?அருளை அள்ளி வழங்கும் ஆலயங்கள் பல இருக்கும் போது, சில கோயில்களை மட்டும் ‘பரிகாரக் கோயில்கள்’ என்று கூறுவது ஏன்?
– ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன் புதூர்.
சூரியன் முதலான நவகிரகங்கள், நட்சத்திரத் தேவதைகள், முனிவர்கள், தேவர்கள், தேவதைகள்-என்போர் எல்லாம் வந்து, திருத்தலங்களில் வழிபாடுசெய்து, தங்கள் துயர் நீங்கப் பெற்றார்கள். சூரியன் முதலான அவர்கள் துயர் தீர்த்த திருத் தலங்கள் ‘பரிகாரத் தலங்கள்’ எனப்படுகின்றன.
?ஆலயங்களில் மூலவரைத் தவிர, பிராகாரங்களில் என்னென்ன தெய்வங்கள் சிருஷ்டிக்கப் பட்டிருக்கின்றன? மூலவரை மட்டும் வழிபட்டால் போதுமா?
– கே. பிரபாவதி, மேலகிருஷ்ணன் புதூர்.
ஆலயங்களில் மூலவரைச் சுற்றி, அந்தந்தத் தெய்வங்களுக்கு உண்டான ஆகமங்களில் சொல்லப்பட்டபடி, சுற்றுப்புறத் தெய்வங்கள் – கோஷ்ட தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். முதலில் இவர்களை எல்லாம் வலம் வந்து தரிசித்து, அதன்பிறகே மூலவரின் தரிசனம். நேரே மூலவர் சந்நதிக்குப்போய் வழிபாட்டை முடித்து, அப்படியே திரும்புவது மரபல்ல; கோஷ்ட – பிராகார தெய்வங்களையும் அதற்கு உரிய முறைப்படி வழிபாடு செய்ய வேண்டும்.
?கும்பாபிஷேகம் பண்ணும்போது, கருடாழ்வார் வர வேண்டும் என்கிறார்களே; ஏன்?
– வ.மீனாட்சி சுந்தரம். உலகம்பட்டி.சிவகங்கை மாவட்டம்.
கருடன் வேதத்தின் வடிவம். பகவானான பரவாசுதேவனையே தாங்கும் பாக்கியம் பெற்றவர். ‘‘பறவைகளில் நான் கருடனாக இருக்கிறேன்’’ என்று பகவான் கண்ணன் பகவத் கீதையில் சொல்லி இருக்கிறார். வேதமயமான மந்திரங்களைச் சொல்லி, வேதங்களால் துதிக்கப்படும் தெய்வத்திற்குக் கும்பாபிஷேகம் நடக்கும்போது, வேத வடிவான கருடன் வராமல் இருப்பாரா? வருவார்! கருடனைப்பற்றிய விரிவான வரலாறு – தகவல்கள், வியாச பாரதத்தில் இடம் பெற்றுள்ளன.
?இயற்கையை வணங்கினால் கடவுளை வணங்கியது போல என்கிறார்களே?
– சுபா, திருச்சி.
உண்மைதான். நம்முடைய சமய உண்மைகள் இதைத்தான் தெரிவிக்கின்றன. நாம் மழையை வணங்குகின்றோம். மண்ணை வணங்குகின்றோம். காற்றை வணங்குகின்றோம். மரங்களை வணங்குகின்றோம். பல திருத்தலங்களில் தல விருட்சமாக பல்வேறு மரங்களை வளர்க்கின்றோம். பூக்களை வணங்குகின்றோம். நீரை வணங்குகின்றோம். அதற்கென்று தனியாக மாசிமகம் போன்ற திருவிழாக்களைக் கொண்டாடுகின்றோம். நிலவை வணங்குகின்றோம். சூரியனை வணங்கி பொங்கல் வைத்துப் படைக்கின்றோம். மாடுகளை கோ பூஜை செய்து வணங்குகின்றோம். யானையை கஜ பூஜை செய்து வணங்குகின்றோம். தீயை வணங்குகின்றோம். ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒவ்வொரு வாகனமாக ஒவ்வொரு விலங்கை வைத்திருக்கின்றோம். காக்கைக்கும் நாய்க்கும் உணவளிக்கின்றோம். சிற்றுயிரான எறும்புக்கு அரிசி மாவால் கோலமிட்டு உணவு அளிக்கின்றோம். அவ்வளவு ஏன், விஷமுள்ள நாகங்களைக் கூட நாக சதுர்த்தி என்று ஒரு தினம் வைத்து வணங்குகின்றோம். இவைகளெல்லாம் சகல உயிர்களிடத்திலே நாம் கொண்டிருக்கின்ற அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்தும் செயல்கள். அதை அப்படியே சடங்குகள் ஆக்கி நமக்குக் கொடுத்திருக்கிறார்கள். எல்லாவிதத்திலும் இயற்கையை வணங்குகின்றவர்கள் நாம்.
?இப்பொழுது எல்லோரும் உடற்பயிற்சி செய்கின்றார்கள். “ஜிம்”முக்கு போகிறார்கள். என்ன காரணம்?
– கனகராஜ், மதுரை.
