நன்றி குங்குமம் டாக்டர்
பொதுவாக பெண்கள் உடல் நலம் சார்ந்த பிரச்னைகள் குறித்து பலருக்கும் நிறையவே விழிப்புணர்வு இருக்கிறது. ஆனால், ஆண்கள் உடல் நலம் சார்ந்து யாருக்கும் பெரிதாக விழிப்புணர்வு இல்லை. அதிலும் புற்றுநோய்கள் குறித்த விழிப்புணர்வு மிக மிகக் குறைவாகவே இருக்கிறது. இதுவே, பலரும் நோய் முற்றிய நிலைக்கு செல்ல காரணமாக அமைகிறது. அந்தவகையில் ஒன்றுதான் பீனைல் மற்றும் டெஸ்டிக்குலர் புற்றுநோய். அதாவது, ஆண் உறுப்பில் ஏற்படும் புற்றுநோயாகும். இந்த புற்றுநோய் ஏற்பட காரணம் என்ன, எதனால் ஏற்படுகிறது. அதற்கான தீர்வுகள் என்ன என்பது குறித்து நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் யூரோலஜி மற்றும் எலும்பு புற்றுநோய் நிபுணரான மூத்த மருத்துவர் அனந்த ராஜா.
புற்றுநோயின் வகைகள்
ஆண் உறுப்பில் ஏற்படும் புற்றுநோயில் இரண்டு வகைகள் உள்ளன. அதாவது பீனைல் புற்றுநோய் மற்றும் டெஸ்டிக்குலர் புற்றுநோய். இதில் பீனைல் புற்றுநோய் என்பது ஆண்குறியில் ஏற்படக் கூடிய புற்றுநோய். டெஸ்டிக்குலர் புற்றுநோய் என்பது விரைப் பகுதியில் ஏற்படுவது ஆகும். உலகளவில் எடுத்துக் கொண்டால் இந்தியாவில்தான் இந்த புற்றுநோய் அதிகம் காணப்படுகிறது. இந்தியாவை பொருத்தவரை வட இந்தியர்களை விட தென்னிந்தியர்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் அதிகளவில் இந்த பாதிப்பு இருக்கிறது. இதில் முக்கியமாக நாம் பார்க்க வேண்டியது என்னவென்றால், சமீபகாலமாக இந்த புற்றுநோயால் இளைஞர்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதுதான். குறிப்பாக, 15, 16 வயதில் தொடங்கி 29, 30 வயதிற்குள் இருக்கும் இளைஞர்களிடையே அதிக அளவில் காணப்படுகிறது. இதனால், அவர்களுக்கு கணவன் -மனைவி உறவு, குழந்தை பிறப்பு போன்றவற்றில் பாதிப்பு ஏற்பட்டு திருமண வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடுகிறது. எனவே, இளைஞர்கள் பெரிதும் கவனமாக இருக்க வேண்டிய சூழலில் தற்போது இருக்கின்றனர். ஆண் உறுப்பில் ஏதேனும் பிரச்னையோ, வலியோ, வீக்கமோ, கட்டியோ தொடர்ந்து இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
இதனை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்துவிட்டால், குறைந்தபட்சமாக, கீமோ தெரபி, ரேடியேஷன், அறுவை சிகிச்சை போன்றவற்றின் மூலமே சரி செய்துவிடலாம். ஆனால், முற்றிய நிலை வரை விட்டுவிட்டால், இது வயிற்றுப் பகுதி, வயிற்றுக்கு பின் பகுதியில் உள்ள நெறிக்கட்டிகள், நுரையிரல் வரை பரவிவிடும் அபாயம் உண்டு.
புற்றுநோய் ஏற்பட காரணம்
இந்த பீனைல் மற்றும் டெஸ்டிக்குலர் புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணம், ஆண்கள் தங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளாதது. பல பெண்களுடன் பாலியல் உறவு கொள்வது போன்றவையாகும்.
