?சனி நீராடு என்றால் சனிக் கிழமை எண்ணெய் தேய்த்துக் குளி என்று பொருளா? இல்லை வேறு அர்த்தம் உண்டா?
– ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணண்புதூர்.
சன்னமான நீரில் அதாவது சில்லென்று இருக்கும் ஆற்றுநீரில் அதிகாலைப் பொழுதில் ஸ்நானம் செய்ய வேண்டும் என்பதே சனி நீராடு என்பதன் பொருள் என்று ஒரு சிலர் சொல்வார்கள். குளித்தல் என்பதற்கும் நீராடுதல் என்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. குளித்தல் என்பது அன்றாடம் நாம் செய்துகொண்டிருக்கும் ஒரு பணி. அதே நேரத்தில் நீராடுதல் என்றால் அவசரம் ஏதுமின்றி நிதானமாக மெதுவாக ஓடிக் கொண்டிருக்கும் நீரில் உச்சி முதல் உள்ளங்கால் வரை நன்றாக தேய்த்து ஸ்நானம் செய்வது என்று பொருள். ஔவை பிராட்டி அறிவியல் அறிவு பெற்றவர். அவருடைய பாடல்களில் ஆங்காங்கே இந்த அறிவுத்திறன் வெளிப்படுவதைப் பார்க்கலாம். சனி என்னும் கோளின் ஆதிக்கத்தினை பெற்றது எள் என்கிற தானியம். அந்த தானியத்தில் இருந்து எடுக்கப்படுவது நல்லெண்ணெய். இந்த சனியே ஆயுள்காரகன் என்று அழைக்கப்படுபவர். அதனால் சனிக்கிழமை நாளில் உச்சி முதல் உள்ளங்கால் வரை நல்லெண்ணெய் தேய்த்து ஆற்று நீரில் குளிக்க வேண்டும் அப்படி நீராடுபவர்களின் ஆயுள் என்பது நீடித்திருக்கும் என்பதையே அவர் சனி நீராடு என்று குறிப்பிட்டுள்ளார் என்பதே அதற்கான தெளிவான விளக்கம்.
?துருவ நட்சத்திரம் என்றால் என்ன?
– சுபா, ராமேஸ்வரம்.
வானில் பளிச் சென்று தெரியும் நட்சத்திரத்திற்கு துருவ நட்சத்திரம் என்று பெயர். பூமியில் எங்கிருந்து பார்த்தாலும் வடக்கு திசையில் தெரியும் நட்சத்திரம் ஆகும். ஆங்கிலத்தில் இதனை “போல் ஸ்டார்’’ அல்லது “போலாரிஸ்’’ என்று அழைப்பார்கள். அக்காலத்தில் கடல்வழி பயணம் மேற்கொள்வோர் வானத்தில் உள்ள இந்த நட்சத்திரத்தை வைத்துத்தான் திசையை தீர்மானிப்பார்கள். இந்த நட்சத்திரத்திற்கு புராண ரீதியான கதை உண்டு. உத்தானபாதன் என்ற மன்னனுக்கு சுருசி, சுநீதி என்று இரு மனைவியர் உண்டு. இவர்களில் சுநீதியின் பிள்ளைதான் துருவன். நாரதமகரிஷியிடம் உபதேசம் பெற்று பகவான் மஹாவிஷ்ணுவை நினைத்து பிள்ளைப் பருவத்திலேயே தவம் செய்து வரம் பெற்றவன். முப்பத்தாறாயிரம் ஆண்டுகள் இந்த பூவுலகை ஆட்சி செய்தபின் துருவன் வானில் நட்சத்திரமாக இடம்பிடித்ததாக புராணம் சொல்கிறது. இன்றளவும் நடுக்காட்டில் அல்லது கடல்வழியில் பயணிப் போருக்கு வழிகாட்டியாக துருவ நட்சத்திரம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
?வாசற்படியில் தும்மல் கூடாது என்று சொல்வது ஏன்?
– த.சத்தியநாராயணன், அயன்புரம்.
ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போது இடைமறிப்பது போல் தும்மினால் அது அபசகுனமாக பார்க்கப்பட்டது. அளவுக்கு அதிகமாக தூசியோ, துகளோ மூக்கில் புகுந்துவிட்டால் உள்ளே இருக்கும் சவ்வு தூண்டப்படுகிறது. அந்த தூசியை வெளித்தள்ளும் முயற்சியில் சவ்வுப்படலம் ஈடுபடுகிறது. அந்த நேரத்தில் அதிக அளவில் நீர் சுரக்கிறது. இதன் தூண்டுதலால் சுவாசப்பாதையில் உள்ள காற்று அழுத்தமாகவும் வேகமாகவும் மூக்கு வழியாக வெளியே தள்ளப்படுகிறது. இதைத்தான் தும்மல் என்ற பெயரில் அழைக்கிறோம். பொதுவாக தும்மல் என்பது ஒவ்வாமையின் வெளிப்பாடு. ஜலதோஷம் இல்லாத ஒரு நபர் திடீரென்று தும்முகிறார் என்றால் அந்த இடத்தில் அவருக்கு ஏதோ ஒரு வகையில் ஒவ்வாமை என்று அழைக்கப்படும் அலர்ஜி என்பது உண்டாகி இருக்கிறது என்று பொருள். அந்த அலர்ஜியைத்தான் அபசகுனமாகக் கருதினார்கள் நம் முன்னோர்கள். வாசற்படி என்பது புனிதத்தன்மை நிறைந்த பகுதி. வாசற்படியில் நின்று கொண்டு தும்மினால் எச்சில்பட்டு அந்த இடமானது புனிதத்தன்மையை இழக்கும் என்பதால் அப்படி சொல்லியிருக்கலாம். மற்றபடி எங்கிருந்து தும்மினாலும் அது உடலில் ஏற்படும் ஒவ்வாமையைக் குறிக்கிறது என்பதே நிஜம்.
?வெட்டிவேர் மாலையை வீட்டில் உள்ள ஸ்வாமி படங்களுக்கு அணிவிக்கலாமா?
– பொன்விழி, அன்னூர்.
வெட்டிவேர் என்பது புனிதத்தன்மை உடையது. பூஜைக்கு உரிய விசேஷ திரவியங்களில் வெட்டிவேரும் ஒன்று என்பதால் தாராளமாக வெட்டிவேர் மாலையை வீட்டில் உள்ள ஸ்வாமி படங்களுக்கு அணிவிக்கலாம். வெட்டிவேரிலிருந்து வெளிப்படும் நறுமணம், தெய்வீக சாந்நித்தியத்தைக் கூட்டும்.
?வீட்டின் கொல்லைப் புறத்தில் அரளிச் செடிகளை வைக்கலாமா?
– என். இளங்கோவன், மயிலாடுதுறை.
வீட்டின் கொல்லைப்புறத்தில் அரளிச் செடிகளை வைக்கலாம். ஆனால், வீட்டின் தோட்டத்து வாயிலுக்கும் அரளிச் செடி வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கும் குறைந்தது 30 அடி தூரமாவது இடைவெளி என்பது இருக்க வேண்டும். சுத்தமான இடத்தில் நல்ல நீருற்றி வளர்க்கப்படும் அரளிச் செடியில் இருந்து தினமும் பூக்களைப் பறித்து வீட்டில் உள்ள இறைமூர்த்தங்களுக்கு அர்ச்சனை செய்வது என்பது விசேஷமான பலன்களைத் தரும்.
?திருமணத்தடைக்கு எந்த கோயிலுக்குச் செல்ல வேண்டும்? என்ன பரிகாரம்?
– த.நேரு,வெண்கரும்பூர்.
எந்த கிரகத்தினால் திருமணம் தடை படுகிறது என்பதை ஜாதகத்தின் மூலமாக தெரிந்துகொண்டு, அந்த கிரகத்திற்கு உரிய ஸ்தலத்தில் சென்று வழிபாடு செய்வதன் மூலமாக தடை விலகக் காணலாம். பொதுவாக திருமணஞ்சேரி, திருவிடந்தை, திருநாகேஸ்வரம் மற்றும் திருக்காளஹஸ்தி போன்ற பல்வேறு தலங்களை திருமணத்தடை நீக்கும் ஆலயங்களாகச் சொல்வார்கள். அங்கே சென்று மனப்பூர்வமாக இறைவனை வழிபட்டு தடையை நீக்கக் கோரி பிரார்த்தனை செய்துகொள்வதே போதுமானது.
?வீட்டில் கடல்நீரைத் தெளித்தால் தரித்திரம் விலகுமா?
– தெ.வசந்த், திருவாரூர்.
கடல்நீரில் உள்ள உப்பு என்பது ஆன்ட்டி பாக்டீரியாவாகச் செயல்
படுகிறது. இதனால் கடல் நீரை வீட்டில் தெளிக்கும்போது அந்த வீட்டில் நோய் கிருமிகளின் தாக்கம் குறைகிறது. வீட்டில் உள்ளோரின் உடல் ஆரோக்யமாக இருந்தாலே மனமகிழ்ச்சி மற்றும் நிம்மதி என்பது இருக்கும். இதுபோன்ற காரணங்களால் கடல்நீரை வீட்டில் தெளித்தால் தரித்திரம் விலகும் என்று நம்பினார்கள். சாதாரணமாக வாரம் ஒருமுறை கல் உப்பினை நீரில் கரைத்து வீட்டைச் சுற்றி தெளித்து வருவதுகூட வீட்டில் உள்ளோரின் ஆரோக்யத்தைக் காக்கும்.