?சுமங்கலி பூஜை என்றால் என்ன? அதில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்பது அவசியமா?
– பி.கனகராஜ், மதுரை.
அவசியமே. பொதுவாக உலகநன்மை வேண்டி ஆலயம் போன்ற பொது இடங்களில் நடக்கும் சுவாசினி (சுமங்கலி) பூஜையில் எவரேனும் ஒருவர் கலந்து கொண்டால் போதுமானது. இயலாவிடில் அதற்குரிய பொருளுதவியை மட்டும் செய்துவிட்டு அமைதியாக இருந்துவிடலாம். ஆனால் நம் வீட்டிலேயே நடக்கும் சுமங்கலி பூஜை என்பது நமது பரம்பரையில் சுமங்கலிகளாக இறந்த பெண்களை நினைத்து செய்யப்படும் பூஜை ஆகும். இதில் நிச்சயமாக குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டு முன்னோர்களில் சுமங்கலிப் பெண்களாக இறந்தவர்களின் ஆசிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்தான். இதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
?அஷ்டமியில் ஆண்குழந்தை பிறந்தால் தாய்மாமனுக்கு ஆபத்தா?
– சு.ஆறுமுகம், கழுகுமலை.
நிச்சயமாக இல்லை. ரோகிணியில் பிறந்தாலோ, அஷ்டமியில் பிறந்தாலோ தாய்மாமனுக்கு ஆகாது என்று சொல்வதெல்லாம் முற்றிலும் மூடநம்பிக்கையே. பகவான் கிருஷ்ணர் ரோகிணி நட்சத்திரம், அஷ்டமி திதியில் பிறந்தவர் என்பதாலும் அவர் தனது தாய்மாமன் ஆகிய கம்சனை வதம் செய்ததாலும் இவ்வாறு சொல்கிறார்கள். ரோகிணி மற்றும் அஷ்டமியில் பிறப்பவர்கள் எல்லோரும் கிருஷ்ண பரமாத்மாவும் அல்ல, தாய்மாமன்கள் எல்லோரும் கம்சனைப்போன்று அரக்க குணம் படைத்தவர்களும் அல்ல என்பதைப் புரிந்துகொண்டாலே போதும், இதுபோன்ற சந்தேகங்கள் மனதில் தோன்றாது.
?கோயில்களில் இரண்டு, நான்கு சக்கர வாகனங்களின் டயர்களில் வைத்து ஏற்றிச்செல்லும் எலுமிச்சைப்பழங்களை, தெரியாமல் மிதித்துவிட்டால் நமக்கு ஏதாவது பாதிப்பு வருமா?
– பொன்விழி, அன்னூர்.
நிச்சயமாக பாதிப்பு எதுவும் நேராது. ஆலயத்தின் வாயிலாக இருப்பதால் அங்கே எந்தவிதமான தோஷமும் நம்மை அண்டாது. மேலும், டயர் ஏற்றி அந்த பழங்கள் நசுங்கி அதிலிருக்கும் சாறு வெளியேறும்போதே துஷ்டசக்திகளும் அங்கிருந்து ஓடிவிடுவதாக ஐதீகம். அதனால், அந்த நசுக்கப்பட்ட பழங்களை தெரியாமல் மிதித்துவிடுவதால் நிச்சயமாக பாதிப்பு எதுவும் வராது. கவலை வேண்டாம்.
?திருப்பதி சென்று பெருமாளை தரிசனம் செய்ய முடியாதவர்கள் காரைக்குடி அரியக்குடியில் உள்ள தென் திருப்பதி கோயிலில் தரிசனம் செய்யலாமா?
– எம்.மனோகரன்,ராமநாதபுரம்.
இறைவன் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் எனும்போது, பெருமாளை எங்கு வேண்டுமானாலும் தரிசனம் செய்யலாம். நம் வீட்டுப் பூஜையறையில் உள்ள பெருமாளின் படத்தை வைத்தும் தரிசனம் செய்யலாம். அந்தந்த இடத்திற்கு என்று ஒரு சிறப்பு சாந்நித்யம் உண்டு. திருப்பதி பெருமாளுக்கு வேண்டிக் கொண்டால் அந்த வேண்டுதலை திருப்பதி சென்றுதான் நிறைவேற்ற வேண்டுமே தவிர, மற்ற ஆலயங்களில் அந்த நேர்த்திக்கடனை செலுத்த இயலாது. எல்லா ஊரிலும் ஐயப்ப சுவாமி ஆலயம் என்பது இருந்தாலும், சபரிமலைக்கு சென்று ஐயனை தரிசிப்பதால் கிடைக்கும் உணர்வு என்பது வேறுதானே.. எல்லா ஊரிலும் பெருமாள் இருந்தாலும், திருப்பதி சென்று தரிசித்தால் கிடைக்கும் ஆனந்தம் என்பது வேறுதான். திருமலை என்பது ஏழுமலைகள் இணைந்த பகுதி அல்லவா.. அங்கே சென்று தரிசித்தால்தான் அதற்குரிய பலன் என்பதும் வந்து சேரும். ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு விதமான ஸ்தான பலம் என்பது உண்டு என்பதாலும், அது தனித்துவம் வாய்ந்தது என்பதாலும், எந்த ஒரு ஆலயத்தையும் மற்றொரு ஆலயத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க இயலாது. அந்தந்த ஆலயத்திற்கு இணை என்பது அந்தந்த ஆலயம்தானே தவிர மற்ற ஆலயங்கள் அல்ல.
