?கனவில் கோயில் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
– த.சத்தியநாராயணன், அயன்புரம்.
கனவில் வந்த கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்ய வேண்டும். ஏதோ ஒரு பிரார்த்தனை நிலுவையில் உள்ளது, அதனை நினைவூட்டுவதற்காக கனவில் அந்த ஆலயம் தோன்றியுள்ளது என்று பெரியவர்கள் சொல்வார்கள். நிலுவையில் உள்ள பிரார்த்தனை அல்லது நேர்த்திக்கடனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். நம் ஆழ்மனதில் உள்ள சிந்தனைகளே உறங்கும்போது கனவில் வருவதற்கான வாய்ப்பு அதிகம். நமக்கும், கனவில் வந்த ஆலயத்திற்கும் ஏதோ ஒருவகையில் தொடர்பு இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு, அது என்ன தொடர்பு என்பதை நமது குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் துணைகொண்டு அறிந்துகொள்வது நல்லது. அதன்மூலம் நம்மால் இயன்ற திருப்பணியினை அந்த ஆலயத்திற்குச் செய்ய வேண்டும்.
?ராசிகளில் நெருப்பு ராசி, நீர் ராசி என்ற பிரிவினை இருப்பது உண்மைதானா?
– ராஜாராமன், கும்பகோணம்.
உண்மைதான். பன்னிரு ராசிகளில் மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்றையும் ‘நெருப்பு ராசிகள்’ என்றும், ரிஷபம், கன்னி, மகரம் ஆகியவற்றை ‘நில ராசிகள்’ என்றும், மிதுனம், துலாம், கும்பம் ஆகிய இம்-மூன்றையும் ‘காற்று ராசிகள்’ என்றும், கடகம், விருச்சிகம், மீனம் ஆகியவற்றை ‘நீர் ராசிகள்’ என்றும் ஜோதிடர்கள் அழைக்கிறார்கள். அதற்கேற்றவாறு நெருப்பு ராசிக்காரர்கள் எளிதில் கோபப்படுபவர்களாகவும், நில ராசிக்காரர்கள் பொறுமைசாலிகளாகவும், காற்று ராசிக்காரர்கள் அலைபாயும் மனதினை உடையவர்களாகவும், நீர் ராசிக்காரர்கள் எளிதில் இளகுகின்ற மனதினைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
?ராகு என்றாலே அச்சமாக இருக்கிறதே? உண்மையிலேயே ராகு திசை மோசமான திசையா? ராகு நல்லதை செய்யமாட்டாரா?
– ஸ்ரீதர், வேளச்சேரி – சென்னை.
நாம் சரியாக இருந்தால் எந்தத் திசையைப் பார்த்தும் நடுங்க வேண்டியதில்லை. இருப்பினும் ராகு திசையைப் பற்றி சில விஷயங்களைச் சொல்கின்றேன். ராகு பாம்பு கிரகம். பாம்பின் தலை ராகு. வால் கேது. இதற்கு இடையில் மற்ற கிரகங்கள் அமைந்தால் கால சர்ப்ப யோகம் அல்லது தோஷம் என்று அமைப்பைப் பொறுத்துச் சொல்வார்கள். ராகு நமது தாத்தாவிற்கு காரகன். குழந்தை பிறப்பை நிர்ணயிப்பது ஆணின் உயிரணுவில் உள்ள Y குரோமோசோம். நமது தந்தை வழி தாத்தா, தாத்தாவிற்கு அப்பா என்று ஒரு வரிசையில் நாம் செல்லும்போது, நமது பிறப்பிற்குக் காரணம் ராகுவே என்று புரிந்துவிடும்.
அதனால் தான் நமது ஆத்மா காரகன் சூரியன் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் நீசமாகிறார். ராகுவிற்கு புதன்-சுக்கிரன்-சனி நண்பர்கள். குரு -சூரியன்-சந்திரன் பகைவர்கள் ராகு ஓரக்கண் பார்வை உடையவர். ராகு ஜாதகத்தில் பலம் பெற்றவர்கள் சூதாட்டம், லாட்டரி போன்ற திடீர் லாபம் பெறுவார்கள். ஊரை ஏமாற்றி பெரும் பணக்காரர்கள் ஆவது எல்லாமே ராகு பகவான் வேலைதான். சுக்கிரன் ராகு சேர்க்கையை தகாத இன்ப வழிகளில் கொண்டு போகும். ராகுவின் நட்சத்திரங்கள் காம திரிகோண ராசிகளில் மட்டுமே வரும். எனவே ராகுவின் தன்மை இன்பத்தைப் பொறுத்தே அமையும். அது உயிர் இன்பமா அல்லது பொருள் இன்பமா என்று பிரித்துப் பார்க்க வேண்டும். எது எப்படியிருந்தாலும் நல்ல எண்ணங்களோடு பகவானின் மீது பாரத்தை இறக்கி வைத்து விட்டு உங்களுக்கும் மற்றவர்களுக்கும் உபயோகமாக வாழுங்கள். விஷத்தை கொடுக்கும் ராகு, மாணிக்கத்தையும் தருவார்.
