?ஷோடஸ கணபதிகள் என்றால் என்ன?
– அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.
ஷோடஸம் என்பது 16 என்ற எண்ணிக்கையைச் சொல்கிறது. விநாயகப் பெருமானை பூஜிக்கும்போது ஒரு 16 நாமங்களைச் சொல்லி அர்ச்சிப்பது விசேஷமாகப் பார்க்கப்படுகிறது. ஷோடசைதாநி நாமாநி ய:படேத் ச்ருணுயாதபி, வித்யாரம்பே விவாஹேச ப்ரவேசே நிர்கமேததா, ஸங்க்ராமே ஸர்வ கார்யேஷூ விக்நஸ்தஸ்ய நஜாயதே என்று விநாயகப் பெருமானின் 16 நாமங் களின் பெருமையை ஸ்ம்ருதி சொல்கிறது. ஸூமுகர், ஏகதந்தர், கபிலர், கஜகர்ணகர், லம்போதரர், விகடர், விக்னராஜர், விநாயகர், தூமகேது, கணாத்யக்ஷர், பாலசந்த்ரர், கஜானனர், வக்ரதுண்டர், சூர்ப்பகர்ணர், ஹேரம்பர், ஸ்கந்தபூர்வஜர் ஆகிய 16 விதமான ரூபங்களை ஷோடஸ கணபதி என்று
அழைப்பார்கள்.
?மந்திரம் என்றால் என்ன?
– சு.பாலசுப்ரமணியன், ராமேஸ்வரம்.
இந்த உலகில் இறைசக்தி என்பது எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. ஆகாயத்தில் பரவியுள்ள அந்த சக்தியை ஒலி அலைகளாக உணர்ந்தனர் மகரிஷிகள். அப்படி உணர்ந்தவர்கள், தங்கள் கண்களை மூடித் தியானித்து மெய்மறந்து அந்த ஒலி அலைகளை ஒன்று திரட்டி உச்சரித்த எழுத்துக்களின் தொகுப்பே மந்திரம் என்பது. உதாரணத்திற்கு “ஓம்’’ என்பது பிரணவ மந்திரம். இதுவே பிராண சக்தி எனப்படுகிறது. அதேபோல சரவணபவ, நமசிவாய, நமோ நாராயணாய என்பது போல ஒரு சில வார்த்தைகள் தெய்வாம்சம் பெற்றதாக விளங்குகிறது. ஒலிஅலைகளின் மூலமாக தெய்வீக சக்தியை உணரும் வார்த்தைகளை மந்திரம் என்ற பெயரில் அழைக்கிறார்கள் என்று பொருள் கொள்ளலாம்.
?தன்னை உணர்தல் என்றால் என்ன?
– ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.
அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்கிறார் ஔவையார். இந்த உலகில் மனிதனாய்ப் பிறந்திருக்கிறோம் என்றாலே முன்ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்கிறோம் என்று பொருள். இதுபோக ஒவ்வொருவருக்கும் தங்கள் பிறவிக்கான அர்த்தம் என்பது புரிய வேண்டும். இறைவன் நமக்கு ஏன் இந்த மனிதப் பிறவியை அளித்திருக்கிறார், இதன் மூலமாக இந்த உலகிற்கு நாம் செய்ய வேண்டிய பணிகள் என்ன என்பதை உணர வேண்டும். நம்மால் இயன்றவரை மற்றவர்களுக்கு உதவிட வேண்டும். இயலாவிட்டால், மற்றவர்களை தொந்தரவு செய்யாமலாவது இருக்க வேண்டும். எல்லோரிடத்திலும் தெய்வீகசக்தி என்பது உண்டு. மனிதனுக்குள் இருக்கும் தெய்வீக சக்தியைத்தான் “பரமாத்மா’’ என்ற பெயரில் குறிப்பிடுகிறோம். இந்த தெய்வீக சக்திதான் அன்பாக வெளிப்படுகிறது. அதனால்தான் அன்பே சிவம் என்கிறார்கள். அன்பு, கனிவு, பணிவு இந்த மூன்றும் எவரிடத்தில் இருக்கிறதோ அவர்கள் தங்களுக்குள் இருக்கும் தெய்வீக சக்தியை உணர்கிறார்கள். இதைத்தான் தன்னை உணர்தல் என்கிறார்கள் பெரியோர்கள்.
