இந்திய அரசியல் சாசனத்தில் ஒரு மாநிலத்துக்கு நியமிக்கப்படும் ஆளுநர் அரசை அனுசரித்து உரிய ஆலோசனைகளை வழங்க கடமைப்பட்டுள்ளார். ஆனால் தமிழக ஆளுநர் தனது பொறுப்பு என்னவென்று தெரியாமலேயே முரண்பட்டு நிற்கிறார். அரசுக்கும், ஆட்சிக்கும் எதிராக நடந்து கொண்டால் மக்கள் மத்தியில் பேசப்படுவோம் என்ற காரணத்துக்காக விளம்பரம் தேடுகிறாரா என்று தெரியவில்லை. பல்கலைக்கழக சிண்டிகேட் மற்றும் செனட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி சுதந்திர போராட்ட தியாகி சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.
மூத்த அரசியல்வாதியாகவும், சுதந்திர போராட்ட தியாகியாகவும் விளங்கும் அவரது வாழ்க்கை குறிப்பும், எதற்காக அவருக்கு டாக்டர் பட்டம் வழங்க பரிந்துரைக்கப்பட்டது என்ற விளக்கமும் அரசு தரப்பில் ஆளுநரிடம் வழங்கப்பட்டுள்ளது. அதில் ஏதாவது ஆளுநருக்கு சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து நிவர்த்தி செய்து கொண்டிருக்கலாம். ஆனால், சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் பரிந்துரையை கண்மூடித்தனமாக நிராகரிப்பது காழ்ப்புணர்ச்சி அரசியல் என்று சொல்லாமல் வேறு எப்படி நினைக்க முடியும். 102 வயதிலும் சமூகத்துக்காக குரல் கொடுத்துவரும் மூத்த போராளியை தமிழக அரசு கவுரவிக்க நினைக்கிறது.
இதில் ஆளுநர் என்ன தவறு கண்டுவிட்டார். பொதுவுடைமை போராட்டவாதியான சங்கரய்யாவின் சமூகநீதி கொள்கையை ஆளுநர் விரும்பவில்லையா?. தமிழக அரசு சார்பில் சங்கரய்யாவுக்கு தகைசால் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. அப்போது அந்த விருதுக்கான ரூ.25 லட்சத்தை வாங்காமல் அரசு நிதியில் சேர்த்து ஏழை, எளிய மக்கள் தேவைக்கு பயன்படுத்துங்கள் என்று கூறிவிட்டார். இவ்வளவு பெருந்தன்மையான மனம் கொண்டவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க வேறு என்ன தகுதி எதிர்பார்க்கிறார் ஆளுநர் என்பது புரியவில்லை. செல்லும் இடமெல்லாம் கருப்புக் கொடி எதிர்ப்பு வலுத்தாலும் வறட்டு கவுரவத்தை அவர் மாற்றிக்கொள்வதாக இல்லை.
அரசுடன் முரண்பட்டு இருப்பது, சட்டத்தை மதிக்காமல் செயல்படுவது, இடதுசாரி சிந்தனைவாதிகளை ஒதுக்குவது, திராவிட மாடல் பற்றி பேசுபவர்களை அவமதிப்பது ஆகிய தான்தோன்றித்தனமான எண்ணங்களை மனதில் வைத்துக்கொண்டு தமிழக ஆளுநர் செயல்பட்டு வருகிறார். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்துவது, திருப்பி அனுப்புவது என்று அரசுக்கு ஒத்துழைக்காத ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழக அரசு எதையும் சட்டரீதியாக எதிர்கொண்டு நியாயத்தை பெற நீதிமன்றத்தை நாடியுள்ளது.
ஒன்றிய அரசை திருப்திப்படுத்த ஆளுநர் தமிழகத்தில் கையாண்டு வரும் நிர்வாகரீதியான அரசியல் திராவிட மாடல் அரசை இம்மி அளவு கூட அசைக்க முடியாது. ஆளுநரின் வேலை மாநில அரசு கொண்டுவரும் கோப்புகளில் கையெழுத்திடுவது மட்டும் தான் என்று மக்களும் நன்கு அறிவார்கள். ஆட்சியாளர்கள் அபத்தமானவர்கள், நான் மட்டுமே சத்திய கீர்த்தி என்ற பிம்பத்தை ஏற்படுத்த ஆளுநர் மேற்கொண்டு வரும் முயற்சிகள் வெற்றி பெறவே முடியாது. எனவே தகைசால் தமிழர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் கையெழுத்திட வேண்டும் அல்லது மறுப்பதற்கான காரணத்தை ஆளுநர் வெளியிட வேண்டும் என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.