உடுமலை : மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக 3 ஆண்டுகளுக்கு பிறகு நல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.அமராவதி அணை நீர்மட்டமும் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகள் உள்ளன. 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீர் வசதியும் பெறுகின்றன. பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு முறையே ஆறு மற்றும் பிரதான கால்வாய் வழியே தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதே போல 60 அடி உயரம் கொண்ட திருமூர்த்தி அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பிஏபி திட்டத்தில் மொத்தம் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. உடுமலை நகராட்சி உள்பட ஏராளமான கிராமங்களுக்கு குடிநீர் விநியோகமும் செய்யப்படுகிறது. இந்த அணைக்கு பரம்பிக்குளம் அணையில் இருந்து சர்க்கார்பதி மின்நிலையம் வழியாக காண்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படுகிறது.
பாலாறு வழியாகவும் அணைக்கு நீர்வரத்து இருக்கும்.தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக் காலங்களில் பெய்யும் மழை, இந்த அணைகளுக்கு முக்கிய நீராதாரமாக உள்ளது. ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு பெய்யாததால் அமராவதி மற்றும் பிஏபி திட்ட அணைகள் நிரம்பவில்லை.
அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை காலமாகும். எனினும் ஒரு மாதமாக சரிவர மழை பெய்யாத நிலையில் விவசாயிகள் கவலையில் இருந்தனர். அணைகளின் நீர்மட்டமும் குறைந்து வந்தது.நல்லாறு பகுதி வறண்டு கிடந்ததால், விவசாயிகளின் பாசன தேவைக்காகவும், குடிநீருக்காகவும் காண்டூர் கால்வாயில் இருந்து நல்லாற்றில் சமீபத்தில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.வடகிழக்கு பருவமழை அவ்வப்போது பெய்து வந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை கொட்டியது. இதனால் அடர் வனப்பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது.
தளி அருகே பொன்னாலம்மன்சோலை பகுதியில் பெய்த கனமழையால், பேரிரைச்சலுடன் மலையில் உள்ள அருவியில் தண்ணீர் கொட்டியது. இந்த தண்ணீர் காண்டூர் கால்வாயின் குகை வழிப்பாதை வழியாக மத்தளம் பள்ளம் என்ற இடத்தில் சேர்ந்து, பாலாறு, நல்லாறு வழியாக ஆழியாற்றில் கலந்தது. இதன் காரணமாக நல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கடந்த ஆண்டுகளாக நல்லாறு வறண்டு கிடந்த நிலையில், இந்த வெள்ளப்பெருக்கால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இப்பகுதியில் விவசாயிகள் 500 ஏக்கரில் தென்னை பயிரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நல்லாறு, பாலாற்றில் கலந்த வெள்ளம், தீபாலபட்டி, ஜே.என்.பாளையம், வல்லக்குண்டாபுரம், ராவணாபுரம், தேவனூர்புதூர், அர்த்தநாரிபாளையம், காமநாயக்கன்பாளையம், நா.மு.சுங்கம் வழியாக ஆழியாறு ஆற்றில் கலக்கிறது.இந்த மழையின் காரணமாக அமராவதி அணையின் நீர்மட்டடும் உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 66 அடியாக இருந்தது. நேற்று நீர்மட்டம் 68.05 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 1459 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது.
6 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 41.54 அடியாக இருந்தது. அணைக்கு 547 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அதேநேரம் உடுமலை நகர பகுதியில் குறிப்பிட்ட அளவுக்கு மழை பதிவாகவில்லை.நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நல்லாற்றில் அதிகபட்சமாக 160 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. இடங்களில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): வால்பாறை 13, அப்பர் நீராறு 26, லோயர் நீராறு 10, சர்க்கார்பதி 100, மணக்கடவு 14, தூணக்கடவு 38, பெருவாரிபள்ளம் 42, நவமலை 40, அப்பர் ஆழியாறு 18, நெகமம் 16 மிமீ.