?பெரும்பாலான சாலை விபத்துகள் கோயிலுக்குச் சென்று திரும்பும் போது, நடக்கிறதே?
– விஜய் பிரசாத், திருச்சி.
இன்றைய நவீன காலத்தில் அதிவேக போக்குவரத்தால் விபத்துக்கள் நிகழ்கின்றன. எல்லா இடங்களுக்கு போய் வரும் போதும் விபத்து நடந்தாலும், கோயிலுக்குப் போய் வரும் போது நடைபெறும் விபத்துக்கள் சிறப்பு கவனம் பெறுகின்றன.
இதை இப்படியொரு கோணத்தில் யோசித்துப் பாருங்கள். பெரும்பாலும் கோயிலுக்குச் சென்று விட்டு வருபவர்கள் அவசர பயணம் செய்வார்கள். முதல் நாள் வரை வேலை செய்து விட்டு, சரியாகத் துங்காமலும், ஓய்வு எடுக்காமலும், பயணம் மற்றும் கூட்ட நெரிசல்களாலும் மிகவும் களைப்பாகவே பயணம் செய்வார்கள். ஓட்டுனரும் ஓய்வில்லாமல் அடுத்தடுத்த நிர்ப்பந்த சவாரி வந்திருப்பார்.
கோயிலுக்குச் சென்று திரும்பும் போது ஓட்டுனருடன் பேசக் கூட ஆள் இல்லாமல், தூங்கி விடுவார்கள். இதனால் ஓட்டுனரும் வாகனத்தை இயக்கம் போதே தூங்கி விடுவார். இதனால் தான் நிறைய விபத்துக்கள் உண்மையில் நடக்கிறது. நம் ஏற்பாட்டில் உள்ள குறைபாட்டை சரி செய்து கொள்ளாமல், தெய்வத்தோடும் ஆன்மிகத்தோடும் முடிச்சி போடுவதும், அதற்கொரு அர்த்தத்தைக் கற்பிப்பதும் தவறு.
?ஆண்டாளுக்கு கோதா என்று ஒரு பெயர் இருக்கிறதே. கோதா என்றால் என்ன பொருள்?
– திவ்யாஸ்ரீ, பண்ரூட்டி.
கோ என்றால் மங்கலம்
தா என்றால் தருபவள்.
கோதா – மங்கலம் தருபவள்
பரணி பூரம் பூராடம் -சுக்கிரனுக்
குரிய நட்சத்திரங்கள்.
சிம்ம ராசியில் பூரம் நட்சத்திரத்தில் பிறந்தாள் ஆண்டாள்.
சிம்ம ராசி என்றாலே கம்பீரம் அதிகம்.
ஆளுமை அதிகம்.
அதனால் தான் ஆண்டாள் என்று பெயர்.
……..யா பலாத் க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதமிதம்
பூய ஏவாஸ்து பூய …………
இதில் பலாத் க்ருத்ய-என்ற சொல்லுக்கு இறைவனை ஆண்டாள் என்ற பொருள் வரும்.
ஆடி மாதத்தில் பிறந்தாள். ஆடி ஆடி அகம் கரைந்தாள்.
செவ்வாய்க் கிழமையில் பிறந்தாள். பூமா தேவி அம்சமல்லவா.
செவ்வாய் பூமிக்கு உரியவன். தன்னம்பிக்கையும் தைரியமும் வைராக்கியமும் செவ்வாயின் குணம்.தெற்கு திசை ஆகிய வில்லிபுத்தூரில் பிறந்தாள். அதனால்தான் ரங்கநாதன் அவளைப் பார்ப் பதற்காக தெற்குநோக்கி இருக்கிறான்.