உடல் ஆரோக்கியத்தில் எல்லோருக்கும் ஒருவிதமான விழிப்புணர்வு இருக்கிறது. ‘‘ஜம்” என்று வாழ்வதற்கு தினசரி ஜிம்முக்கு போகிறார்கள். ஆனால், ஒரு விஷயம். உடலிலுள்ள ரத்தசர்க்கரை அளவை குறைப்பதற்காகவும், மனதை அமைதியாக வைத்திருப்பதற்காகவும் அக்காலத்தில் ஆன்மிகம் உதவியது. பெரிய கோயிலாக பல பிராகாரங்களோடு கட்டி வைத்தார்கள். மூன்று முறை பிராகாரங்களை வலம் வந்து அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து இறைவனை வழிபடுவது சாலச் சிறந்ததாக கருதப்பட்டது. அதனால் இரண்டு நன்மைகள் கிடைத்தன.
1. வெறும் வயிற்றில் கோயிலைச் சுற்றியதால், இயல்பான நடைப்பயிற்சி கிடைத்து உடல் ஆரோக்கியம் ஓங்கியது.
2. ஒரு இடத்தில் அமர்ந்து இறைவனை குறித்துச் சிந்தித்ததால் மன ஆரோக்கியமும் ஓங்கியது. இப்பொழுது உடல் ஆரோக்கியத்திற்கு ஆயிரம் வழிகள் இருக்கின்றன மன ஆரோக்கியத்திற்கு வழிகள் குறைவாக இருக்கின்றன அதாவது உடல் வலுவாகவும் உள்ளம் நோஞ்சானாகவும் இருக்கின்றது.
?இன்றைய குழந்தைகளுக்கு எது முக்கிய தேவை?
– அமல்ராஜ், சென்னை.
ஒழுக்கம், வைராக்கியம், எதையும் எதிர்கொள்ளும் திறன் இவைகளெல்லாம் இன்றைய குழந்தைகளுக்கு மிக முக்கியமாகச் சொல்லித்தர வேண்டும். இன்றைக்கு ஒரு குழந்தை வளர்ப்பதற்கு ஏராளமான பணம் தேவைப்படுகிறது என்பதை ஒவ்வொரு பெற்றோரும் உணர்ந்திருக்கிறார்கள். அதற்காக அவர்கள் ஓடிஓடி உழைக்கிறார்கள். சேர்த்து வைத்த பணத்தை குழந்தையின் கல்விக்கும் மற்ற தேவைகளுக்கும் செலவிடுகிறார்கள். ஆனால், குழந்தைக்கு அவர்கள் தங்களுடைய நேரத்தை கொடுப்பதில்லை. குழந்தைகளுக்கு பணத்தை செலவிடுவதை விட நேரத்தை செலவிட்டு அவர்களை ஒழுக்கத்தோடு வளர்ப்பது மிக முக்கியம். அவர்களுக்கு மட்டுமல்ல. நாட்டுக்கும்.
?தினசரி காலையில் எழுந்தவுடன் எவற்றையெல்லாம் பார்க்க வேண்டும்?
– சு.பரத்குமார், திருப்பூர்.
அஷ்ட மங்கலங்கள் என்று எட்டு பொருட்களைப் பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள். பொதுவாகவே, நம் மனதுக்கு எது நிம்மதியையும் அமைதியையும் தருகிறதோ அந்த மாதிரியான பொருட்களை நாம் பார்க்க வேண்டும். கோயில் கோபுரம், தெய்வங்களின் திருவுருவங்கள், புஷ்பங்கள், மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம் வீணை, மிருதங்கம் முதலிய வாத்தியக் கருவிகள், கன்றுடன் கூடிய பசு, உள்ளங்கை, தாய் தந்தை மனைவி குழந்தைகள், மகான்களின் படங்கள் ஆகியவை காலையில் எழுந்தவுடன் பார்க்கத் தகுந்தவர்கள் உங்களுக்கு யாராவது உதவி செய்திருந்தால் அந்த உதவி செய்தவரை ஒரு கணம் நினைத்துக் கொள்ளுங்கள்.
?வீட்டு வாசலில் என்றைக்கு கோலம் போடக்கூடாது?
– வே.சுரேஷ், சென்னை.
பிதுர் தேவதைகள் (நமது மறைந்த முன்னோர்) நம்முடைய வீட்டுக்கு வரும் தினங்களில் வாசலில் கோலம் போடும் பழக்கமில்லை. ஆனால், பூஜை அறையில் கோலம் போடலாம். பிதுரர்கள் மாதாமாதம் அமாவாசை அன்று வருவதாக ஐதீகம் ஆகையினால் அன்று கோலம் போட மாட்டார்கள் அதேபோல நம் வீட்டில் நீத்தார் நினைவு தினமாகிய திவசம் (சிராத்தம்) அனுஷ்டிக்கும் பொழுது வீட்டு வாசலில் அன்றைக்கு மட்டும் கோலம் போடும் வழக்கம் இல்லை.
?எவர் சில்வர் பாத்திரங்களில் நிவேதனங்களை வைத்து படைக்கலாமா?
– லஷ்மி ராஜன், கோவை.
கூடாது. எவர்சில்வர் என்பது இரும்பு சம்பந்தப்பட்டது. ஸ்டைன் லெஸ் ஸ்டீல் என்பார்கள். அதில் நிவேதனம் வைப்பது முறை அல்ல. செம்பு, பித்தளை, வெள்ளி, முதலிய பாத்திரங்களில் நிவேதனம் வைக்கலாம். இருக்கவே இருக்கிறது வாழை இலை. எல்லா இடத்திலும் கிடைப்பது. எளிமையானது. அதில் வைத்து நிவேதனம் செய்யலாமே!