கிறிஸ்துவம் காட்டும் பாதை
புகழ் பெற்று விளங்கிய நாடக ஆசிரியரைப் பாராட்டி விருந்தளிக்க விரும்பினார் அந்த நாட்டு அதிபர். நாடக ஆசிரியரும் மகிழ்ச்சியுடன் அதனை ஏற்றுக் கொண்டார். விருந்து நாள் வந்தது. அழைக்கப்பட்டோர் அனைவரும் வந்து சேர்ந்தனர். நாடக ஆசிரியரும் வந்து சேர்ந்தார். ஆனால் வரவேற்பாளர்கள் அவரை உள்ளே விடாமல் வாசலிலேயே தடுத்து நிறுத்தினர். அவர் விருந்துக்குரிய உடை அணிந்து வரவில்லை.
அதனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவரும் அதனைப் பொருட் டுத்தாமல் சிரித்தபடியே, மீண்டும் வருவதாகக் கூறிச்சென்றார். உரிய ஆடை அணிந்து வந்த அவரை அனைவரும் வரவேற்றனர். விருந்து தொடங்கியது. அனைவரும் மதுக்கோப்பையைக் கையில் எடுத்தனர். மது அருந்தத் தொடங்கினர். போதை ஏறியதும் தள்ளாடியபடியே வாழ்த்தினர். நாடக ஆசிரியர் மது அருந்தவில்லை. நடப்பவை அனைத்தையும் வேடிக்கை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்.
தனது விருந்துக்குரிய ஆடையைக் கழற்றி அதை மதுக்கிண்ணத்தில் தோய்த்தார். எல்லோரும் வியப்புடன் அவரைப்பார்த்தனர். அவர் சொன்னார். ‘‘இங்கே நான் வரவேற்கப்படவில்லை. இந்த ஆடைக்குத்தான் மதிப்பு. வரவேற்பு, எனவே இந்த ஆடையை விருந்தில் பங்கெடுத்துக்கொள்ளட்டும்.’’ ‘‘நாம் நம் வாழ்வில் எதற்கு மதிப்பளிக்கிறோம்? திறமைக்கா? ஆடம்பரத்துக்கா? ஒருவரது நற்பண்புகள், மற்றும் அவரது திறமையை வைத்தே அவரை மதிக்க வேண்டும். அவரது தோற்றத்தைப் பார்த்து அல்ல!
‘‘மாட்சி மிக்க நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினிடம் நம்பிக்கை கொண்டுள்ள நீங்கள் ஆள் பார்த்து செயல்படாதீர்கள். பொன் மோதிரமும், பளபளப்பான ஆடையும் அணிந்த ஒருவரும், அழுக்குக் கந்தையணிந்த ஏழை ஒருவரும் உங்கள் தொழுகைக் கூடத்தினுள் வருகிறார் என வைத்துக்கொள்வோம். அப்பொழுது நீங்கள் பளபளப்பான ஆடை அணிந்தவர் மீது தனிக்கவனம் செலுத்தி, அவரைப்பார்த்து, ‘தயவு செய்து இங்கே அமருங்கள்’ என்று சொல்கிறீர்கள்.
ஏழையிடமோ ‘அங்கே போய் நில்’ என்றோ, அல்லது, ‘என் கால் பக்கம் தரையில் உட்கார்’ என்றோ சொல்கிறீர்கள். இவ்வாறு உங்களுக்குள்ளே வேறுபாடு காட்டி தீய எண்ணத்தோடு மதிப்பிடுகிறீர்கள் அல்லவா? என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! நான் சொல்வதைக் கேளுங்கள். உலகின் பார்வையில் ஏழைகளாய் இருப்பவர்களை நம்பிக்கையில் செல்வர்களாகவும், தம்மீது அன்பு செலுத்துபவருக்கு வாக்களிக்கப்பட்ட அரசை உரிமைப் போராகப் பெறுபவர்களாகவும் கடவுள் தேர்ந்து கொள்ளவில்லையா? நீங்களோ, ஏழைகளை அவமதிக்கிறீர்கள்.
உங்களைக் கொடுமைப்படுத்தி நீதிமன்றத்திற்கு இழுத்துச் செல்வோர் யார்? செல்வர் அல்லவா? கடவுள் உங்களுக்குக் கொடுத்துள்ள நற்பெயரைப் பழிப்பவர்களும் அவர்கள் அல்லவா? ‘‘உன்மீது அன்பு கூறுவதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூறுவாயாக!’’ என்னும் இறையாட்சியின் சட்டம் மறைநூலில் உள்ளது. இதை நீங்கள் கடைப்பிடித்தால் நல்லது. ‘‘மாறாக நீங்கள் ஆள் பார்த்து செயல்பட்டால் நீங்கள் செய்வது பாவம். நீங்கள் குற்றவாளிகளென அச்சட்டம் உங்களுக்குத் தீர்ப்பளிக்கும். ஒருவர் சட்டம் ஒன்றில் மட்டும் தவறினாலும் அவர் அனைத்தையும் மீறிய குற்றத்துக்குள்ளாவார்.’’ (யாக்கோபு 2:110)
– ‘‘மணவைப்பிரியன்’’ஜெயதாஸ் பெர்னாண்டோ