திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால், செண்பகத்தோப்பு பகுதியில் உள்ள அருவிகள், ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால், வனவிலங்குகள் மலை உச்சியில் தஞ்சமடைந்துள்ளன. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சிமலைப் பகுதியில் வடகிழக்கு பருவமழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது. இதனால், மலை அடிவாரப் பகுதியில் உள்ள நீரோடைகள், அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த மாதம் வரை அருவிகள், நீரோடைகள் வறண்டு காணப்பட்டது.
தற்போது தண்ணீர் அதிகமாக வருவதால் விவசாயிகள் அதிக மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், அடிவார பகுதியில் முகாமிட்டிருந்த யானைக் கூட்டம், மான்கள், கரடிகள், சிறுத்தைகள் ஆகியவை தற்போது மலை உச்சிப்பகுதிக்கு சென்று இருப்பதாக செண்பகத் தோப்பு மலைவாழ் மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘வறட்சியான நேரத்தில் தண்ணீர் மற்றும் உணவிற்காக அடிவாரப் பகுதியில் முகாமிட்டிருந்த வனவிலங்குகள் தற்போது அதிகளவு தண்ணீரால் மலை உச்சிபகுதிக்கு சென்று விட்டன என தெரிவித்தனர்.