?புதியதாகக் கட்டிய கோயில்களுக்குச் செல்வதால் முழுமையான பலனைப் பெற இயலுமா?
– டி.நரசிம்மராஜ், மதுரை.
நிச்சயமாகப் பெற இயலும். பழமை வாய்ந்த ஆலயங்களில் மட்டும்தான் தெய்வீக சாந்நித்யம் இருக்கும் என்று கருதக் கூடாது. இறைவன் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறான் என்பதே நிஜம். அதிலும் ஒரு ஆலயம் எழுப்புவது என்பது சாதாரணமான விஷயம் இல்லை. என்னதான் செல்வச்செழிப்பு உடையவராக இருந்தாலும் வெறும் பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு ஆலயத்தை எழுப்பிவிட இயலாது. இறைவனின் அருள் என்பது இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். தான் இந்த இடத்தில் குடியிருக்க வேண்டும் என்பதை அந்த தெய்வம்தான் தீர்மானிக்கும். அந்த தெய்வத்தின் ஆணைப்படியே ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஆலயத்தை எழுப்ப இயலும். அப்படி புதியதாக கட்டப்பட்டிருக்கும் ஆலயமாக இருந்தாலும், அந்த இடத்தில் முறையாக பூஜைகள் என்பது நடந்துகொண்டிருக்கும் பட்சத்தில், நிச்சயமாக தெய்வ சாந்நித்யம் என்பது நிறைந்திருக்கும். அந்த ஆலயங்களுக்குச் செல்வதால் முழுமையான பலன் என்பதும் சர்வ நிச்சயமாகக் கிடைக்கும்.
?அர்ச்சாவதாரம் என்றால் என்ன?
– ஏ.ஜெரால்டு, வக்கம்பட்டி.
அர்ச்ச என்றால் வழிபாடு என்று பொருள். அவதாரம் என்றால் அங்கே வருதல் என்று அர்த்தம். அதாவது பூஜை செய்வதின் மூலமாக தெய்வசக்தியை அங்கே வரவழைப்பது என்பதே அர்ச்சாவதாரம் என்ற வார்த்தையின் பொருள் ஆகும். ஆலயங்களில் உள்ள மூலவர் மற்றும் உற்சவர் சிலைகளை அர்ச்சாவதாரம் என்று புரிந்துகொள்ளலாம். இந்த வார்த்தையானது வைஷ்ணவ சம்பிரதாயத்தில் காணப்படுகிறது. பெருமாள் ஆனவர் பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி மற்றும் அர்ச்சை ஆகிய ஐந்து நிலைகளைக் கொண்டவராக உள்ளார் என்றும் இந்த கலியுகத்தில் திருமால் 108 திவ்யதேசங்களில் அர்ச்சாவதாரமாக எழுந்தருளி தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் என்றும் வைணவப் பெரியோர்கள் சொல்வார்கள். எளிதாகப் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், சிலை வடிவங்களில் தெய்வீக சாந்நித்யம் கொண்டிருக்கும் இறை மூர்த்தங்களே அர்ச்சாவதாரம் என்று பொருள் காணலாம்.
?தூக்கத்தில் வந்த நல்ல கனவுகள் நிஜமாவதற்கு எந்த வழிபாடு துணை நிற்கும்?
– ஆர்.விநாயகராமன், நெல்லை.
உங்கள் உழைப்பு ஒன்றுதான் துணைநிற்கும். கனவுகள் என்பது ஆழ்மனதில் உள்ள எண்ணங்களின் வெளிப்பாடு. உறக்கத்தில் இருந்து எழும்போதே அது கலைந்துவிடும். அந்த கனவுகள் மறந்தும் போய்விடும். அதையும் தாண்டி கனவுகள் நம் நினைவில் நிற்கிறது என்றால் அது நம் மனதில் உள்ள ஆசைகளின் வெளிப்பாடே ஆகும். அந்த எண்ணங்கள் நிறைவேற வேண்டும் என்றால் அதற்கு உங்களின் உண்மையான உழைப்புதான் துணையிருக்கும். அந்த உழைப்போடு உங்கள் இஷ்ட தெய்வத்தின் அருளும் இணையும்போது கனவு என்பது மெய்ப்படுகிறது.