புதுடெல்லி: கேரளாவை சேர்ந்த ஓமனகுட்டன் என்ற சாப்ட்வேர் இன்ஜினியர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,’ இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப வழிகாட்டுதல் விதிகளுக்கு இணங்க வாட்ஸ்அப் தளம் மறுத்துவிட்டது. அரசியலமைப்பின் 21 வது பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட குடிமக்களின் அடிப்படை உரிமைகளை வாட்ஸ்அப் செயலி இதன் மூலம் மீறுகிறது. ேமலும் நமது நாட்டில் உள்ள அதிகாரிகளின் உத்தரவுக்கும் அந்த செயலி இணங்கவில்லை.
இந்த நடவடிக்கை தேசிய நலன் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. வாட்ஸ்ஆப் அதன் தொழில்நுட்பத்தை மாற்ற விரும்பவில்லை. அதோடு நமது அரசாங்கத்துடன் ஒத்துழைக்கவில்லை என்றால், அதை நமது நாட்டில் செயல்பட அனுமதிக்கக்கூடாது. நாட்டின் நலனுக்கு எதிராக செயல்படும் பல வலைத்தளங்கள் மற்றும் மொபைல் பயன்பாடுகளை ஒன்றிய அரசு இதே போல் தடை செய்துள்ளது.
எனவே அந்த அடிப்படையில் வாட்ஸ்அப் செயலியையும் தடை செய்ய வேண்டும்’ என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், அரவிந்த்குமார் அமர்வு விசாரித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.