அறிகுறிகள்
பீனைல் புற்றுநோயை பொருத்தவரை தொடையில் நெறிக்கட்டிகள் தோன்றும். ஆண்குறியில் புண் ஏற்படுவது அல்லது தோல் சிவந்து போதல் அல்லது கறுத்துப் போதல், ரத்த கசிவு போன்றவை ஏற்படும்.டெஸ்டிக்குலர் புற்றுநோயை பொருத்தவரை, விரைகள் அல்லது விதைப்பையில் வலி மற்றும் வீக்கம் அசௌகரியம் இருக்கும்.
விரைகளில் உணர்வின்மை
விரைகள் பெரிதாக வளர்வது அல்லது சுருங்கச் செய்வது.ஒன்று அல்லது இரண்டு கால்களிலும் வீக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு. சிலருக்கு ரத்த உறைவு காரணமாக மூச்சுத் திணறல் ஏற்படலாம். ஆனால் இது அரிதாகவே ஏற்பட வாய்ப்புண்டு. அதுபோன்று ஆண்களை தாக்கும் புற்றுநோயில் இன்னொரு வகை புரோஸ்டேட் புற்றுநோய். புரோஸ்டேட் என்பது ஆண்களின் சிறுநீரக அமைப்பில் இருக்கும் ஒரு சுரப்பியாகும். இது சிறுநீர்ப்பைக்கு அருகில் சிறுநீர்க்குழாயைச் சுற்றி வருகிறது.
புரோஸ்டேட் சுரப்பியானது இனப்பெருக்கம் மற்றும் சிறுநீர் கழிப்பதைக் கட்டுப்படுத்துவதற்கு முக்கியமான செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. புரோஸ்டேட் சுரப்பியானது புரோஸ்டேடிக் திரவத்தை உற்பத்தி செய்கிறது, இதில் நொதிகள், புரதங்கள், விந்தணுக்களைப் பாதுகாக்கும் மற்றும் ஊட்டமளிக்கும் தாதுக்கள் உள்ளன. புரோஸ்டேட் சுரப்பியில் இருந்து சுரக்கும் திரவம் விந்து வெசிகல்ஸ் (புரோஸ்டேட்டின் இருபுறமும் இருக்கும்) மற்றும் வாஸ் டிஃபெரன்ஸ் ஆகியவற்றிலிருந்து திரவத்துடன் கலந்து விந்துவை உருவாக்குகிறது. பொதுவாக புரோஸ்டேட் சம்பந்தப்பட்ட நோய்கள் 50 வயதிற்குப் பிறகே தொடங்குகிறது. ஏனென்றால் வயது ஆக ஆக புரோஸ்டேட் பெரிதாக வளரக்கூடியது. புரோஸ்டேட் அதன் விரிவாக்கம் காரணமாக சில சமயங்களில் சிலருக்கு பலவித நோய்களை உருவாக்குகிறது. அதில் ஒன்றுதான் புற்றுநோய்.
முன்பெல்லாம் 50 வயதை கடந்தவர்களுக்கே இந்த புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. ஆனால், சமீபகாலமாக நவீன உணவு பழக்கவழக்கம் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றம் காரணமாக, இளம் வயது ஆண்களுக்கும் புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
சிகிச்சை முறைகள்
சிகிச்சை எனும்போது முக்கியமாக பார்க்க வேண்டியது என்னவென்றால், நிறைய பேருக்கு ஆண் உறுப்பில் புற்றுநோய் வரும் என்பதே தெரியாது. மேலும், அந்தப் பகுதிகளில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அதை வெளியே சொல்வதற்கு கூச்சப்பட்டுக் கொண்டு மருத்துவரை அணுகவும் தயக்கம் காட்டுகின்றனர்.
உதாரணமாக, பெண்களுக்கு மார்பகத்தில் கட்டி இருந்தால் அவர்கள் அதுகுறித்து நெருங்கிய உறவினர்களிடம் கூறுவார்கள். ஆனால், ஆண்கள் அது போன்று பேசுவது கிடையாது. ஆண்கள் ஆண்குறி புற்றுநோய் முற்றிய பின்னரே கடைசி நேரத்தில் தான் வருகின்றனர்.எனவே, ஆணுறுப்பில் ஏதேனும், புண்ணோ, கட்டியோ, வலியோ, வீக்கமோ இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்துவிட்டால் எளிதில் குணப்படுத்திவிடலாம். இதனால் புற்றுநோய்க்கு பிறகான வாழ்க்கையும் பெரிய அளவில் பாதிக்கப்படாது.
