உடுமலை:மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கேரள மாநிலத்தில் பருவமழை கொட்டி வரும் நிலையில், தமிழகத்திலும் கோவை,திருப்பூர்,நீலகிரி மாவட்டங்களில் இன்றும்,நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.25 மற்றும் 26ம் தேதி கோவை,நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று முன்தினம் காலை முதல் சாரல் மழை பெய்யத் துவங்கியது. நீர் பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்றுமுன்தினம் மற்றும் நேற்று கோடை வெயில் சற்றே குறைந்து குளு,குளு காலநிலை நிலவியது. ஒரு சில இடங்களில் தூறலுடன் கூடிய சாரல் மழை பெய்தது. உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை மொத்தம் 60 அடி கொள்ளளவு கொண்டது. பிஏபி தொகுப்பு அணைகளில் இது கடைசி அணையாகும். இதன்மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.7 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நான்கு மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.மேலும், உடுமலை நகராட்சி மற்றும் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை உள்ளது.
பரம்பிக்குளம் அணையில் திறக்கப்படும் தண்ணீர் சர்க்கார்பதி மின்நிலையம் வழியாக, காண்டூர் கால்வாய் மூலம் அணைக்கு கொண்டு வந்து சேமிக்கப்படுகிறது. இதுவே, அணைக்கு வரும் பிரதான நீர்வரத்து பகுதியாகும். இதுதவிர, திருமூர்த்திமலையில் பெய்யும் மழை காரணமாக பஞ்சலிங்க அருவி வழியாக பாலாற்றில் கலந்தும் அணைக்கு தண்ணீர் வருகிறது. தென்மேற்கு பருவமழைக்காலங்களில் பாலாற்று வழியே நீர்வரத்து அதிகளவில் இருக்கும். இதற்கிடையில், கோடை மழை காரணமாக பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்தது.
பஞ்சலிங்க அருவி வழியாக அணைக்கு தண்ணீர் அதிகளவில் வந்தது. இதையடுத்து, நீர்மட்டம் மளமளவென உயர்ந்தது. திருமூர்த்தி அணையில் நேற்று நீர்மட்டம் 56.43 அடியாக உயர்ந்தது. காண்டூர் கால்வாய் மூலம் 836 கனஅடி நீர் வருகிறது. பாசனத்துக்கு 246 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த ஆண்டு இதே நாளில் நீர்மட்டம் வெறும் 29.75 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு கோடை மழையின் காரணமாக நீர்மட்டம் கணிசமான அளவு உயர்ந்துள்ளதால் பிஏபி பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணை விரைவில் நிரம்பி உபரிநீர் திறக்கப்படலாம் என தெரிவித்தனர்.
அமராவதி அணைப்பகுதியில் 1 மி.மீ மழையும்,திருமூர்த்தி அணைப்பகுதியில் 8மி.மீயும்,ஆழியார் அணைப்பகுதியில் 12 மி.மீயும், பரம்பிக்குளம் அணைப்பகுதியில் 35 மி.மீயும், சோலையார் அணைப்பகுதியில் 61 மி.மீயும் மழை பதிவாகி உள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் பருவ மழை தீவிரம் அடைய துவங்கியதால் அணைகளுக்கான நீர்வரத்து அதிகரிக்க துவங்கி உள்ளது.அமராவதிக்கு நேற்றைய நிலவரப்படி 127 கனஅடி நீர்வரத்தும், திருமூர்த்திக்கு 836கனஅடியும்,ஆழியாருக்கு 171 கனஅடியும்,பரம்பிக்குளத்திற்கு 452 கனஅடியும்,சோலையாறு அணைக்கு 170கனஅடியும் என அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்து வருகிறது.திருமூர்த்தி மலை மீது அமைந்துள்ள பஞ்சலிங்க அருவியில் நேற்று தண்ணீர் சீராக கொட்டிய போதும், கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வருவதாலும்,திடீர் மழை வெள்ளத்திற்கு வாய்ப்புள்ளதாக கூறி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடைவிதித்தனர்.
கோடை விடுமுறை முடியும் தருவாயில் உள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து திருமூர்த்தி மலைக்கு சுற்றுலா வந்திருந்த சுற்றுலா பயணிகள் பஞ்சலிங்க அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அமணலிங்கேஸ்வரர் கோயிலை மழை வெள்ளம் சூழும் அபாயம் இருந்த போதும், நேற்று கோயில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மழை வெள்ளம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை,இந்து அறநிலையத்துறை மற்றும் வனத்துறையினர் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.