உள்ளது. பொதுவாக, 50 அடி உயரத்தை அடைந்தவுடனேயே சக்கரங்கள் உள்ளிழுக்கப்பட்டுவிடும். ஆனால் அந்த விமானத்தில் அவ்வாறு உள்ளிழுக்கப்படவில்லை.
விமானத்தின் மீது பறவை மோதியிருந்தால், இன்ஜின் தனது சக்தியை இழந்திருக்கலாம். அந்தப் பதற்றத்திலும் குழப்பத்திலும் விமானிகள் சக்கரங்களை உள்ளிழுக்க மறந்திருக்க வாய்ப்புள்ளது. இரண்டாவதாக, மனிதத் தவறாக இருக்கலாம். சக்கரங்களை உள்ளிழுக்கும் கன்ட்ரோலுக்குப் பதிலாக, விமானி தவறுதலாக விமானத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் ‘ஃபிளாப்ஸை’ இயக்கியிருக்கலாம். இது விமானத்தின் சக்தியை உடனடியாகக் குறைத்துவிடும். நான் கூறும் கருத்துகள் யாவும் யூகங்களே; அதேநேரம் இதுதான் நடந்திருக்கும் என்று என்னால் கூற முடியாது. இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட விமானிகளுக்கு யோசித்து செயல்பட 20 முதல் 25 வினாடிகள் மட்டுமே நேரம் இருந்திருக்கும். அவசர நிலையைப் புரிந்துகொள்ளவே 4-5 வினாடிகள் ஆகும் நிலையில், இவ்வளவு குறைந்த நேரத்தில் எதையும் செய்வது மிகவும் கடினம். இந்த அதிநவீன விமானத்தில் அனைத்தும் எலக்ட்ரானிக் சரிபார்ப்புப் பட்டியல் என்பதால், புறப்படுவதற்கு முன் ஏதேனும் தவறு நடந்திருந்தால், உடனடியாக எச்சரிக்கை ஒலித்திருக்கும்’ என்று குறிப்பிட்டார்.