ஒவ்வொரு புற்றுநோய்க்கும் ஒவ்வொரு தன்மை உண்டு. சில புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை தான் தீர்வாகும். சில புற்றுநோய்க்குக் கதிர்வீச்சு முறையும், கீமோதெரபி சிகிச்சையும் அளிக்கப்படும். ஆண்குறி புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சைதான் முதல் சிகிச்சையாகும். ஆண்குறியில் உள்ள கட்டியை மட்டும் எடுத்துவிட்டு, ஆண்குறியைப் பாதுகாக்கலாம். அவர்கள் இயல்பாக வாழ்வார்கள்.
தற்காப்பு முறைகள்
பெண்களுக்கு எப்படி மார்பக புற்றுநோய்க்கு சுய பரிசோதனை செய்து கொள்ள சொல்கிறார்களோ அதுபோன்று ஒவ்வொரு ஆணும் தங்களை மூன்று மாதங்களுக்கு ஒருமுறையோ அல்லது ஆறு மாதத்திற்கு ஒருமுறையோ குளிக்கும் போது ஆண்குறியில் ஏதேனும் வித்தியாசம் இருக்கிறதா சிவந்து போய் இருக்கிறதா அல்லது ஏதாவது கட்டி இருக்கிறதா என்பதை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
ரோபாடிக் சிகிச்சை
பொதுவாக புற்றுநோய்க்கான சிகிச்சை முறையில், தற்போது நவீன மருத்துவ முறைகள் நிறையவே வந்துவிட்டன. அதில் ஒன்றுதான் ரோபாடிக் சிகிச்சை முறை. புற்றுநோய் சிகிச்சையில் இது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். அதேசமயம், நேரடியாக செய்யும் அறுவை சிகிச்சைக்கும் ரோபாடிக் அறுவை சிகிச்சை வேறுபாடுகள் எதுவும் கிடையாது. நேரடியான அறுவை சிகிச்சை செய்யும்போது சில உறுப்புகளில் கை நுழைவதே கடினமாக இருக்கும்.
மேலும் புற்று செல்கள் ஓரங்களில் எங்காவது ஒட்டியிருந்தாலும் அது எளிதில் தெரியாது. ஆனால், ரோபாடிக் அறுவை சிகிச்சையில் மிக மிகத் துல்லியமாக உறுப்புகளை விரிவுப்படுத்திப் பார்த்து, ஒரேஒரு புற்று செல் இருந்தாலும் அதனை முழுமையாக நீக்கிவிட முடியும். நேரடி அறுவைசிகிச்சையைக் காட்டிலும், ரோபாடிக் சிகிச்சை சற்று கூடுதலாக செலவு ஆகத்தான் செய்கிறது. இருந்தாலும், ரோபாடிக் அறுவை சிகிச்சை மிக மிக நிறைந்த பலனை கொடுக்கும்.
மேலும், ஓபன் அறுவை சிகிச்சை செய்யும்போது அருகில் இருக்கும் நரம்புகளும் பாதிக்கப்படலாம். ஆனால், ரோபாட்டிக் அறுவையில் அந்த வாய்ப்பு கிடையாது. மேலும், ரத்த இழப்பு குறைவு, வலியும் குறைவு. மேலும், உடனடியாக பழைய நிலைக்கு திரும்பிவிடவும் முடியும். முன்பெல்லாம் அறுவை சிகிச்சை செய்தால் அவர்கள் பழைய நிலைக்கு திரும்ப 12 -15 நாள்கள் வரை ஆகும். ஆனால், ரோபாடிக் அறுவையில் 3-4 நாள்களில் நார்மல் நிலைக்கு வந்துவிட முடியும். ஏனென்றால், இதில் பெரியளவில் வயிற்றை திறக்க வேண்டிய அவசியம் இல்லை. புற்று செல்கள் இருக்கும் இடத்தில் மட்டும் சிறிதாக துளையிட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்பதால் விரைவிலேயே நார்மல் நிலைக்கு திரும்பி விட முடியும்.
தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்