?சிலர் யானையின் முடியில் மோதிரம் செய்து அணிந்துகொள்கிறார்களே, இது சரியா?
– ஜெ.மணிகண்டன், வேலூர்.
சரிதான். யானைமுடிக்கு தீயசக்திகளை விரட்டும் திறன் உண்டு என்பது நமது நம்பிக்கை. யானையை நாம் விநாயகப் பெருமானின் வடிவத்தில் காண்பதால், அதன் முடியில் மோதிரம் செய்து அணிந்துகொள்ளும்போது ஒரு பாதுகாப்பு வளையத்திற்குள் பத்திரமாக இருக்கிறோம் என்ற உணர்வு வந்துவிடுகிறது என்பதற்காக, யானை முடி மோதிரத்திற்கு முக்கியத்துவம் தந்து அதனை அணிந்துகொள்கிறார்கள்.
?வாரம் ஒருநாள் மௌனவிரதம் இருந்தால் நல்லது என்று கூறுவது?
– வண்ணை கணேசன், சென்னை.
உண்மைதான். வாரத்தில் ஒரு நாள் என்று சொல்வதைவிட செவ்வாய்க் கிழமைதோறும் மௌனவிரதம் இருப்பது நல்லது என்று குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். தர்ம சாஸ்திரத்தில் “மௌன அங்காரக விரதம்’’ என்று ஒரு விரதத்தினைப் பற்றி மிகவும் விசேஷமாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது செவ்வாய்க்கிழமை நாளன்று மௌனவிரதம் அனுஷ்டித்தால் ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம். செவ்வாயில் எந்த ஒரு விஷயத்தையும் அசைபோடாது. வெறுமனே வாயை மூடிக் கொண்டிருப்பதால் சிரமங்கள் ஏதும் நேராது. இன்னும் சற்று விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், செவ்வாய்க்கிழமை அன்று எந்த ஒரு தர்க்கத்திலும் ஈடுபடக்கூடாது, அவ்வாறு தர்க்கம் செய்வதாலோ, விவாதத்தில் ஈடுபடுவதாலோ தீமையே உண்டாகும்.
தற்காலத்தில்கூட தங்களது பேச்சுத்திறமையின் மூலம் வாடிக்கையாளரைக் கவரும் ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், நகைக்கடை போன்ற தொழில் செய்யும் பெரிய நிறுவனங்கள் செவ்வாய்க்கிழமை அன்று விடுமுறை விட்டுவிடுவதைக் காணலாம். செவ்வாய்க்கிழமையில் பொதுமக்களோடு பேசுவதன் மூலம் பரஸ்பரம் ஒரு சுமுக உறவு உண்டாகாது என்பது அவர்களின் அனுபவத்தில் கிடைத்த பாடமாக இருக்கலாம். அதனாலேயே திருமணத்திற்காக சம்பந்தம் பேசச் செல்பவர்கள்கூட செவ்வாய் மங்களவாரமாக இருந்தாலும், அதனைத் தவிர்க்கிறார்கள். செவ்வாயோ.. வெறும் வாயோ… என்ற பழமொழியை நம்மவர்கள் அனுபவித்துத்தான் சொல்லியிருக்கிறார்கள். அதனால் தர்மசாஸ்திர வாக்கியப்படி செவ்வாய்க்கிழமையில் மௌன விரதம் இருக்க முயற்சிப்போம். இயலாவிட்டால், வீண் விவாதத்தினையாவது தவிர்ப்போம். நன்மை காண்போம்.
?சாப்பிட்ட தட்டிலேயே கைகழுவக் கூடாது என்று சொல்வது ஏன்?
– த.சத்தியநாராயணன், அயன்புரம்.
சாப்பிட்ட தட்டிலேயே கைகழுவுவது என்பது அமங்கலமான செயல் ஆகும் என்றும், இது அன்னலட்சுமியை அவமதிப்பது போலாகும் என்றும் பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள். இவ்வாறு சாப்பிட்ட தட்டிலேயே கைகழுவுபவர்களுக்கு அவர்கள் சாப்பிட்ட உணவானது நற்பலனைத் தராது என்றும், ஆரோக்யக் கேடு உண்டாகும் என்றும் சாஸ்திரம் வலியுறுத்துகிறது. சாப்பிட்ட தட்டிலேயே கை கழுவுதல் என்பது உணவளித்தவர்களையும் அருகில் அமர்ந்து சாப்பிடுபவர்களையும் அவமதிக்கும் செயல் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.